தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்த ஒரு மாலை வேளை... நண்பர்கள் அனைவரும், 'பீச்'சில் கூடியிருந்தோம். மழை காரணமாக, கூட்டம் குறைவாக இருந்தது. துாரத்தில் கடல் அலைகள் உயரமாக மேலெழும்பி, திகில் ஊட்டிக் கொண்டிருந்தது.

அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த வேக வைத்த வேர்க்கடலை, தேங்காய் போளி, குடைமிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு சிப்ஸ் என, பல ஐட்டங்கள் காரினுள் அணிவகுத்திருந்தன.

பூப்போட்ட கிளாஸ்களில், சரக்கை நிரப்பி, என்னை தவிர்த்து, அனைவருக்கும் வினியோகித்திருந்தார், லென்ஸ் மாமா.

கிளாசிலிருந்து ஒரு மடக்கை விழுங்கி, வேக வைத்து, தோலுரித்த வேர்க்கடலையை கைப்பிடி எடுத்து வாயில் போட்டு மென்றபடி, 'இந்த கிளைமேட்டுக்கு, சரக்கோடு சுடச்சுட வேர்க்கடலையும் செம, 'காம்பினேஷன்'பா...' என்று சிலாகித்தார், லென்ஸ் மாமா.

'மாமா, ஒரு விஷயம் கேள்விப்பட்டீரா?' என்றார், வங்கி அதிகாரியான நண்பர்.

'என்ன?' என்றார், மாமா.

'உலகின் இரண்டாவது, 'பீர்' தயாரிப்பான நெதர்லாந்து நாட்டின், 'ஹெனிக்கன்' நிறுவனம், ரஷ்யாவிலிருந்து வெளியேறி விட்டதாமே...' என்றார்.

'ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன். ஒரு, 'பீர்' டின்னின் விலையை விட குறைவாக வெறும், 90 ரூபாய்க்கு, 'ஆர்னெஸ்ட்' குழுமத்திடம் விற்று விட்டது...' என்றார், மாமா.

'ஏன் விற்றனர்?' என்றேன், நான்.

'அங்குள்ளவர்களிடம் குடி பழக்கம் குறைந்து விட்டதோ, என்னவோ! ரஷ்யா - உக்ரைன் போர் கூட காரணமாக இருக்கலாம்...' என்றார், வங்கி அதிகாரி.

எதற்கும் முந்திக்கொள்ளும் ராமசாமி அண்ணாச்சி, ஒரு ஓரமாக, சோகமாக அமர்ந்தபடி, எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

'என்னாச்சு... ஏன் சோகமா இருக்கீங்க?' என்று, விசாரித்தேன்.

'மனசே சரியில்ல, மணி. 'எனக்கு வயசாகிட்டதாம். இனி, சரக்கு அடிக்கக் கூடாதாம், அசைவம் சாப்பிடக் கூடாதாம். இதெல்லாம் இல்லாவிட்டால், ரொம்ப நாளுக்கு உயிரோடு இருக்கலாம்...' என்று, யாரோ என் வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லியிருக்காங்க. இதெல்லாம் இல்லாம, நுாறு வயசு வரை வாழ்ந்து என்ன பிரயோஜனம் மணி...' என்றார், அழாத குறையாக.

'என் வீட்டுக்காரம்மா கூட தான் தினமும், 'இதை செய்யாதே... அதை செய்யாதே...' என்று, பாடம் எடுப்பாங்க. நான், ஸ்கூல் பாடத்தையே கவனிக்காதவன், இதை காதில் வாங்குவேனா... அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஜாலியா இருக்கிற நேரத்துல எதுக்கு மூஞ்சை துாக்கி வெச்சுக்கிட்டு... வந்து ஜோதியில கலந்துக்கங்க...' என்று, அண்ணாச்சியின் கையை பிடித்து இழுத்து வந்தார், லென்ஸ் மாமா.

'மது பழக்கம் இல்லாவிட்டால், நீண்ட நாள் வாழலாம் என்று சொல்வது உண்மை எனக்கூறும் ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை படித்தேன். அதில் என்ன சொல்லியிருக்காங்கன்னா...' என்று ஆரம்பித்தார், வங்கி அதிகாரி:

உலகத்துலயே அதிக காலம் உயிரோட வாழ்ந்த மனுஷன் யார் தெரியுமா?

ஆதாரப்பூர்வமா கிடைச்ச தகவல் படி, அவர் ஒரு ஜப்பான்காரர். பேர், சிக் ஷக் ஷியோ இசுமி. இவரு, பிப்., 21, 1986ல் தான் இறந்து போனார். அந்த சமயத்துல, இவருக்கு வயசு, 120 ஆண்டு, 237 நாள்.

ஜப்பான்ல உள்ள, ரொம்பவும் பின்தங்கிய தீவு ஒண்ணுல பொறந்து வளர்ந்தவர். கடுமையான உழைப்பாளியாம். வயசான காலத்துலயும் உடற்பயிற்சி செய்வாராம். மீன், காய்கறி எல்லாம் நிறைய சாப்பிடுவாராம்; மற்ற அசைவ ஐட்டங்களை குறைவாத்தான் சாப்பிடுவாராம்.

இது சம்பந்தமா, ரஷ்யாவில் சில ஆய்வுகள் நடந்தது. அங்கே, 1960ல், பெண்களுடைய சராசரி வயசு: 73.6. ஆண்கள், 64.5 ஆக இருந்துள்ளது. கடந்த, 1972ல் பார்த்தா, இது படிப்படியா குறைஞ்சுட்டு வந்திருக்கு. அப்போ, பெண்கள் சராசரி வயசு: 72.6. ஆண்கள், 62.4.

அப்படின்னா இப்போ இன்னமும் குறைஞ்சிருக்கும்ன்னு தானே நினைக்கறீங்க. அதுதான் இல்ல, இப்போ அங்கே பெண்களோட சராசரி வயசு: 73.6. ஆண்கள், 65. இது எப்படி சாத்தியமாச்சுன்னு நினைக்கறீங்க... மதுபானங்களுக்கு எதிரான பிரசாரம் தான் காரணம்.

மதுபான உபயோகம் குறைய குறைய, வயசு கூடிகிட்டே வருது. அது மட்டுமில்ல, சாலை விபத்துகளும், 37 சதவீதம் குறைஞ்சுட்டுதாம்!

பொதுவா உலகத்துலயே அதிக வயசானவங்க வசிக்கும் நாடுகளில், ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளையும் குறிப்பிடலாம்.

'காகசஸ் மலைப்பகுதியில இருக்கிறவங்க தான், அதிக நாள் வாழறாங்க...' என, தன் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார், ரஷ்ய ஆய்வாளரான, கோஸ்லோவ். அந்தப் பகுதியில இருக்கிறவங்களோட அதிகபட்ச வயசு: 150.

பொதுவாக, மலைப்பகுதியில், உயிரினங்களோட வளர்ச்சி கொஞ்சம் மெதுவாத்தான் நடக்கும். அதுதவிர, அங்கே இருக்கிற இயற்கை சூழ்நிலை, சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் அங்கு வசிக்கும் மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும்- தயிர் எல்லாம் தான், அங்கே இருக்கிறவங்க மட்டும், அதிக நாள் வாழறதுக்கு காரணம்.

இன்னொரு முக்கிய காரணமும் அவர் ஆய்வுல இருந்து தெரிஞ்சுக்க முடியுது.

தனி மனிதன், ஒழுக்கமா நடந்துகிட்டா மட்டும் போதாதாம். சமூகமே நல்ல நெறியில நடந்துக்கறதும் ஒரு காரணம் என்று நிரூபித்துள்ளார், கோஸ்லோவ்.

காகசஸ் மலைப் பகுதியில், வயசானவங்களுக்கு, சின்னவங்க மரியாதை குடுக்கறாங்களாம்; அவங்களுக்கு உறுதுணையாக இருந்து, தேவையான உதவிகளை செய்யுறாங்களாம். இதனால், அங்கே எல்லாருக்குமே, மன இறுக்கம் குறையுதாம்.

ஒருத்தர் வீட்டுல துக்கம்ன்னா, ஊர்ல எல்லாரும் வந்து துக்கத்தை பகிர்ந்துக்குவாங்களாம். அதனால், சோகம் சிதைஞ்சு போவுது. பொறாமை வர்றதுக்கும் வாய்ப்பு இல்ல. பெரியவங்க அனுபவ முதிர்ச்சியால சரியான வழியை காட்டுறாங்க... இளைய தலைமுறை அந்த வழியில் போறதுனால, கஷ்டங்கள் வர்றதில்ல.

பிரச்னைகளுக்கு முடிவெடுக்கிறது, வயதானவர்களுக்கு சுலபம். ஏன்னா, அவங்களுக்கு அனுபவம் இருக்கு. அவங்க சொல்றபடி போயிட்டா, இளைஞர்களுக்கும், 'டென்ஷன்' இல்ல; பெரியவங்களுக்கும், தங்களை யாரும் மதிக்கறதில்லையேங்கற கவலையும் இல்ல. அதனால், ரெண்டு தலைமுறையும் நீண்ட ஆயுளோட வாழ முடிகிறது, என்கிறார்.

நீண்ட நாள் ஆரோக்கியமா வாழறதுக்கு, சில நல்ல யோசனைகளையும் சொல்லியிருக்கார். அது,

* காற்றோட்டமான இடத்துல இருங்க

* முடிஞ்சா திறந்த வெளியில துாங்குங்க

* மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுங்க

* அளவோட சாப்பிடுங்க

* மசாலா ஐட்டங்களை குறைச்சுக்குங்க

* உணவை நல்லா மென்று சாப்பிடுங்க

* வயித்துல கழிவு எதுவும் தங்காம பார்த்துக்குங்க

* நிக்கிறப்ப, -உக்கார்றப்ப, நடக்கறப்ப முதுகெலும்பு வளையாம நேரா இருக்கணும்

* தினம் பல் விளக்கி, பல், ஈறு எல்லாம் சுத்தமா வச்சிக்கணும். அளவுக்கு மீறி வேலை செய்யப்புடாது. தினம், ஏழு மணி நேரமாவது துாங்குங்க

* கோபம், கவலை இது ரெண்டையும் முடிஞ்ச அளவு குறைச்சுக்குங்க.

இதெல்லாம் செய்தாலே, நீண்ட நாள் ஆரோக்கியமா உயிர் வாழலாமாம்.

- இப்படி கூறி முடித்தார், வங்கி அதிகாரி.

'நீண்ட ஆயுள் இல்லாவிட்டாலும், இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்கலாமே! என்ன சொன்னாலும், 'குடிமகன்கள்' திருந்த போறதில்லை...' என்று நினைத்துக் கொண்டேன், நான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us