PUBLISHED ON : ஆக 20, 2023

படித்தது
காஞ்சிபுரத்திலிருந்து அந்துமணி வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் இது:
'இங்க் பேனா இருக்கா?' என்று, கடைக்காரரிடம் கேட்டேன்.
ஏற இறங்க பார்த்து, 'ஒண்ணே ஒண்ணு இருக்கு...' என்று, அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார், கடைக்காரர்.
'சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க!'
'இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்!'
'வேண்டாம்...' என்று சொல்லி, பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் உள்ள கடைக்கு போனேன்.
அந்த கடையில், ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது. வாங்கிப் பார்த்தால், அதன் தயாரிப்பு தேதி, ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது.
சென்னையில் பிரபல புத்தக கடையான, 'ஹிக்கின் பாதம்ஸ்' போய், இரண்டு பேனாவும், 'பிரில்' இங்க் பாட்டில் ஒன்றும் வாங்கினேன். 'பிரில்' இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப, 25 ரூபாய்.
வீட்டுக்கு வந்து, வெள்ளை தாளில் இரண்டு வரி எழுதி பார்த்தேன். என் கையெழுத்து எனக்கே புதிதாக தெரிந்தது.
நிஜமாகவே, இங்க் பேனாவில் எழுதுவது, தனி சுகம் தான். சின்ன வயதில், பள்ளியில் இங்க் பேனா பயன்படுத்தியது நினைவுக்கு வந்தது.
அக்காலத்தில் முக்கால்வாசி பேனாக்களுக்கு, 'பிராண்ட்' எல்லாம் கிடையாது. ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு, இரண்டு தங்க நிற நிப் கிடைக்கும். கேம்லின் பேனா, ஒன்பது ரூபாய்க்கு கிடைத்தது. பேனா நடுவில், கண்ணாடி ஜன்னல் இருக்கும்; அதில், இங்க்கின் அளவு தெரியும்.
கடைகளில் தடிமனான கட்டை பேனா கிடைக்கும். சில மாடல் பேனாக்களில் அபரிமிதமாக ஊறும் இங்க்கை கட்டுப்படுத்த, நிப்பின் அடி பகுதியில், டியூப் ஒன்று இருக்கும்.
தேர்வு எழுதுவதற்கு என, ராசியான பேனாக்களும் உண்டு. கருப்பு கலர் இந்தியன் இங்க்கில், கோடு போட்ட பேப்பரில் எழுதப்பட்ட ஆங்கில வார்த்தைகள், பார்த்தவுடனே கண்ணில் ஒற்றிக்கொள்ள செய்யும். ரொம்ப நேரம் எழுதினால், கட்டை விரல் ஜாயின்ட் வலிக்கும்.
எங்க வகுப்பில், சேட்டு வீட்டு பசங்கதான், 'ஹீரோ' பேனா உபயோகப்படுத்துவர். பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். பாட்டிலில் உள்ள இங்க்கை உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்கு பயந்தே, தேர்வுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம்.
பேனாவிற்கு இங்க் போடுவதற்கு, கண் மருந்து போடுவது போல ஒரு பில்லர் தேவை. அதன் பெயர், இங்க் பில்லர்.
கண்ணாடி இங்க் பில்லர், பிளாஸ்டிக்காக மாறி, இப்போது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல், 'கேட்ரிஜ்' எல்லாம் வந்து விட்டது.
படிக்கும் காலத்தில், 'பிரில்' இங்க் தான் பிரபலம். செல்பார்க் கருப்பு - நீலம் கலந்து, 'புளு பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதேபோல், 'டர்காய்ஸ் புளு' எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால், மார்க் போட மாட்டார்கள் என்று தேர்வுக்கு உபயோகப்படுத்த மாட்டேன்.
இங்க் கலருக்கெல்லாம், ராயல் புளு, பர்மனென்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளு என்று அழகழகான பெயர் இருக்கும். ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துவோர், மற்ற பிராண்டை உபயோகப்படுத்த மாட்டார்கள்.
புது பேனா வாங்கியவுடன், கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணெய் வாசனை வரும்.
இங்க் போட்டவுடன் சரியாக எழுதாது, கொஞ்சம் மக்கர் பண்ணும். இங்க் உதறி, நிப்பை தடவிக் கொடுத்து, தாஜா செய்து, நம் வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு, அது சமர்த்தாக நாம் சொல்வதை எல்லாம் கேட்கும்.
ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால், அதை யாராவது இரவல் கேட்டால், கொடுக்க மனம் வராது. மற்றவர்கள், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி, எழுத்து பட்டை அடிக்குமோ என்று, மனசு படபடக்கும்.
பேனாவை சுத்தம் செய்வது ஒரு கலை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிச்சயம் பேனாவை சர்வீஸ் செய்வது வழக்கம்.
மிதமான வெந்நீரில் ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டி துணியால் அதை துடைக்க வேண்டும். காய்ந்த பின், இங்க்கை நிரப்பி வழிக்கு கொண்டு வரவேண்டும். கையில் ரத்தம் வந்தால், உடனே வாயில் வைப்பதைபோல், விரலில் இங்க் வழிந்தால், தலையில் தேய்த்துக் கொள்வோம்.
எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை பையிலும் கறை படியாமல் இருக்காது. சில சமயம், கழுத்துப்பட்டை பகுதி மரையில், நுால் சுற்றி எழுதுவோம்.
மரை திறக்க முடியாமல் போனால், பற்களால் கடித்து திறப்போம். வாயெல்லாம் நீல கலரில், கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர்., போல காட்சியளித்திருக்கிறேன்.
பேனாவை, 'ரிப்பேர்' செய்ய, பென்சில் பாக்சில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும். சாக்பீஸ், சின்ன துணி மற்றும் பிளேடு.
பேனா எழுதவில்லை என்றால், சாக்பீசை அதன் மூக்கில் வைத்தால், அட்டை போல் இங்க்கை உறிஞ்சும். அதேபோல், பேப்பரில் இங்க் சிந்தி விட்டாலும் அதே சாக்பீஸ் தான்.
நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்து விட்டால், ப்ளேடால் நடுவில் கீறி அதை எடுத்து விட்டால், உயிர் பெற்று எழுதும்.
பள்ளிக்கூடத்தில், நம்மை விட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்கு போகும்போது புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டையின் பின்புறத்தில், இங்க் தெளித்து, பழிக்கு பழி தீர்த்துக் கொள்வோம்.
கல்லுாரிக்கு போன பிறகு, இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல் என்று, பால்பாயின்ட் பேனாவுக்கு மாறினோம்.
ரீபிள் தீருவதற்குள், பேனா தொலைந்து விடும் அல்லது உடைந்து விடும்.
இன்று, இங்க் பேனா, விலை உயர்ந்த ஒரு நினைவுப் பரிசாகவும், ஷோகேசில் அலங்காரப் பொருளாகவும் மாறி விட்டது.
என் அப்பாவிற்கு பரிசாக வந்த ஒரு இங்க் பேனாவை, என்னிடம் கொடுத்தார். கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயின்டை சுரண்டி பார்த்ததில், பித்தளை பளபளத்தது.
வரலாற்று சிறப்புமிக்க, இங்க் பேனாவை இப்போது நாம் தொலைத்து விட்டோம் என்பதுதான் நிஜம்.
இதை படித்ததும், உங்களுக்கு கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் பற்றி ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
- இப்படி எழுதியுள்ளார்.
கடிதத்தத்தை படித்து முடித்ததும், என் பள்ளி நாட்களும், ஆசிரியரிடமிருந்து எனக்கு பரிசாக கிடைத்த இங்க் பேனாவும் நினைவுக்கு வந்தது. உங்களுக்கு...
