PUBLISHED ON : அக் 01, 2023

சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு அரசுப்பள்ளி, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் மிக வித்தியாசமான ஒரு வி.ஐ.பி.,யை சந்தித்தது.
தான் படித்த அந்த பள்ளி மாணவர்களுக்கு, 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு சாதனங்களை நன்கொடையாக வழங்கிய, அந்த வி.ஐ.பி., பிரகாஷ் பழனி என்பவர்.
இன்று, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் வைத்திருக்கும் ஐ.டி., நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி.
அவர் பேசுகையில், 'வீட்டு வேலை செய்து வந்தார், என் தாய். இதனால், அவரது கால்கள், எப்போதும் தண்ணீரில் ஊறிப்போய் நனைந்த நிலையில் இருக்கும். ரிக் ஷா ஓட்டும் தொழிலாளியான என் அப்பாவின் கால்கள், சைக்கிள் ரிக் ஷா மிதித்து மிதித்து, காய்த்துப் போய் காணப்படும்.
'இருவருமே தத்தம் வேலை காரணமாக உடல்நலம் மற்றும் பொருளாதார பிரச்னையால் அவதிப்பட்டாலும், 'நேர்மையா இருக்கணும், உண்மையா உழைக்கணும்' என்ற வார்த்தையை எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பர்.
'இந்த வார்த்தை மந்திரம் போல திரும்ப திரும்ப என்னுள் ஒலித்ததால், இன்று நான், 250 பேர் வேலை செய்யும், சர்வதேச ஐ.டி., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறேன்.
'அப்பாவும், அம்மாவும் அன்றாடம் படும் சிரமங்கள் என்னை பல இரவுகள் துாங்க விடாமல் செய்தன.
'பள்ளி படிப்பை முடித்ததும், பெற்றோருக்கு உதவுவதற்காக, கல்லுாரி பக்கம் போகாமல், திருமண மண்டபங்களில் கூலி வேலைக்கு சென்றேன். பகல் முழுவதும் நாள் கூலியாகவும்; இரவு, 'டேட்டா என்ட்ரி' ஆபரேட்டராகவும் வேலை பார்த்தேன். இருந்தும் வீட்டிற்கு சொற்ப பணம் கொடுக்க முடிந்ததே தவிர, பெற்றோருக்கு ஓய்வு கொடுத்து, வீட்டில் உட்கார வைக்க முடியவில்லை.
'இதற்காக கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளை படித்தேன். படிப்பு முடித்த கையோடு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கிருந்து படிப்படியாக முன்னேறி, இன்று, 'பேசிக் கிளவுட் சொலுஷன்' என்ற நிறுவனத்தை பல்வேறு நாடுகளில் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
'நான், நெதர்லாந்தில் இருந்தபடி, நிறுவனத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். என் அண்ணன், விஜயகுமார் சென்னையில் உள்ள, இந்திய நிறுவனத்தை பார்த்துக் கொள்கிறார்.
'அம்மா, அப்பாவுக்கு சொந்த வீடு உள்ளிட்ட வேண்டிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து விட்டேன். விரும்பிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று வந்து விட்டேன்.
'என் வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை, எளிய குழந்தைகள் படிப்பிற்கு செலவிடுகிறேன். அரசுப்பள்ளியில் படித்த, ஏழை, எளிய மாணவர்களையே வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன்.
'நான் சாதாரணமாக படிக்கும் மாணவன் தான். ஆனால், என்னால் முடியும் என்று எனக்குள் விதை போட்டவர், லாரன்சு வாத்தியார். அதே போல, என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும் என் நண்பன், பார்த்திபன் ஆகியோர், என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள்.
'என் தாராக மந்திரமே, 'அறம் செய்து பழகு' என்பது தான்...' என்று, பிரகாஷ் பழனி கூறியபோது எழுந்த கை தட்டல் அடங்க, வெகு நேரமானது.
அவரது, 'இ-மெயில்' முகவரி Talents@basiscloudsolutions.com
எல். முருகராஜ்
