PUBLISHED ON : அக் 01, 2023

சு. நாதன், சிவகாசி: 'வாய்மை' என்று சொல்கின்றனரே... அது என்ன?
யாருக்கும் எத்தீங்கும் அணு அளவும் செய்யாது, உலகிற்கு நன்மைகள் வழங்கும் சொல்லையே, 'வாய்மை' என்கின்றனர்!
* ஆர். இளங்கோ, நெல்லை: வெற்றிக்குத் தேவையான, மூன்று முக்கிய குணங்களை கூறுங்களேன்...
முதல் தேவை பொறுமை; இரண்டாவது, விடாமுயற்சி; மூன்றாவது உழைப்பு. இம்மூன்றுடன் சேர்ந்து, முயற்சியும், பயிற்சியும் இருந்தால், சாதாரண மனிதர்கள் கூட, சாதனையாளர்களாக மாற முடியும்!
சு. மலர், திருச்சி: புரட்டாசி மாதம் வந்து விட்டதே, மணி பாடு திண்டாட்டமா... லென்ஸ் மாமா, பேஜார் பண்ணுவாரே!
லென்ஸ் மாமாவுக்கு, மாதம், கிழமை என்றெல்லாம் கிடையாது. 365 நாளும், உ.பா., தான்... பேஜார் தான்!
மு. சிவா, மதுரை: துன்பத்தை விட துயரமானது எது?
துன்பங்கள் வந்து விடுமோ என்ற எண்ணங்கள் இருக்கிறதே, அது மட்டுமே துன்பத்தை விட துயரமானது!
ரா. ராஜ்மோகன், விழுப்புரம்: 'தமிழகத்தில், இனி, ஒரே கொடி தான்; அது, நாம் தமிழர் கட்சியின் கொடி மட்டுமே...' என்கிறாரே, சீமான்...
அவரது வீட்டையே தமிழ்நாடு என்று நினைத்து விட்டார் போலும்; வரும் தேர்தல் முடிவுக்கு பின், அவர் வீட்டில் மட்டுமே, நாம் தமிழர் கட்சி கொடி பறக்கும்!
ஏ. பாத்திமா பீவி, வாணியம்பாடி: அக்கிரமங்கள் நடக்கும்போது, நீதிமன்றங்கள், தாமாக விசாரணையைக் கையில் எடுப்பது நல்லது தானே... அதற்கு ஏன், சிலர் தடை கேட்கின்றனர்?
தான் சிக்கிக் கொண்டு, தண்டனை பெற்று விடுவோமோ என்ற பயத்தால், தடை கேட்கின்றனர்!
* க. கல்பனா, சென்னை: 'தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் பிரதமரானால், 100 நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக மாற்றி விடுவார்...' என, தமிழக சபாநாயகர் அப்பாவு கூறுகிறாரே...
'இண்டியா' கூட்டணியில், ஹிந்தி தெரிந்த, 90 சதவீதம் பேர், பிரதமர் கனவிலும், துணை பிரதமர் கனவிலும் உள்ளனரே... இதில், ஹிந்தி தெரியாத, ஸ்டாலின் எப்படி பிரதமர் ஆவார்? அப்பாவு பேச்சுகளை எல்லாம், 'சீரியசாக' எடுத்துக் கொள்ளாதீர்!
