PUBLISHED ON : அக் 01, 2023

கிருஷ்ண பக்தியை, ஆர்வத்துடன் மக்கள் பின்பற்றுமாறு செய்ததில், பெரும்பங்கு வகித்தவர், வல்லபாசாரியார். அடியார்கள் பலர், இவரைப் பின்பற்றி சீடர்களாயினர். அவர்களில் முக்கியமானவர், ரஜோ எனும் பெண் பக்தர். அவள், தன் குருநாதரை தெய்வமாகவே மதித்தாள்; அதைச் செயல்படுத்தியும் காட்டினாள்.
தினமும் மாலை, நெய்யில் செய்யப்பட்ட பணியாரங்களைத் தானே தயார் செய்து, குருநாதருக்கு சமர்ப்பிப்பாள், ரஜோ.
ஒருநாள்-
வல்லபர், தன் தந்தைக்கு, சிரார்த்தம் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு தேவையான நெய் இல்லை. அதனால், ஒரு சீடரை அழைத்து, 'அந்த ரஜோ, தினமும் நமக்கு நெய்யால் செய்யப்பட்ட பணியாரங்களைச் சமர்ப்பிக்கிறாள் அல்லவா? அவளிடம் நெய் இருக்கும். நீ போய், நான் கேட்டதாகச் சொல்லி, அவளிடம் இருந்து நெய் வாங்கி வா...' என, அனுப்பினார், வல்லபர்.
சீடரும் வேகமாக போய், ரஜோவிடம் நெய் கேட்டார்.
'நெய் இல்லை...' என்று சொல்லி விட்டாள், ரஜோ. சீடர் திரும்பி வந்து, குருநாதரிடம் ரஜோ கூறியதை சொன்னார்.
ஒரு சில விநாடிகள் யோசித்த வல்லபர், 'நீ மறுபடியும் போ. குருநாதர் கோபித்துக் கொள்கிறார் என்று கூறி, நெய் வாங்கி வா...' என, அனுப்பினார்.
மறுபடியும் போய், நடந்ததை அப்படியே சொல்லி, ரஜோவிடம் நெய் கேட்டார், சீடர்.
அவளோ பழையபடியே, 'என்னிடம் நெய் இல்லை. மறுபடி மறுபடிக் கேட்டால், நான் எப்படிக் கொடுக்க முடியும்?' எனச் சொல்லி, சீடரை அனுப்பி விட்டாள்.
சீடர் திரும்பி வந்து வல்லபரிடம் நடந்ததைச் சொல்ல, அவரும் வேறு இடத்தில் நெய் வாங்கி வரச் செய்து, சிரார்த்தத்தை முடித்தார்.
அன்று மாலை, வழக்கம்போல, நிறைய நெய் பணியாரங்களை கொண்டு வந்து, குருநாதரிடம் சமர்ப்பித்தாள், ரஜோ.
'என் தகப்பனாருக்கு இன்று சிரார்த்தம். அதற்காக நெய் கேட்டதற்கு, நீ இல்லையென்று சொல்லி விட்டாயே...' என்றார், குருநாதர்.
'குருநாதா, நீங்கள் ஏன், சிரார்த்தத்திற்கு என்னிடம் நெய் கேட்க வேண்டும்? உங்கள் வீட்டு நெய்யையே பயன்படுத்தி இருக்கலாமே...' என, பணிவோடு கேட்டாள்.
'அது எப்படி... வீட்டில் நான் வைத்திருக்கும் நெய், என் தெய்வமான கிருஷ்ணனுக்காக அல்லவா? அதை எப்படி, என் தந்தை சிரார்த்தத்திற்கு உபயோகப்படுத்த முடியும்?' என்றார், குருநாதர்.
'குருநாதா, என் வீட்டிலும் அப்போது நெய் இருந்தது. ஆனால், அது என், தெய்வமான குருநாதரின் சேவைக்காக உள்ளது. அதை எப்படி, நான், தங்கள் தந்தை சிரார்த்தத்திற்குத் தர முடியும்? நான், தங்கள் பக்தையே தவிர, தங்கள் தந்தையின் பக்தை இல்லையே...' என்றாள்.
தெய்வ பக்தி, குரு பக்தி ஆகியவற்றை விளக்குவதோடு, உயர்ந்ததான ஒரு செயலுக்காக உள்ள பொருளை, அதற்காகத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, வேறு காரியத்தில் செலவிடக் கூடாது என்ற பெரும் பாடத்தையும் உணர்த்தும் வரலாறு இது.
பி. என். பரசுராமன்
