PUBLISHED ON : அக் 01, 2023

துப்பாக்கி சுடும் பயிற்சியில், கமலஹாசன்!
இந்தியன் - 2 படத்தை அடுத்து, எச்.வினோத் இயக்கும், தன், 233வது படத்தில் நடிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், ராணுவ வீரராக நடிக்கிறார்.
இதையடுத்து, மிகப்பெரிய, அதிக எடையுடைய துப்பாக்கிகளை அலாக்காக துாக்கியபடி தீவிரவாதிகளுடன் மோதும் பயிற்சிகளை எடுத்து வருகிறார். அத்துடன், இந்த படத்துக்காக, தன் உடல் கட்டையும் கம்பீரமாக மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார், கமலஹாசன்.
சினிமா பொன்னையா
'டீன் ஏஜ்' பையனாக மாறும், விஜய்!
லியோ படத்தை அடுத்து, விஜய் நடிக்கும், 68வது படத்தை இயக்கப் போகிறார், வெங்கட் பிரபு. இந்த படத்தில், அப்பா - மகன் என்று, இரட்டை வேடத்தில் நடிக்கிறார், விஜய். இதில், மகனாக நடிக்கும், விஜயின் கதாபாத்திரத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரை இளமையாக காட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, அமெரிக்கா சென்றிருந்த விஜயை, அங்குள்ள அனிமேஷன் தொழில்நுட்பத்தில், 'டீன் ஏஜ்' பையனாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அதோடு, இளமையான விஜய் நடிக்கும் அதிரடி சண்டைக்காட்சியை, 20-க்கும் மேற்பட்ட கேமராகளை பயன்படுத்தி, ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சி.பொ.,
பிரபல இயக்குனர்களை துரத்தும், கீர்த்தி!
பாலிவுட்டில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக, மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை, அவ்வப்போது சந்தித்து, பட வேட்டையில் ஈடுபட்டு வந்தார், கீர்த்தி சுரேஷ். இருப்பினும், எதிர்பார்த்தபடி, அவருக்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் அமையவில்லை.
அதனால், ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்திருக்கும், அட்லி மற்றும் ஹிந்தியில் படம் இயக்க முயற்சித்து வரும் கோலிவுட், டோலிவுட்டின் இன்னும் சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு, துரத்தி வருகிறார், கீர்த்தி சுரேஷ்.— எலீசா
அஜித்துடன் இணையும், லியோ கூட்டணி!
விஜய் நடித்திருக்கும், லியோ படத்தில், அவருக்கு ஜோடியாக, த்ரிஷாவும், நடிகர் அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் ஆகியோரும், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், லியோ படத்தில் நடித்துள்ள, த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகிய மூன்று பேரையுமே தன், விடாமுயற்சி படத்தில் இணைத்துள்ளார், அஜித்.
விஜயின், லியோ படத்துக்கு இணையாக, இதையும் பிரமாண்ட படமாக்க வேண்டும் என்பதோடு, இன்னும் சில முக்கிய மலையாள நடிகர்களையும் ஒப்பந்தம் செய்யுமாறு இயக்குனரை கேட்டுள்ளார், அஜித்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
சின்ன குஷ்பூ நடிகை, திருமணத்திற்கு பிறகு, பல படங்களில் நடித்து வந்த போதும், அதில் பல, பைனான்ஸ் பிரச்னை காரணமாக, பாதியில் நின்று போனது. அந்த படங்களுக்கு பைனான்ஸ் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்பதால், தற்போது தானே களத்தில் இறங்கி இருக்கிறார், நடிகை.
தன்னுடன் ஏற்கனவே நட்பில் இருந்த சில பண முதலைகளுடன் மீண்டும் உறவாடத் துவங்கி இருக்கிறார், அம்மணி. இதையடுத்து அம்மணி கொடுத்த அழுத்தம் காரணமாக, கிடப்பில் இருந்த அவரது இரண்டு படங்களுக்கு பைனான்ஸ் பிரச்னை சரியாகி, படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சினி துளிகள்!
* மீண்டும், விஜய், அஜித்துடன் நடிக்க துவங்கி இருக்கும், த்ரிஷா, அடுத்தபடியாக, தன், 'மாஜி' இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கும், கதை கேட்டு வருகிறார்.
* தனுஷுடன், கொடி படத்தில் நடித்திருந்த, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், ஜெயம் ரவியுடன், சைரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில், இன்னொரு நாயகியாக, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
* சினிமாவில் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை, மும்பையில் தான் படிக்க வைத்து வரும் குழந்தைகளுக்காக செலவிட்டு வருகிறார், ஹன்சிகா.
அவ்ளோதான்
