PUBLISHED ON : அக் 29, 2023

பா - கே
அலுவலகத்தில், அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தோம். ஜோல்னாபையுடன் உள்ளே நுழைந்த, சினிமா பொன்னையா, என் அருகில் இருந்த மேஜை முன் அமர்ந்து, சினிமா செய்திகளை எழுத ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில், அவர் டேபிளை சுற்றி நின்று, 'இன்று, எந்த நடிகை விவாகரத்து செஞ்சாங்க, யார், யாருடன் நள்ளிரவு, 'பார்ட்டி'க்கு போனாங்க...' என்று கேட்டு, நச்சரித்துக் கொண்டிருந்தனர், உதவி ஆசிரியர்கள்.
இதில் எனக்கு, 'இன்ட்ரஸ்ட்' இல்லாததால், சற்று துாரத்தில், 'டீ கடை' பெஞ்ச் மேட்டருக்காக வந்திருந்த குப்பண்ணா அருகில் சென்று அமர்ந்தேன்.
'குப்பண்ணா சார், உங்கக்கிட்ட கதை கேட்டு, ரொம்ப நாள் ஆச்சு. ஏதேனும் தமாஷான கதை இருந்தா சொல்லுங்க...' என்றேன். ஆரம்பித்தார்:
பொதுவா நம் ஊர்ல, கணவன் மனைவிக்குள்ள சண்டை வர்றதும், கொஞ்ச நேரத்தில் அது சரியா போயிடறதும் சகஜம். சில சமயம் குடும்ப தகராறு, கோர்ட் வரைக்கும் போயிடறதும் உண்டு.
அமைதியை, சமாதானத்தை விரும்பறவங்க, நம் ஊரு பெண்கள்... அதனால தான், அவங்களைப் பற்றி கிண்டலுக்காக கொஞ்சம் குறை சொன்னா கூட, 'நாங்க என்ன அவ்வளவு மோசமாவா நடந்துக்கறோம்...' என, கேட்க ஆரம்பிச்சுடறாங்க.
ஆனா, ஜப்பான்ல இருக்கிற பெண்கள் இதுக்கு நேர்மாறாக உள்ளனர். அவங்களுக்கு இருக்கிற பெரிய குறை என்ன தெரியுமா?
'எங்க வூட்டுக்காரரு அடிக்கடி எங்ககிட்ட சண்டையே போட மாட்டேங்கறாரு... அதை நினைச்சாத்தான் எங்களுக்கு வருத்தமாயிருக்கு...' என, புலம்பறாங்களாம்.
கொஞ்ச நாளைக்கு முன், ஜப்பான்ல ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி, ஆய்வு நடத்திச்சு.
கல்யாணமான பெண்கள், 3,800 பேரை சந்திச்சு, அவங்ககிட்ட கேள்வியெல்லாம் கேட்டாங்க...
இதுல, 30 சதவீத பெண்கள் சொன்ன ஒரு விஷயம் என்ன தெரியுமா?
மாசத்துல எப்பவாவது ஒரு நாள் தான், நாங்க, எங்க கணவனோட சண்டை போட முடியுதுன்னு, ரொம்பவும் ஏக்கத்தோட சொன்னாங்களாம். 20 சதவீதம் பேர், வாரத்துல ஒரு நாளாவது, வலுவில் சென்று, கணவனோட சண்டை போட்டுடுவாங்களாம்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும், நம்மூர் சமாசாரத்துக்கு வருவோம்.
மனைவியிடம் சண்டை வராமல் இருக்க, கணவன்மார்களுக்கு சில அனுபவப்பூர்வமான ஆலோசனைகள் சொல்ல விரும்பறேன்.
* சம்சாரத்துகிட்ட பாராட்டு பெறணும்ன்னு ஆசைப்படறவங்க, முதல்ல மனைவியை கவுரவமா நடத்துங்க.
* ராத்திரியில எங்கே போறீங்க, எப்ப வருவீங்கன்னு தெளிவா சொல்லிட்டு வெளியில புறப்படுங்க.
*ஆடம்பர செலவையெல்லாம் குறைச்சுக்குங்க. சம்பாதிக்கறது நீங்களா மட்டும் இருந்தா, மனைவிக்கும் கொஞ்சம், 'பாக்கெட் மணி' கொடுங்க.
* உங்க பிரச்னை எதுவா இருந்தாலும் சரி, அவங்ககிட்ட அதைப் பத்தி பேசுங்க. அவங்க பிரச்னையை உங்ககிட்ட சொன்னா, அதை மனசார கேளுங்க. 'அதையெல்லாம் என்கிட்ட சொல்லாதே...' என, வெளியில புறப்பட்டு போயிடாதீங்க.
* குழந்தைகள் சம்பந்தமானதை அவங்க பார்த்துக்குவாங்கன்னு நினைக்காதீங்க. குழந்தைகள் பற்றிய சிந்தனை, உங்களுக்கு ரொம்பவும் அவசியம்.
* வருங்காலத்துக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கணும்ங்கற நினைப்பு, உங்களுக்கு இருக்கணும்.
* ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு ஊருக்கு போறப்பவும் சரி அல்லது திரும்பி வந்து சந்திக்கிறப்பவும் சரி, 'ஏன் அதுக்குள்ள திரும்பி வந்துட்ட. இன்னும், 10 நாள் இருந்துட்டு வரப்படாதா?' என, கேட்கக் கூடாது.
இப்ப நான் சொன்னதையெல்லாம் கொஞ்ச நாள் கடைப்பிடிச்சிப் பாருங்க... அப்புறம் வீட்டுல உங்களுக்கு பாராட்டுகள் குவியும். உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.
விபரம் தெரியாத கணவனுக்கும், விபரம் தெரிஞ்ச கணவனுக்கும் என்ன வித்தியாசம்ன்னு ஒரு பெரியவர் சொல்லியிருக்கார்.
'வாயை மூடு'ன்னு மனைவியை திட்டுவானாம், விபரம் தெரியாதவன்.
'நீ அமைதியா இருக்கறப்போ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?' என்பானாம், விபரம் தெரிஞ்சவன். எப்படி இருக்கு கதை...
- இப்படி கூறி முடித்தார், குப்பண்ணா.
பக்கத்து கேபினிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'இதுக்கெல்லாம் மசியக் கூடியவர்களா இந்த மனைவிமார்கள். பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்பதிலேயே உறுதியா இருப்பாங்க...' என்று, அலுத்துக் கொண்டார்.
'இதுதான் தமாஷ் கதையா...' என்று, நினைத்து கொண்டேன். இருப்பினும், இதைப் படிக்கும் உங்களில் யாருக்காவது பயன்படுமே!
ப
'புகழ்ச்சி என்பது ஓர் அற்புதமான மருந்து...' என்று சொல்கின்றனர், மன இயல் நிபுணர்கள்.
புகழ்ச்சி என்ற மருந்தை, நாம் சுலபமாக தயார் பண்ணலாம். தாராளமாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதற்கு காசு, பணம் செலவில்லை. ஆனால், பலன் அதிகம்.
எம்.ஆர்.காப்மேயர் என்ற உளவியல் நிபுணர் என்ன சொல்கிறார் தெரியுமா?
'பள்ளிக்கூட குழந்தைகளுக்கு இந்த மருந்தைக் கொடுங்கள். அவர்கள் நன்றாக படிப்பர்; நிறைய மதிப்பெண்கள் பெறுவர்.
'வியாபாரத்திலே உங்கள் கூட்டாளிகளுக்கு இந்த மருந்தை கொடுங்கள். அவர்கள் நன்றாக ஒத்துழைப்பர்; பணம் சம்பாதிக்க, உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
'உங்கள் உறவினர்களுக்கு, இந்த மருந்தைக் கொடுங்கள்; உங்களிடம் பாசமாக இருப்பர்.
'இந்த மருந்து உங்கள் கைவசம் இருந்தால், நீங்கள் எங்கே போனாலும் மகிழ்ச்சியை பரப்ப முடியும்.
'இந்த மருந்தை நீங்கள் இன்னொருவருக்கு கொடுக்கும் போது, உங்களுக்கும் அது போதுமான அளவுக்குக் கிடைக்கிறது. உங்களை மகிழ்வடையச் செய்கிறது. பணமும், புகழும் சேர, அது உங்களுக்கு உதவுகிறது...' என்கிறார், அந்த உளவியல் நிபுணர்.
புகழ்ச்சி என்ற மருந்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.
ஆல்பிரட் ஆட்லர் என்ற, மனவியல் வல்லுனர். அவர் என்ன செய்வார் தெரியுமா...
கவலையோடும், பயத்தோடும் இருக்கிற தன்னுடைய நோயாளிகளிடம் போய், 'நீங்கள் எல்லாம் என்ன செய்யணும்ன்னா... யாரையாவது திருப்தியடையச் செய்யணும் அல்லது யாருக்காவது மன மகிழ்ச்சியை உண்டாக்கணும்ன்னு தொடர்ந்து நினைச்சுக்கிட்டு இருங்க... அப்படியிருந்தா, 14 நாட்களில் உங்கள் குறைபாடுகளெல்லாம் நீங்கி விடும்...' என்று சொல்வாராம்.
அவர் சொன்ன மாதிரியே குறைபாடுகள் சரியாகி விடுமாம்.
அடுத்தவர்களை திருப்திப்படுத்த என்ன வழி?
பொதுவாக, அடுத்தவர்கள், நம்மிடமிருந்து எதை அதிகம் எதிர்பார்ப்பர்...
நம் புகழ்ச்சியையும், பாராட்டையும் தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
வில்லியம் ஜேம்ஸ் என்ற அமெரிக்க தத்துவ ஞானி மற்றும் மனோதத்துவ நிபுணர். அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
'மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டை பெறுவதற்காக ஏங்குவது தான்...' என்கிறார்.
இந்த ரகசியத்தை நாம் புரிந்துகொண்டால் போதும், வாழ்க்கையில் வெற்றி பெறுவது சுலபம்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
