தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குரு தட்சணை!

குரு தட்சணை!

குரு தட்சணை!


PUBLISHED ON : அக் 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அபாரம்டா, கதிரேசா. இந்த, 'சீன' பிச்சு உதறிட்ட. இதே மாதிரி மேடையிலேயும் பண்ணினா, கை தட்டலால் அரங்கமே அதிரும். கை குடுடா,'' நாடக வாத்தியார், ஐயப்பன் சொன்னதும், உச்சி குளிர்ந்தது, கதிரேசனுக்கு.

''ரொம்ப நன்றிங்கய்யா.''

''நானும் என், 40 வருஷ நாடக அனுபவத்துல, எத்தனையோ பேர பார்த்துட்டேன். உன்னை மாதிரி இயற்கையான நடிகன பார்த்ததில்லடா.''

அவர் காலில் விழுந்து, ''என்னை ஆசிர்வதிங்கய்யா,'' என்றான், கதிரேசன்.

''இதே மாதிரியே தொழில்ல அக்கறையாவும், ஆர்வமாவும் இருந்தா, உச்சாணிக்கு போயிடுவ.''

ஐம்பத்தி இரண்டு வயது வாத்தியார், ஐயப்பன், மனதார பாராட்டும்போது, நெஞ்சுருகிப் போனான், 22 வயது, கதிரேசன்.

சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள் வீச்சு, உடற்பயிற்சி மற்றும் அதற்கு தகுந்த சாப்பாடு என, 52 வயதிலும், ஐயப்பன் வாத்தியாரின் உடம்பு, தேக்கு கட்டை போல இருந்தது.

சொந்தமாக நாடக கம்பெனி வைத்திருந்தார். தமிழகத்தில், அவருடைய குழுவின் கால் படாத கிராமம் இல்லை.

கிராமங்களில் நடக்கும் தேர் திருவிழா மற்றும் விசேஷங்களில் அவரின் நாடகம் இல்லாமல் நிறைவு பெறாது. திருவிழா தேதி குறிக்கும்போதே, அவரின் நாடகமும் முடிவாகி விடும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி போன போது தான், அவரிடம் வந்து சேர்ந்தான், கதிரேசன்.

அந்த ஊரில், 'அரிச்சந்திரா' நாடகம் நடத்துவதாக ஏற்பாடு. எப்போதுமே நாடகம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பே போய் விடுவார், ஐயப்பன். அந்த ஊர் மக்களின் ரசனையை தெரிந்து கொள்ளவும், ஒத்திகைக்காகவும் அப்படி செல்வது வழக்கம்.

அப்படி போயிருந்த போது தான், எல்லா ஒத்திகையும் முடிந்து, மறுநாள் இரவு, 10:00 மணிக்கு நாடகம் அரங்கேற்ற இருந்தது. இந்நிலையில், நாடகத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஒருவருக்கு, காலையில் உடம்பு சரியில்லாமல் போனது.

தனக்கு தெரிந்த நான்கு பேரை கூப்பிட்டு பார்த்தார், ஐயப்பன். அவர்களால் வரமுடியாத சூழ்நிலை. என்ன செய்வது என, மண்டையை பிய்த்துக் கொண்டார், ஐயப்பன்.

'அண்ணா, எங்க ஊர்ல கதிரேசன்னு, ஒரு பையன், 18 - 19 வயசு இருக்கும். நல்லா நடிப்பான். அவங்கப்பாவும் கூத்து கட்டி நடித்தவர் தான். ஒடம்பு சரியில்லாம ரெண்டு வருஷத்துக்கு முன் இறந்துட்டார்.

'இப்ப அந்த குடும்பம், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுது. வேணும்ன்னா அந்த பையனை கூட்டிட்டு வரட்டுமா?' என்றான், அங்கு வசிக்கும், மாணிக்கம்.

என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த, ஐயப்பனுக்கு, முயற்சித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது.

'சரி, கூட்டிட்டு வா...' என்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் வந்தான், கதிரேசன்.

களையான முகம், ஒல்லியும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமல் கச்சிதமான உடல்வாகு. அவனை ஏற இறங்க பார்த்தவருக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது.

'நடிப்பியா தம்பி?'

'நல்லா நடிப்பேன் அண்ணா...'

'ம்... பாட்டு?'

'கூத்து பாட்டு எல்லாம் நல்லா பாடுவேன்ணா...'

'எங்க பாடிக் காட்டு...'

ஒரு பாட்டை பாட, ஆச்சரியப்பட்டு போனார்.

'அபாரமான குரல் வளம். எங்க, நடிச்சுக் காட்டு பார்ப்போம்...' என்றார்.

நாடக வசனங்களை பேசி, நடித்தான்.

அசந்து போனார். என்ன ஒரு நடிப்பு. முகத்தில் நவரசம்.

'சபாஷ்... அற்புதம்டா... இந்த வயசுல இப்படி ஒரு நடிப்பை நான் பார்த்ததில்லை. இப்ப ஒரு வேஷம் தரேன், நாளைக்கு நாடகத்துக்கு தயார் ஆயிடுவியா?' என்றார்.

'ஆயிடுவேன்ணா...'

'சரி, இந்த பேப்பர்ல இருக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி, ஒரு, 'சீன்' நடிச்சுக் காட்டு பார்ப்போம்...' என்றார்.

பேப்பரை வாங்கியவன், அடுத்த அரை மணி நேரத்தில், 'தயார் அண்ணா...' என்று கூறி, வசனத்துடன் நடித்துக் காட்டினான். ஒரு வார்த்தை கூட பிசகவில்லை.

'சபாஷ் சபாஷ்... இது போதும்டா கதிரேசா. இதே மாதிரி மேடையில பண்ணு...' என்று, அவனை கட்டிப்பிடித்தார்.

அவர் சொல்லச் சொல்ல, முழுவதையும் மனப்பாடம் பண்ணி, முழு வீச்சில் ஒத்திகை பார்த்து, தயாராகி விட்டான்.

அன்று நாடகத்தில் சூப்பராக நடித்தான், கதிரேசன். கூட நடித்த அத்தனை பேரையும் நடிப்பில் பின்னுக்கு தள்ளி, நட்சத்திரமாக ஜொலித்தான்.

ஐயப்பனுக்கு பேராச்சரியமும், மகிழ்ச்சியும். ஒரு நல் முத்தை கண்டுபிடித்ததாக மகிழ்ந்து போனார். நாடகம் பார்த்தவர்களின் பாராட்டும், கைத் தட்டும், அதை உறுதி செய்தது.

அப்புறமென்ன... ஐயப்பன் நாடக குழுவில், கதிரேசனுக்கு நிரந்தர இடம் கிடைத்து விட்டது.

ஆறு மாதம் ஓடின. அன்று, அடுத்து நடத்தப் போகும் நாடகத்துக்கான ஒத்திகையில் இருந்தார், ஐயப்பன்.

அவரின் அடுத்த நாடகத்துக்கு ஒப்பந்தம் செய்ய, கோஷ்டி ஒன்று வந்திருந்தது.

வந்தவர்களை வரவேற்று, ''சொல்லுங்கப்பா,'' என்றார்.

''அது வந்துங்க...'' என இழுத்தார், ஒருவர்.

''தயங்காம சொல்லுங்க.''

''ஒண்ணுமில்ல, நம் நாடகம் நல்லா தான் இருக்கு. ஆனாலும், ரொம்ப வறட்சியா இருக்குன்னு நினைக்கிறோம். அதனால...'' என்றார், இன்னொருவர்.

''அதனால?''

''நாடகத்துல கொஞ்சம் கவர்ச்சி இருந்தா நல்லாருக்கும். பணம் கூட இன்னும் சேர்த்து தர்றோம்.''

ஐந்து பேரில் ஒருவர் கேட்டதும், சீறி எழுந்தார், ஐயப்பன்.

''என்னய்யா, யாரைப் பார்த்து என்ன சொல்ற... அப்படி ஒரு பொழப்பு, எங்களுக்கு தேவையே இல்லை. அப்படி பொழைக்கணும்ன்னும் அவசியமில்லை. நடிகன்னா மானம், மரியாதை எல்லாம் விட்டுட்டு பொழைப்பான்...

''காசு வந்தா என்ன வேணா செய்வான்னு நினைச்சுட்டியா? இந்தா உன், 'அட்வான்ஸ்' எடுத்துக்கிட்டு ஓடு,'' விட்டால் அவனை அடித்து விடுவார் போலிருந்தது. அவரை அப்போது பார்க்க, ஒரு சிங்கம் போல காட்சியளித்தார்.

''அண்ணா... கொஞ்சம் சாந்தமா பேசியிருக்கலாமே,'' என்றான், கதிரேசன்.

''இவனுங்கள சும்மா விட்டது தப்புடா, கதிரேசா. பணத்தை பார்த்தா பல்லிளிப்பேன்னு நினைச்சுட்டான் போல. கலைஞனுக்கு பணம் முக்கியமில்லைடா. சுயமரியாதை, தன்மானம், கவுரவம், யார்கிட்டயும் கூழ கும்பிடு போடாத குணம். பட்டினியா கூட இருந்துடலாம். ஆனா, தலை நிமிர்ந்து நடக்கணும். அதான் முக்கியம்,'' என்றார்.

காலம் ஓடியது. மெல்ல சமூக நாடகங்களின் மேல் மக்களின் ஆர்வம் திரும்ப, ஐயப்பனும் சமூக நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.

வழக்கம் போல அவரின் சமூக நாடகங்களும் மாபெரும் வெற்றியை பெற்று, அரங்கம் நிறைந்த காட்சிகளானது.

அன்று அவரின், 'பொன்மானை தேடி' என்ற வெற்றி பெற்ற நாடகத்தின், 100வது ஷோ. 'ஹீரோ' ஆக நடித்த கதிரேசன், வழக்கம் போல, நடிப்பில் பட்டையை கிளப்பினான்.

நாடகம் முடிந்து, அனைவரும், 'மேக் - அப்' அறையில் இருந்தபோது, திடீர் சலசலப்பு.

''அண்ணா, சினிமா இயக்குனர் சுந்தரவேல் உங்களை பார்க்க வந்துட்டிருக்கார்,'' என்று ஒருவர் சொன்னதும், ஐயப்பனால் தன்னையே நம்ப முடியவில்லை.

மிகப்பெரிய இயக்குனர், சுந்தரவேல். அவர் இயக்கிய, 37 படங்களில், 30 படங்கள், 'சூப்பர் ஹிட்...' அவரை பார்க்க, சூப்பர் ஸ்டார்களே தவம் கிடக்கின்றனர்.

எழுந்து வாசலுக்கு ஓடி, சுந்தரவேலுவை கை குலுக்கி வரவேற்று, உள்ளே அழைத்து வந்தார்.

''நாடகம் ரொம்ப நல்லாருக்குன்னு ஊரெல்லாம் பேச்சு. அதான் உங்களை பார்க்க வந்தேன். அற்புதம்...'' என்றார், சுந்தரவேல்.

கையெடுத்து கும்பிட்டு, ''நீங்க வந்து, நாடகம் பார்த்தது, பாராட்டறது எல்லாம் எங்களுக்கு பெருமை,'' என்றார், ஐயப்பன்.

''சந்தோஷம். 'ஹீரோ'வா நடிச்ச பையன் பேரென்ன?''

''கதிரேசன்!''

''அவன் நடிப்பு அபாரம். இப்ப நான் ஒரு படம் எடுக்க இருக்கிறேன். ஒரு புது முக, 'ஹீரோ' தேடிக்கிட்டிருக்கேன். நாடகத்துல நடிச்ச, கதிரேசன் தான் என் படத்துக்கு, 'ஹீரோ'ன்னு முடிவு பண்ணிட்டேன். என்ன சொல்றீங்க?'' என்றார், சுந்தரவேல்.

கேட்டதும், சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார், ஐயப்பன்.

எவ்வளவு பெரிய வாய்ப்பு இது? அவர் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டிவிட மாட்டோமா என, எத்தனையோ முன்னணி நடிகர்கள் தவம் கிடக்க, கதிரேசனுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது.

அவர் கிளம்பிய பின், ''என்னடா சொல்ற கதிரேசா?'' என்றார், ஐயப்பன்.

''பயமாவும், தயக்கமாவும் இருக்குண்ணா,'' என்றான்.

''இத பாருடா, நம் வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கறப்ப, பயமோ, தயக்கமோ இருக்கக் கூடாது. இன்றைய தேதியில், சுந்தரவேல் எவ்வளவு பெரிய இயக்குனர்ன்னு தெரியும். வலிய வர்ற வாய்ப்பை நழுவ விடாத. நீ, சினிமாவுல நடிக்கிற,'' என்றார், ஐயப்பன்.

சுந்தரவேல் இயக்கத்தில் வெளியான, அந்த படம், 'ப்ளாக் பஸ்டர்' அடித்தது.

சினிமாவுக்காக, கதிரேசனின் பெயரை ஜெயச்சந்திரன் என, மாற்றி இருந்தார், சுந்தரவேல். ஜெயச்சந்திரனுடைய நடிப்பை எல்லா பத்திரிகைகளும் புகழ்ந்து தள்ளின.

ஒரே படத்தில், ஸ்டார் நடிகனாகி விட்டான், கதிரேசன் (எ) ஜெயச்சந்திரன்.

சந்தோஷத்துடன், ''டேய் கதிரேசா... ஊர்ல எங்க பார்த்தாலும், உன்னை பற்றிய பேச்சுதான்டா. நீ பெரிய நடிகன் ஆயிட்ட. எனக்கு பெருமையா இருக்குடா,'' என்றார், ஐயப்பன்.

அவர் காலில் விழுந்து, குரல் தழுதழுக்க, ''எல்லாம் நீங்க போட்ட பிச்சைண்ணா,'' என்றான், கதிரேசன்.

''நல்லா இருடா... நீ, இன்னும் வளரணும்,'' என்று, வாழ்த்தினார்.

அதன்பின், கதிரேசன் நடித்த, 26 படங்களில், 21 படம், வெற்றி. ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின. அவன் படத்துக்கு, முதல், 25 நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஆளுயர, 'கட் - அவுட்'களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

அவன் பெயரையே சொல்ல தயங்கினர், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். ஊருக்கே அவன் ஜெயச்சந்திரனாக இருந்தாலும், ஐயப்பனுக்கு அவன் இன்னும், 'டேய் கதிரேசா... வாடா, போடா...' மரியாதை தான்.

ஒரு படத்துக்காக சொந்த ஊர் பக்கம், 'ஷூட்டிங்' நடந்தது. ஐயப்பனை வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான், கதிரேசன்.

அவரை பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. வேலை பளு. மொபைல் போனில் பேசிக் கொள்வர். பேசும்போதெல்லாம் சுகமாகவும், சந்தோஷமாகவும் தான் இருப்பதாக சொல்வார், ஐயப்பன்.

வயதான காரணத்தால், முன்பு போல் அவனை பார்க்க, அவ்வளவு துாரம் பயணம் செய்து வர முடியவில்லை என்று, பேசும்போதெல்லாம் சொல்வார்.

மாலை, 'ஷூட்டிங்' முடிந்து, ஐயப்பன் வீட்டுக்கு சென்றான், கதிரேசன். அப்போது, வீடும், அவரும், அவரது மனைவியும் இருந்த நிலையை பார்த்ததும், துாக்கிவாரிப் போட்டது.

சாதாரண ஓட்டு வீடு. கிழிந்த வேட்டி. கிழிந்து தைத்த புடவையில் அவர் மனைவியை பார்த்து கலங்கினான், கதிரேசன்.

ஒருநாள் கூட அவர், தன் நிலையை கூறாமல், நன்றாக, சந்தோஷமாக இருப்பதாக சொல்லுவாரே... அவர் பேச்சை நம்பியது தவறென புரிந்தது.

'பணம் முக்கியமில்லைடா. சுயமரியாதை, தன்மானம், கவுரவம், யார்கிட்டயும் கூழைக் கும்பிடு போடாத குணம் முக்கியம். பட்டினியா கூட இருந்துடலாம். ஆனா, தலை நிமிர்ந்து நடக்கணும். அதுதான் முக்கியம்...'

முன்பு அவர் சொன்னது ஞாபகம் வர, கண்ணீருடன் அவர் காலில் விழுந்தான்.

''ஐயா... என்னங்கய்யா இது, என்ன கோலம் இது? என்கிட்ட கூடவா கவுரவம் பார்க்கணும்,'' என்ற கதிரேசன், மேனேஜரை கூப்பிட்டான்.

''சாருக்கு, இங்க ஒரு நல்ல வீடு, விலைக்கு கிடைக்குமான்னு ஊர்காரங்ககிட்ட விசாரிங்க... நாளைக்கு, வங்கி மேனேஜரை போய் பார்த்து, ஐயா மற்றும் அம்மா பேரில் மாசா, மாசம் வட்டி வர்ற மாதிரி, ஒரு பெரிய தொகை போடணும்,'' என்றான், கதிரேசன்.

''அதெல்லாம் வேண்டாம்,'' என்றார், உறுதியாக ஐயப்பன்.

''ஐயா...'' திகைப்பாய் சொன்னான், கதிரேசன்.

''ஆமா கதிரேசா, எனக்கு எதுக்கு இப்போ இதெல்லாம்? நான் இருக்கறத சாப்பிட்டு நிம்மதியா இருக்கேன். நீ எவ்வளவு பெரிய ஆள்? ஆனாலும், 'டேய் கதிரேசா'ன்னு உன்னை இப்பவும் உரிமையோட தயக்கமில்லாம, தைரியமா கூப்பிட முடியுது.

''அதே நான், உன்கிட்ட ஏதாவது உதவி வாங்கிட்டா, என்னால அப்படி கூப்பிட முடியுமா? ஒரு தயக்கமும், பயமும் வரும். போலியா மரியாதை கொடுக்க சொல்லும். பேர் சொல்லி கூப்பிட்டா ஏதாச்சும் தப்பா நினைச்சுப்பியோன்னு யோசிக்க தோணும்.

''அதில்லாம, அடுத்தவர் பணத்துல சாப்பிடறோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி இருந்துட்டே இருக்கும். என் தன்மானம் அதுக்கு இடம் கொடுக்காதுன்னு உனக்கு தெரியாதா?''

''ஏன் அப்படி நினைக்கறீங்க ஐயா... இதை என்னோட குருதட்சணைன்னு வச்சுக்கோங்க.''

''இவ்வளவு வளர்ந்த பின்னாடியும் அதே மரியாதை, பணிவு, அன்போட இருக்கியே. உன்னை இன்னும் பேர் சொல்லி கூப்பிடற உரிமை தந்திருக்கியே. இதான் குருதட்சணை. போயிட்டு வா.''

பேசாமல் எழுந்தான், கதிரேசன்.

பத்து நாள் கடந்து, மீண்டும் ஐயப்பனை சந்திக்க வந்தான், கதிரேசன்.

ஐயப்பனையும், அவர் மனைவியையும் ஜோடியாக நிற்க வைத்து, அவர்களின் காலில் விழுந்து வணங்கினான்.

''ஐயா, முதல் முறையா ஒரு படம் தயாரிக்கப் போறேன். அதுக்கு உங்க ஆசி வேணும். ஒரு வயசான நாட்டுப்புற கலைஞர். அவரோட வாழ்க்கை முறை, வறுமை, அவருக்கு கலை மீதிருக்கிற காதல், தோல்வி, ஏமாற்றம்ன்னு வயசான கலைஞனை பற்றிய கதை இது.

''கதை சொல்றப்பவே நீங்க தான் ஞாபகத்துக்கு வந்தீங்க. நீங்க தான், கதையின் நாயகனா நடிச்சு கொடுக்கணும். உங்களுக்கு சம்பளம், ஐந்து கோடி. மறுக்காம வாங்கிக்கணும்,'' என்றான், கதிரேசன்.

''சந்தோஷமா நடிக்கிறேன். உழைக்க நான் எப்பவும் ரெடி,'' என்ற ஐயப்பனை, சந்தோஷமாக பார்த்தான், கதிரேசன்.

கே. ஆனந்தன்வயது: 45. படிப்பு: எம்.ஏ., - டி.சி.ஏ., பணி: ஓசூரில், கம்பெனி ஒன்றில் மேலாளர். சொந்த ஊர்: கூக்கடப்பட்டி, தர்மபுரி.இதுவரை, இவர் எழுதிய, 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.லட்சியம்: ஆயுள் முழுதும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.கதைக்கரு பிறந்த விதம்:கலைஞனுக்கு பெரிய வெகுமதி கை தட்டலும், பாராட்டும் தான். அத்துடன் தன்மானமும், சுயமரியாதையும் அவன் ரத்தத்தில் ஊறியது; அதை யாருக்காகவும், பணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான். இதை வைத்து ஒரு கலைஞனின் வாழ்வியலை யோசித்தேன். அப்போது பிறந்தது இக்கதை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us