PUBLISHED ON : அக் 01, 2023

''ஏங்க, மணி, 4:00 ஆச்சு. மசமசன்னு இருக்காம எழுந்து, தோப்புக்காரர் வீட்டுக்கு போய், வேலைக்கான கூலி கேட்டு வாங்குங்க. அப்படியே பள்ளிக்கூடம் போய் பாப்பாவை கூட்டிகிட்டு நிலக்கோட்டை போகணும்ன்னு சொன்னீங்களே...'' என்றாள், செல்வத்தின் மனைவி, வெள்ளையம்மாள்.
நான்கு நாளாக, தோப்புக்காரரின் மல்லிகை தோட்டத்தில் கவாத்து செய்யும் வேலை. மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், அரிசிக் கஞ்சியில், தயிர் கலந்து, எலுமிச்சை ஊறுகாயை தொட்டு குடித்தான். கயிற்றுக் கட்டிலில் படுத்து, சற்று கண்ணயர்ந்தான், செல்வம்.
வெள்ளையம்மாவின் பேச்சுக்கு, அசட்டையாய் புரண்டு படுத்தவன், பள்ளிக்கூடம், பாப்பா என்ற வார்த்தைகள் நினைவுக்கு வர, சட்டென எழுந்தான்.
மொபைல் போனின் பொத்தானை அழுத்தி நேரம் பார்த்ததும், ''அச்சச்சோ... மணி, 4:00க்கு மேலாகிடுச்சே...'' என்றவாறு, சைக்கிளை எடுத்து, கிளம்பினான்.
'ஹே ஹே' என்ற இறைச்சலோடு, பள்ளிக் குழந்தைகள், தங்களுக்குள் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், அரசு பள்ளியிலிருந்து வெளியே வந்தனர்.
செல்வத்தை பார்த்ததும், மகள் மகாலட்சுமி ஓடி வந்தாள்.
சைக்கிள் கேரியரில், புத்தகப் பையை வைத்துவிட்டு, பார் கம்பியில் லாவகமாக அமர்ந்து, ''போலாம்பா... நிலைக்கோட்டைக்குத்தானே போறோம்,'' என்றாள்.
''ஆமாம், அங்க தான். போற வழியில, தோப்புக்காரர் வீட்டுல, கூலி வாங்கணும். அப்புறம், இன்னிக்கு என்ன படிச்சீங்க,'' என்றான்.
மலர்ச்சியோடு, காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை மழலை மொழியில் சொன்னாள்.
தோப்புக்காரர் வீடு வந்ததும், சைக்கிளை நிறுத்தி, மகாலட்சுமியை கீழிறக்கி, ''நீ இங்கேயே இரு பாப்பா. நான் போயிட்டு உடனே வந்துடறேன்,'' என்றான்.
''இல்லைப்பா, நானும் உன் கூடவே வர்றேன்,'' என, செல்வத்தின் கைகளை பிடித்தாள்.
திறந்திருந்த பெரிய வீட்டின் வாசல் முன் நின்று, ''ஐயா...'' என்று அழைத்தான்.
எட்டிப்பார்த்த தோப்புக்காரரின் மனைவி, ''ஓ... நீயா, என்னா வேணும்?'' என்றாள்.
''ஐயாவை பார்த்து பணம் வாங்கிக்கிட்டு போகலாம்ன்னு வந்தேம்மா. நாலு நாளா நம் தோட்டத்துல மல்லிகை செடிகளுக்கு, கவாத்து அடிச்சேன். அதான்...'' என்று, இழுத்தான்.
''பார்த்தேன் பார்த்தேன், இன்னும் வேலை முடியலை. அதுக்குள்ள காசுக்கு வந்து நிக்கிற, இன்னிக்கு கவாத்து செஞ்ச மல்லிகை துாரு, பூத்து காசாக, மூணு மாசமாகும். ஆனா, உனக்கு காசு இன்னிக்கே வேணும்.
''கூலிக்காரன் பொழப்பு, என்னிக்கும் கொண்டாட்டம் தான். எங்க பொழப்பு தான் திண்டாட்டம்,'' என்று, கடுகடுத்தாள்.
தோப்புக்காரர் மனைவியின் பேச்சும், பார்வையும், மகாலட்சுமிக்கு பயம் காட்ட, செல்வத்தின் கால்களுக்கு பின் நகர்ந்து கொண்டாள்.
''பணம் கொண்டு வர மறந்துட்டேன். சாயங்காலம் வீட்டிற்கு வந்து வாங்கிக்கன்னு, ஐயா தான் சொன்னாரும்மா,'' என்று, பம்மினான்.
எப்படியாவது பணம் கிடைத்தால் போதும், மகாலட்சுமி ஆசைப்பட்டது போல், நிலக்கோட்டை கூட்டிக்கிட்டு போயிடலாம் என்று, மனது தவித்தது.
''உங்கய்யாவுக்கு, வீட்டுல நாலஞ்சு பணங்காய்ச்சி மரம் வளர்க்குறதா நினைப்பு. அவசரமா மதுரைக்கு போயிட்டாரு. வந்ததும் சொல்றேன்,'' என்றபடி, உள்ளே போய் விட்டாள்.
மகாலட்சுமியின் முகம் சற்று வாடி இருந்தது. அவளை துாக்கி சைக்கிளின் முன் பக்கம் அமர வைத்தான்.
''என்ன, பயந்துட்டியா பாப்பா... நாம இப்ப வீட்டுக்கு போவோம். ஐயா வந்த பிறகு, காசு வாங்கிக்கிட்டு, நிலக்கோட்டை போவோம். காசு இருந்தால்தானே, நீ கேட்டதெல்லாம் வாங்க முடியும்.
''அப்புறம், அந்த பாட்டி பேசுனது எதையும் அம்மாக்கிட்ட சொல்லிடாத. பாட்டி பேசுனது, உனக்கு கஷ்டமா இருந்தா, கண்ணை மூடி, கடவுளிடம், 'நான் பெரியாளாகி, தோட்டம் வாங்கி, நிறைய பேரை வச்சு வேலை வாங்கும்போது, எந்த வேலைக்காரரையும், அவுங்க மனசு நோகுற மாதிரி பேச மாட்டேன்'னு சொல்லிடு,'' என்று சொல்லி, செல்வம் சிரிக்க, மகாலட்சுமியும் மெலிதாக புன்னகைத்தாள்.
வாசலை பெருக்கி கொண்டிருந்த வெள்ளையம்மாளுக்கு, செல்வத்தின் முகமும், மகாலட்சுமியின் முகமும் அனைத்தையும் காட்டிக் கொடுத்து விட்டது.
''உன்கிட்ட என்ன சொன்னேன், முதல்ல தோப்புக்காரர் வீட்டுக்கு போயிட்டு, அப்புறம் தானே பள்ளிக்கூடம் போகச் சொன்னேன். உன்னைக் கட்டிக்கிட்டு வந்த நாளுல இருந்து ஒரு நாளாச்சும் என் பேச்சைக் கேட்டிருக்கியா, எத செய்தாலும் ஏட்டிக்கு போட்டி...
''நீ ஒண்ணும் இல்லாத, வெறும் பய, சொந்த அண்ணன்கிட்ட இருந்து, தனக்கு சேர வேண்டிய சொத்த வாங்க தைரியமில்லாத கூலிக்கார பய. நீ போயி யாருகிட்ட வேணும்ன்னாலும் அவமானப்படு, அசிங்கப்படு. எம் புள்ளைய எதுக்கு அங்கெல்லாம் கூட்டிகிட்டு போற...
''நாலு நாளா நானும், 'பிள்ளைக்கு பிறந்தநாள் வருது, வேலைக்கு போற எடத்துல, முன்னமே சொல்லி, காசு வாங்கிக்கிட்டு வா...'ன்னு கத்திக்கிட்டு இருக்கேன்; என் பேச்சு எங்க எடுபடுது,'' என, பொரிந்து தள்ளினாள், வெள்ளையம்மாள்.
வெள்ளையம்மாளின் வசவுகளுக்கு செவி சாய்க்காமல், வேப்ப மர நிழலில் கட்டிலை இழுத்து போட்டு குப்புறப் படுத்தான், செல்வம்.
மகாலட்சிமியிடம், ''என் வயித்துல வந்து பொறந்ததுக்கு, இன்னும் என்னென்ன அனுபவிக்க போறியோ தெரியலையே... உன் பிறந்தநாள் அன்னிக்கு, புதுத்துணி வாங்கிக் கொடுக்க கூட வக்கில்லாதவனா போயிட்டானே உங்கப்பன்,'' என்றாள்.
''அப்பா பாவம்மா, தோப்புக்கார தாத்தா மட்டும் வீட்ல இருந்து காசு கொடுத்திருந்தாருன்னா, துணி மணி, சாக்லேட் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்திருப்போம்,'' என்றாள், மகாலட்சுமி.
''இம்புட்டு அறிவா பேசுற எம் புள்ளைக்கு, கொஞ்சம் கூட அறிவே இல்லாத அப்பனை குடுத்திருக்கியே சாமி,'' என்று, அரற்றினாள்.
மகாலட்சுமியின் மனம் என்ன பாடுபடுமோ என நினைக்க, மனசு கனத்தது. செல்வத்துக்கு, பழைய நினைவுகள், அவனை ஆட்கொண்டது. மகாலட்சுமி பிறந்த போது, செல்வத்தின் அம்மா செல்லத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
'டேய் செல்வம், உங்க பரம்பரையில், 50 வருஷம் கழிச்சு பிறந்த மகாலட்சுமிடா, உன் பிள்ளை. உங்க கொள்ளுத் தாத்தா காலத்துக்கு பிறகு, பிறந்த முதல் பெண் குழந்தைடா. உன்னை எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு போவாடா. நீயும் இவளை, சாமியை பார்த்துக்குற மாதிரி தான் பார்த்துக்கணும்...' என்று சொல்லி, மகிழ்ந்தாள்.
செல்லத்தாயின் பேச்சு, சத்தமாகத் தான் இருக்கும். ஆனால், அவ்வளவும் ஆளுமைத்திறன் நிறைந்ததாக இருக்கும்.
ஒருமுறை, அண்ணி, அம்மாவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட, அண்ணனை அழைத்தாள், அம்மா.
'டேய் மணிகண்டா, இந்த வீடு எப்பவுமே பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ற இடமாத்தான் இருந்துருக்கு. பிரச்னை உருவாகும் இடமா இருந்தது இல்லை.
'நீங்க ஆசைப்பட்டா, நீ வேலை பார்க்கும், இடத்துக்கு பக்கத்திலயே வீடு எடுத்துக்கோ, தேவைன்னா எப்போ வேணும்ன்னாலும் வந்து பேசு. அந்த பேச்சுல விஷயம் மட்டும் தான் இருக்கணும்கிறத மறந்துடாத சரியா...' என்றாள்.
தாத்தா காலத்தில், 50 ஏக்கருக்கு மேல் இருந்த சொத்து, அப்பா காலத்தில், 5 ஏக்கராக மாறியது. இருப்பினும், அப்பா - அம்மாவின் உழைப்பு, இவர்களை உயர்த்தி வந்தது. இந்நிலையில், அப்பாவுக்கு ஏற்பட்ட விபத்து சிகிச்சைக்கு, சொத்து விரயமாக, சிகிச்சை பலனின்றி காலமானார்.
மிச்சமிருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தையும், சொந்தமாக இருந்த ஓட்டு வீட்டையும் வைத்து நம்பிக்கையோடு உழைத்தாள், செல்லத்தாய்.
செல்வத்தின் தந்தை இறக்கும்போது, பிளஸ் 2 படித்த, அண்ணன் மணிகண்டன், தன் படிப்பை தொடர, 10ம் வகுப்பு முடித்த, செல்வம், தாயுடன் விவசாயம் பார்க்க ஆரம்பித்தான்.
அக்கறையும், கடுமையான உழைப்பும் கை கொடுக்க, அவர்கள் சாகுபடி செய்த பயிர் எல்லாம் பலன் தந்தது. நிலத்தை உழுவதிலிருந்து அறுவடை வரை, அத்தனை நுட்பமும் செல்வத்திற்கு அத்துப்படி. மணிகண்டனும் வேலைக்கு போக, குடும்பம் தழைத்தது.
மணிகண்டனும் செல்வமும் சேர்ந்து, செல்லத்தாயின் பெயரில் இடம் வாங்கி, தரமான கான்கிரீட் வீடு கட்டினர்.
விட்டுப் போன உறவுகள் வந்து ஒட்டிக் கொண்டது. ஒட்டிக் கொண்ட உறவிலிருந்து அண்ணனுக்கு அண்ணியும், செல்வத்திற்கு, வெள்ளையம்மாளும் மனைவிகளாக வந்தனர். அண்ணனுக்கு இரண்டு ஆண் வாரிசுகளும், செல்வத்திற்கு, மகாலட்சுமியும் வாரிசாக வர, வீடே மழலை மொழியில் நிறைந்தது.
காலம் வளர வளர குடும்ப பெண்களிடம், கருத்து மோதல் உருவானது. அது செல்லத்தாயின் ஆளுமைத்திறனால் அமுங்கி போனாலும், உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. அந்த புகையின் அழுத்தம் தாளாமல், அண்ணன் வேலை பார்த்த ஊரிலேயே குடும்பத்தை அமைத்துக் கொள்ள, இந்த வீட்டின் ஒற்றை இளவரசியாக ஆகிப்போனாள், மகாலட்சுமி.
செல்வமும், வெள்ளையம்மாளும் விவசாய வேலை பார்த்தனர். பக்கத்து ஊரில் தனியார் பள்ளியில் படித்த மகாலட்சியை, பள்ளி பஸ்சில் ஏற்றி விடுவதும், அழைத்து வருவதும், அவளுக்கு தேவையானதை கவனிப்பதும், செல்லத்தாயின் வேலையானது.
ஒருநாள் மாலை, 'செல்வம், எனக்கு ஒரு மாதிரியா உடம்பு படுத்துது; கொஞ்சம் கண் அசறுகிறேன். பள்ளி பஸ்சில் வரும் மகாலட்சுமியை, நீ பார்த்துக்கோ...' என்றவள், மகாலட்சுமியை பார்க்காமலே கண்ணை மூடினாள்.
எல்லாம் முடிந்த பின், வீடு யாருக்கு சொந்தம் என்று ஆரம்பித்து, யாருக்கு எந்தப் பக்க நிலம், எப்படி பிரிப்பது என, பிரச்னை உண்டானது.
பஞ்சாயத்து பெரியவர்கள் ஒன்று கூடி, 'தோட்டம் அதுபாட்டுக்கு கெடக்கட்டும். இப்போ எதுவும் பேச வேண்டாம்; கொஞ்ச காலம் போனா கசப்பும் மாறிடும். மணிகண்டா, நீ வேலை பார்க்குற இடத்துல, வீடு குடுத்துருக்காங்கள்ல அங்க இருந்துக்க.
'தம்பி, அம்மா வீட்ல இருந்துக்கட்டும். என்னிக்கு இருந்தாலும் உங்க சொத்துதானே, பின்னாடி பிரிச்சுக்கோங்க. இப்போ பிரச்னை வேண்டாம்...' என்றனர்.
'யாராயிருந்தாலும், என்னிக்கா இருந்தாலும், என் சொத்த, எனக்கு குடுத்த பிறகு தான், அந்த தோட்டத்துல கால் வைக்கணும். வேற ஏதாவது நடந்தா, நான் மனுஷனா இருக்க மாட்டேன்...' என்று கத்தினான், அண்ணன்.
விவசாயியாக இருந்த செல்வம், கூலித்தொழிலாளி ஆனான். ஆங்கில வழி பாடம் படித்து வந்த, மகாலட்சுமி, அரசுப் பள்ளிக்கு மாறினாள். காலம், செல்வத்தை நசுக்கியது.
பழைய நினைவில் இருந்து மீண்ட செல்வம், வீட்டிற்குள் சென்று, தண்ணீர் குடித்தான். சுவரோரமாய் உறங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியை பார்த்ததும், 'இவ, உன் பொண்ணு இல்லடா, நம் குல சாமி. கண்கலங்காம நீ பார்த்துக்கணும்...' என்று செல்லத்தாய் சொன்னது, நினைவுக்கு வந்தது.
மகாலட்சுமியின் உறக்கம் கலையாமல் தலையை துாக்கி, தன் தொடையை தலையணையாக்கி படுக்க வைத்து, கண்களை மூடினான்.
வாசலில் ஏதோ வாகன சத்தம் கேட்க, கண் விழித்தான், செல்வம். மகாலட்சுமியும் விழித்துக் கொள்ள, இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர்.
வாசலில் தோப்புக்காரர் இருந்ததை கண்டு, ''ஐயா வாங்க... சொல்லியிருந்தா நானே வந்துருப்பேனே...'' என்றவன், கட்டிலை துாக்கி, அவர் அருகில் போட்டு, ''உட்காருங்கய்யா...'' என்றான்.
''செல்வம், உன்னை வீட்டுக்கு வரச் சொல்லிட்டு அவசர வேலையா, மதுரைக்கு போயிட்டேன். அங்கே போன பிறகு தான், 'உன் மகளுக்கு பிறந்தநாள்'ன்னு ஞாபகம் வந்தது.
''நான் வந்து பணம் குடுத்து, நீ எங்க போயி துணிமணி வாங்கப்போறேன்னு, நானே அஞ்சாவது படிக்கிற பாப்பா உடுத்துற மாதிரி துணியும், ஒரு டப்பா சாக்லேட்டும் வாங்கி வந்துட்டேன். இந்தா பிடி...'' என்றார்.
''நீங்க போயி, எதுக்கு ஐயா இதெல்லாம்...'' என்று, நா தழுதழுத்தான்.
''என்னடா சொல்ற, எங்க ஊரே என்னை தோப்புக்காரர்ன்னு சொல்றதுக்கு, உன் உழைப்புதானேடா காரணம். நீ மட்டும் இல்லைன்னா, தோட்டமும், தென்னந்தோப்பும், மண்ணா போயிருக்கும்டா.
''சரி சரி... நான் தான் எல்லாம் வாங்கி குடுத்துட்டேன்னு, நாளைக்கு வேலைக்கு வந்துடாதே... பாப்பாவை கூட்டிக்கிட்டு வத்தலக்குண்டு போய் வேணுங்கிறதை வாங்கிக் குடுத்துட்டு கூட்டிட்டு வா,'' என்றவர், கொஞ்சம் பணமும் கொடுத்து, தன் வாகனத்துக்கு உயிரூட்டி கிளம்பினார்.
அவர் போவதையே இருவரும் மவுனமாக பார்த்தனர்.
காலையில் குளித்து முடித்து, புத்தாடையில் அழகிய தேவதையாய் ஜொலித்தாள், மகாலட்சுமி.
''மசமசன்னு மகளையே பார்த்துக்கிட்டு இருக்காம, சீக்கிரம் சாப்பிட்டுட்டு, வத்தலகுண்டு போயி, பிள்ளைக்கு ஏதாவது வாங்கிக்குடுத்துட்டு, அப்படியே எங்க ஊருக்கு போய், எங்கம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க,'' என்றாள், வெள்ளையம்மாள்.
''ஆத்தா அப்பன் சேர்த்த சொத்த அடிச்சுப்பிடிச்சு வாங்கத் தெரியாம, வெறும் பயலா இருக்குற உன் புருஷன் வீட்டுக்கு வரமாட்டேன்னு, சொல்லிட்டு போனாள், உங்கம்மா. வெறும் பயலா, நான் போனா வாங்கன்னு கூப்பிட ஆள் இருக்குமா,'' என்றான், செல்வம்.
''அதெல்லாம் கூப்பிடுவாங்க. வயசுல பெரியவங்க ஒண்ணு ரெண்டு வார்த்தை கூடுதலா பேசுனா, நம் நல்லதுக்குதான்னு எடுத்துக்கணும். அப்புறம், எங்கம்மா ஒண்ணும் பொய் சொல்லலியே, நீ இன்னிக்கு வரைக்கும் வெறும் பயலாதான இருக்க...'' என்றாள்.
செல்வத்தின் கை பிடித்து இழுத்து, ''வாப்பா போகலாம். பஸ் வந்துரும்,'' என்றாள், மகாலட்சுமி.
அவளைத் துாக்கிக் கொண்டு கிளம்பினான்.
''இப்போ வரும் பஸ், மதுரைக்கு போகுமாப்பா,'' என்றாள், மகாலட்சுமி.
''இல்லை பாப்பா, இது நிலக்கோட்டை வழியா வத்தலகுண்டு போகும். நாம நிலக்கோட்டையில இறங்கினா, மதுரைக்கு நிறைய பஸ் வரும். ஏன், பாப்பாவுக்கு மதுரைக்கு போகணுமா?'' என்றான்.
''போகலாம்பா, அங்கதானே நிறைய கோவில் இருக்குது...'' என்றதும், ''சரி போவோம்...'' என்றான், செல்வம்.
மதுரையில் இறங்கி, மீனாட்சி அம்மனை தரிசித்து வெளியே வந்து, குளிர்பானம் குடித்தனர்.
''அப்பா, பெரியப்பா வீடு இங்கதானே இருக்கு, போய் பார்த்துட்டு வருவோமா,'' என்றதும், செல்வத்துக்கு துாக்கி வாரிப் போட்டது.
அதிர்ச்சியை மறைத்து, ''நீ போகலாம்ன்னு சொன்னா போகலாம் பாப்பா,'' என்றான்.
அண்ணன் வீட்டுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், வீடும், வழியும் மறக்கவில்லை. வெளிக்கதவை திறந்த செல்வத்தின் கை நடுங்கியது. உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்தினாள், மகாலட்சுமி.
கதவை திறந்து வெளியே வந்த, மணிகண்டனை பார்த்ததும், செல்வத்தின் கண்களில் நீர் வழிந்தது.
''பெரியப்பா, இன்னிக்கு எனக்கு பிறந்த நாள். ஆசி வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தோம். அண்ணனுங்க இருக்காங்களா...'' என்றவாறு உள்ளே போனாள். அவளின் செயல்பாடுகளில், அம்மா செல்லத்தாயின் ஆளுமையும், கம்பீரமும் தெரிந்தது.
அவளை வாரி அணைத்து, ''உங்களுக்கு பிறந்தநாளா, ரொம்ப சந்தோஷம்...'' என்றவர், தயங்கி நின்ற தம்பியை பார்த்து, ''உள்ளே வாடா செல்வம்,'' என்றார், மணிகண்டன்.
உள்ளே இருந்த அண்ணியிடமும், பசங்களிடமும் இறுக்கம் தெரிய, என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கினான், செல்வம். அனைவரிடமும் ஒட்டிக் கொண்டாள், மகாலட்சுமி.
இறுக்கமான சூழல் குறைந்ததும், தம்பியிடம், ''செல்வம் எப்படி இருக்கடா,'' என்றார்.
''நல்லாயிருக்கேன். பக்கத்து ஊர்ல இருக்குற தோப்புக்காரர் தோட்டத்துல, கூலி வேலை பார்த்துகிட்டு இருக்கேன், அண்ணே,'' என்றான், செல்வம்.
''அந்த தோப்புக்கார தாத்தா தான், இந்த புதுத்துணியை எடுத்து குடுத்தார். நல்லாருக்கா பெரியப்பா,'' என்றாள், மகாலட்சுமி.
வாங்கி கொடுக்கும் இடத்தில் இருந்தும் எதுவும் செய்ய முடியலையே என்ற எண்ணத்தை மறைத்து, ''ரொம்ப நல்லாருக்குதுடா செல்லம், இனிமே இந்த பெரியப்பாவும் உன் பிறந்தநாளுக்கு புதுத்துணி வாங்கித் தருவேன் சரியா,'' என்றார்.
மதிய சாப்பாடு முடித்து, செல்வமும், மகாலட்சுமியும் கிளம்ப, ''இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு வெயில் தாள போகலாமே தம்பி,'' என்றாள், அண்ணி.
''இல்லை அண்ணி... வத்தலகுண்டு போயிட்டு அப்புறம் தான் ஊருக்கு போகணும். இப்போ கிளம்பினா தான் சரியாயிருக்கும்,'' என்றான்.
''பெரியப்பா, நாங்க வத்தலகுண்டுல உள்ள பாட்டி வீட்டுக்கு போயிட்டு தான் வரணும்ன்னு அம்மா சொல்லிட்டாங்க. எங்கப்பா வெறும் பயலா அங்க போகாம, ஒரு தோட்டக்காரனா அவுங்க முன்னாடி போய் நிக்கணும்ன்னு தான், நான் அப்பாவை கூட்டிகிட்டு இங்க வந்தேன்.
''நம் தோட்டத்துல எந்தப்பக்கம் வேணுமோ அதை வச்சுக்கிட்டு, மிச்சத்தை குடுங்க பெரியப்பா... அப்பா சந்தோஷமா அதுல விவசாயம் பார்ப்பாரு...'' என்றாள், மகாலட்சுமி.
ஒரு சிறிய பிரச்னைக்காக தம்பியின் நிலையை எவ்வளவு மோசமாக வைத்து விட்டோம் என்பதை உணர்ந்ததும், கண்ணீர் பெருகியது.
செல்வத்தின் கைகளை பிடித்து, ''தம்பி, என்னை மன்னிச்சிடுடா. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு இப்போதான்டா புரியுது. உன்னை வெறும் பயலா, ஒரு கூலிக்காரனா ஆக்கிட்டேனே, தம்பி...'' என்று கண்ணீர் சிந்தினார், மணிகண்டன்.
''விடுங்கண்ணே, ஏதோ போறாத காலம், ஏதேதோ நடந்துருச்சு. இதுக்கு போய் அழுதுகிட்டு,'' என்றான் செல்வம்.
கொஞ்சம் நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட மணிகண்டன், ''நம் தோட்டம் எங்கிட்ட இருந்தா வெறும் மண்ணா தான் இருக்கும். உங்கப்பாகிட்ட இருந்தா அது பொன்னாயிரும். இந்த நிமிஷத்திலிருந்து உங்கப்பா கூலிக்காரன் இல்லை, தோட்டக்காரன் சரியா...
''சந்தோஷமா போயி, தோட்டத்துல வேலையை பாருங்க, உன் அண்ணனுங்க பெரியாளாகி, நாங்களும் விவசாயம் பார்ப்போம்ன்னு சொன்னானுங்கன்னா, அன்னிக்கு நீ பார்த்து ஏதாவது குடுத்தா போதும்; அதுவரைக்கும் நம் தோட்டம் உன்னோடது தான்.
''அறுந்து போய் கிடந்த நம் உறவுக்கு, நீ, இன்னிக்கு பெரிய பாலமே கட்டிட்ட பாப்பா. அந்த பாலத்தை எந்த காலத்திலும் இனி நாங்க உடைக்க மாட்டோம்,'' என்று சொல்லி, மகாலட்சுமியை அணைத்துக் கொண்டார்.
விடைபெற்று வெளியே வந்ததும், 'என் பேத்தி நம் குல தெய்வம்டா...' என்று சொன்ன அம்மாவின் நினைவு வந்தது.
துாரத்தில் தெரிந்த, மீனாட்சி அம்மன் கோபுரம் பார்த்து கை கூப்பினான், செல்வம்.
தி. அறிவழகன்
