PUBLISHED ON : அக் 08, 2023

மு. ஜெஸ்ஸி, கோவில்பட்டி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவு என்பது, 'காமெடி' என்று, அமைச்சர் உதயநிதி கூறியுள்ளாரே...
அமைச்சர் கூறியது சரி தான்... ஒரு திரைப்படம் என்றால், கொஞ்ச நேரம், 'காமெடி' இருக்கும்; அப்புறம் திரைக்கதை ஓடும். அதே போல் தான், இந்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தமாஷும்!
க. அங்கையர்க்கண்ணி, நெல்லை: பிரதமர் மோடி மீதும், அவர் ஆட்சியின் மீதும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியவில்லை என்பதால், காங்., ராகுல், 'டிராவல்' பெட்டியை தலையில் துாக்கி வைத்தபடி, 'போஸ்' கொடுத்தது, செம, 'ஜோக்'தானே... ஓட்டு கிடைக்குமா, ராகுலுக்கு?
பெட்டி துாக்குவது மட்டுமா, பல, 'போஸ்'களும் இதேபோல் கொடுத்து வருகிறாரே... இதெல்லாம் ஓட்டுக்கு உதவாது. ஊழலற்ற ஆட்சியைத் தான் விரும்புகின்றனர், மக்கள். அவர்கள் தான் வெற்றி பெறுவர்!
பெ. பொன்ராஜபாண்டி, மதுரை: காவிரி பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, வழியே இல்லையா?
வழி உண்டு... அனைத்து மாநில நதிகளையும், மத்திய அரசு, தேசிய மயமாக்கி, அவைகளின் கட்டுப்பாட்டை, ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான், மாநிலங்களிடையே நதி நீர் பிரச்னை வராது; நிரந்தர தீர்வு கிடைக்கும்!
* த. நேரு, வெண்கரும்பூர்: மது பிரியர்கள் திருந்தும் காலம், எப்போது வரும், மணி?
எந்த காலத்திலும் வர வாய்ப்பில்லை. அரசே மதுவை நிறுத்தினாலும், இவர்களுக்கு எப்படியாவது மது கிடைத்து விடும். அதனால், உற்சாக பான பிரியர்கள், ஒருநாளும் அதை விட மாட்டார்கள்.
வி. நாதன், மதுரை: உயர்ந்த வாழ்க்கை என்று எதைச் சொல்லலாம்?
துன்பங்களை துடைத்து எறிய வேண்டும். மனோபலம், ஆன்ம பலம் உள்ளவர்களே உயர்ந்த வாழ்க்கை வாழுகின்றனர் என சொல்லலாம்!
ஆர். குமார், சென்னை: 'எல்லாரிடமும் பணிவு கொள்...' என்கிறாரே, என் தாத்தா.
அவர் சொல்வது சரிதான்... எல்லாரிடமும் பணிவு கொள்ளுங்கள். பணிவு என்பது, தாழ்மையின் சின்னம் அல்ல; அது, பண்பின் அறிகுறி!
* பி. ரகு, துாத்துக்குடி: யாரை, மேதை என்று சொல்லலாம்?
யோசிக்காமல் முடிவெடுப்பவன், பேதை; முடிவெடுத்த பின், யோசிப்பவன், கோழை. யோசித்து, முடிவெடுத்த பின், அதைச் சரியாகச் செயல்படுத்துபவனை, மேதை என்று அழைக்கலாம்!
