PUBLISHED ON : அக் 01, 2023

பா - கே
'மணி... வாப்பா, புதுச்சேரி வரைக்கும் காரிலே போயிட்டு வந்துடலாம்...' என்றார், லென்ஸ் மாமா.
'என்ன விஷயம்?' என்றேன்.
'சும்மா தான், கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செஞ்சுட்டு வரலாம்...' என்று, வற்புறுத்தினார்.
புதுச்சேரியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவராக இருக்கும் நண்பர் ஒருவர், 'புதுச்சேரி வந்தால், கண்டிப்பாக வீட்டுக்கு வரணும்...' என்று கூறியது, நினைவுக்கு வந்தது.
சமீபத்தில் தான் அந்த மருத்துவர், ஜெர்மனி நாட்டில் நடந்த, 'கான்பிரன்ஸ்' ஒன்றுக்கு சென்று திரும்பியிருந்தார்.
அவரையும் சந்தித்து வரலாமே என்று, லென்ஸ் மாமாவுடன் கிளம்பினேன். காரை, மாமா ஓட்ட, அவர் அருகில் அமர்ந்து, காலை விடியல் காட்சியை ரசித்தபடி சென்றேன்.
புதுச்சேரி அருகில், முந்திரி காடுகளின் நடுவே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருந்தது, டாக்டர் நண்பரின் வீடு.
புற்றுநோய் மருத்துவரான அவர், திருமணத்தில் நாட்டமில்லை என்று, ஒண்டிக்கட்டையாக காலம் கழித்து வந்தார்.
வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அமர வைத்தார்.
ஒண்டிக்கட்டை வீடு போல் இல்லாமல், படு சுத்தமாக இருந்தது. சாம்பிராணி ஊதுபத்தியின் மணம், மூக்கை துளைத்தது.
'காலையில் எதுவும் சாப்பிடாமல் வந்து விட்டேன். பசிக்கிறது...' என்றார், லென்ஸ் மாமா.
டைனிங் டேபிளின் மேல், 'ஹாட் - பேக்'கில் சுடச்சுட ஆவி பறக்கும் இட்லி, சின்ன வெங்காயம் போட்ட சாம்பார், கொத்தமல்லி சட்னி, பூண்டு சேர்த்த இட்லி மிளகாய் பொடி மற்றும் ஒரு பவுல் நிறைய பழ வகைகள் இருந்தன.
'பிளாஸ்கில், பில்டர் காபியும் உள்ளது. போய் கை, கால் சுத்தப்படுத்திக்கிட்டு வாருங்கள்...' என்றார்.
சாப்பிட அமர்ந்த ஐந்தே நிமிடத்தில் டிபனை காலி செய்தோம். தெம்பு வர, வீட்டிற்கு வெளியே, மர நிழலில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.
'ஜெர்மனி போய் வந்தீர்களே... ஏதாவது விசேஷம் உண்டா?' என்று விசாரிக்க, ஒரு ஆச்சரியமான தகவலை தந்தார், நண்பர்.
அது:
ஜெர்மனியின் தெற்கு பகுதியில், 'விசில் பர்க்'ன்னு ஒரு கிராமம். மக்கள் தொகையே, 3,300 தான்.
அங்கு வசிப்பவர்களில் பலர், புற்றுநோய் வந்து கஷ்டப்பட்டாங்க. புற்றுநோய் எல்லா ஊர்லேயும் இருந்தாலும், அந்த கிராமத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அதுக்கு காரணம் தெரியாமல், தலையை பிய்த்துக் கொண்டனர், விஞ்ஞானிகள். 1920 மற்றும் 1929ம் ஆண்டிலேயே, இதைப் பற்றி மூன்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணினாங்க.
அந்த கிராமத்தில் மட்டும், புற்றுநோய் மரணங்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணம், பூமி சம்பந்தப்பட்ட கோளாறாக தான் இருக்கணும்ன்னு, முடிவுக்கு வந்தாங்க.
பூமிக்கு அடியிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத தீய ஒளி கதிர்வீச்சு தான், புற்று நோயை ஏற்படுத்துதுன்னு, 'வின்சர் மெல்சர்'ங்கிற ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்தது.
உலகப் புகழ்பெற்ற புவியியல் விஞ்ஞானிகள் சிலர், அந்த கிராமத்துக்கு சென்று, பூமிக்கு அடியில் இருக்கிற நீரோட்ட பாதைகளை சோதனை பண்ணினாங்க.
பூமிக்கு அடியில், 50 மீட்டர் ஆழத்துல அந்த நீரோட்ட பாதைகள் அமைந்திருந்தன.
கிராமத்து வரை படத்தில், அந்த ஊர்ல இருக்கிற வீடுகளையும், பூமிக்கு அடியில் இருக்கிற நீர் பாதைகளையும் கண்டுபிடிச்சாங்க. அந்த கிராமத்து ஜனங்கள் குழாய் மூலமா தண்ணீர் எடுக்கிற இடத்தையும் குறிச்சுக்கிட்டாங்க. அந்த குழாய் மூலமா வர்ற தண்ணீரை தான் அவங்க உபயோகப்படுத்திக்கிட்டு வருவதையும் புரிஞ்சுக்கிட்டாங்க.
பூமிக்கு அடியில் குடிநீர் குழாய் போகிற பாதைக்கு மேல வீடுகள் அமைஞ்சிருக்கிறதையும் பார்த்தாங்க. புற்றுநோயால் மரணமடைந்த நோயாளிகள் படுத்திருந்த படுக்கைகளுக்கு நேர் கீழே, பூமிக்கு அடியில் தீய விளைவை தரக்கூடிய கதிரியக்கம் இருக்கறதை கண்டுபிடிச்சாங்க.
இந்த சோதனை பற்றிய விபரங்களையெல்லாம் ஒரு புத்தகமா எழுதி, 1932ல் வெளியிட்டு இருக்காங்க. அதுக்கு அப்புறம் தான், மருத்துவ விஞ்ஞான துறையில், பூமிக்கு அடியில் உள்ள தீய கதிரியக்கம், சில நோய்களை உண்டாக்குதுங்கறதைப் பற்றின ஆராய்ச்சிகள் ஆரம்பமாச்சு. அதுக்கு, 'ஜியோ பாத்தாலஜி'ன்னு பேர் வச்சாங்க.
'பூமிக்கு அடியில் இருக்கிற நீர் குழாய்கள், நீர்ப் பாதைகள், நீரோட்டங்கள் இதில் எல்லாம் தீய கதிரியக்கங்களின் தாக்கம் இருக்கு. இதுக்கும், பூமி மேல அதுக்கு நேரா இருக்கக் கூடிய மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுது. அதனால, அவங்களோட ஆரோக்கியம் கெட்டு, நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்...' என, நிரூபித்தனர்.
இப்பவும் இது பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகிட்டு தான் இருக்கு. இதுக்குன்னு சில விசேஷமான கருவியெல்லாம் தயார் பண்ணியிருக்காங்க. பூமிக்கு அடியில் இருக்கிற காந்த சக்தியின் ஏற்ற, இறக்கங்களை அந்தக் கருவி அளந்து சொல்லும்.
பூமிக்கு அடியில் தீய கதிரியக்கம், காந்த அதிர்வு அலைகள், மின்சார ஓட்டம் என, இந்த மூணும் ஒண்ணோட ஒண்ணு மோதாத இடங்களில், நோயாளிகளின் கட்டில்களை போட்டாங்க. அதுக்கப்புறம் அவங்கள்லாம் சீக்கிரம் குணம் அடைஞ்சாங்களாம்.
மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இதை நிரூபிச்சுக் காட்டியிருக்காங்க, புவியியல் விஞ்ஞானிகள்.
இவ்வாறு கூறி முடித்தார்.
நண்பர் கூறியதை பொறுமையாக கேட்ட, லென்ஸ் மாமா, 'நம் ஊர்ல வீடு கட்டறதுக்கு மனையடி சாஸ்திரம் எல்லாம் பார்க்கிறாங்கள்ல, அதுக்கெல்லாம் ஏதாவது அடிப்படை காரணம் இருக்காங்கிறதை பற்றி ஆராய்ச்சி பண்ணி பார்க்கணும் பா...' என்றார்.
ப
ஒரு கழுதையை புடிச்சு, அதன் வாலில், ஒரு தகர டின்னை கட்டிக்கிட்டிருந்தார், ஒருத்தர்; அதை ஓட விட்டு வேடிக்கை பார்க்கறதுக்காக.
அந்த வழியா வந்த பெரியவர், இதைப் பார்த்துட்டு, 'இது மாதிரி இப்ப நீ பண்ணினா, அடுத்த ஜென்மத்துல நீ, கழுதையா பொறப்பே. இந்த கழுதை, மனுஷனா பொறந்து, உன் வாலில் இதே மாதிரி தகர டின்னை கட்டும்...' என்று, அவருக்கு புத்தி சொன்னார்.
'அப்படியில்ல பெரியவரே... எனக்கு, போன ஜென்மம் ஞாபகம் வந்திடுச்சு. அப்போ, நான் கழுதையா இருந்தேன். இந்த கழுதை, மனுஷனா இருந்து, என் வாலில் தகர டின்னை கட்டிச்சு. இப்ப, பழிக்கு பழி வாங்கறேன்...' என்றார், அந்த ஆள்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
