தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

மழை துாறிக் கொண்டிருந்த ரம்மியமான ஒரு மாலை வேளை...

அலுவலக நேரம் முடிய ஐந்து நிமிடம் இருந்தபோது, சோம்பலை முறித்தபடி வந்த லென்ஸ் மாமா, 'மணி... வாப்பா, டீ குடித்துவிட்டு வரலாம்...' என, அழைத்தார்.

எனக்கும், டீ குடிக்க வேண்டும் போல் இருந்ததால், மறுப்பு கூறாமல் அவருடன் கிளம்பினேன்.

வழக்கமான கடைக்கு செல்லாமல், எங்கெங்கோ சுற்றி, அந்த குறிப்பிட்ட கடைக்கு அழைத்து வந்தார், மாமா.

சாதாரண டீக்கடையாகவும் இல்லாமல், பெரிய ஹோட்டலாகவும் இல்லாமல், நடுத்தரமாக, அதேசமயம், நவீனமயமாக இருந்தது, அந்த டீ ஷாப்.

இளைஞர் - இளைஞிகள் பட்டாளம் குழுமியிருக்க, உள்ளே சென்றோம்.

சுடச்சுட வடை, பஜ்ஜி போன்ற நொறுக்கு தீனி வகைகள், நம் கண் முன்னே எண்ணெயில் பொரித்தெடுத்து, பெரிய பெரிய தாம்பாள தட்டுகளில் கொட்ட, மளமளவென்று காலியாகிக் கொண்டிருந்தது.

நாங்கள், 'ஆர்டர்' கொடுப்பதற்கு முன்னரே, சுடச்சுட கீரை வடையும், இஞ்சி டீயும் கொண்டு வந்து, எங்கள் முன் வைத்த சர்வர், லென்ஸ் மாமாவை ஒரு, 'லுக்'விட்டு, அகன்றார். லென்ஸ் மாமாவுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது, அவரது நடவடிக்கை காட்டியது.

சுற்றியிருப்பவர்களை நோட்டம் விட்டபடி, வடை ஒரு கடி, ஒரு முழுங்கு டீ என, ரசித்து குடித்துக் கொண்டிருந்தார், மாமா.

பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த இருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தது, காதில் விழவே, கேட்க ஆரம்பித்தேன்.

'நேரம் காலம் தெரியாமல், ஆபிஸ் விட்டு கிளம்பும்போது தானா மழை பெய்யணும்...' என, புலம்பினார், ஒருவர்.

'மழையை ஏம்பா திட்டுற... கொஞ்ச மழைக்கே, தெருவெல்லாம் தண்ணீர் தேங்கி, அலங்கோலமாவதை எங்கே போய் சொல்வது. இந்த சாக்கடை நீரில் தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

'சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பி என்ன பிரயோஜனம். இதுவே, வெளிநாடு என்றால், தெருவில், வெறும் தரையில் சோறு போட்டு சாப்பிடலாம். அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும், தெரியுமா?' என, அங்கலாய்த்தார், இன்னொருவர்.

அவர்களது பேச்சு, எரிச்சல் தந்தாலும், மவுனமாக இருந்தேன்.

லென்ஸ் மாமாவுக்கோ மூக்கு விடைத்து, கண்களில் செம்மை படர, அசம்பாவிதம் ஏதாவது நடந்து விடப் போகிறதே என்று, அவரை நாற்காலியோடு சேர்த்து அமுக்கி பிடித்துக் கொண்டேன்.

அப்போது தான் அந்த அதிசயம் அரங்கேறியது.

அருகில் இருந்த இரு இளைஞர்கள், அந்த ஆசாமிகளின் எதிரில் வந்து அமர்ந்தனர்.

'என்னமோ வெளிநாட்டில் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று சொல்லிட்டு இருந்தீங்களே... என்ன அது?' என்றார், ஒரு இளைஞர்.

ஆசாமி பதில் சொல்லாமல், விழிக்க, 'பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சமீபத்தில் பேசியது, வைரலாக பரவியதே... அதை கேட்டீர்களா? அதெல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். சொல்றேன் கேட்டுக்கங்க...

'பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சமீபத்தில், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், தன் கட்சியினரிடம் பேசும்போது, 'இந்தியா, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பி, சாதனை புரிந்துள்ளது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, உலக அரங்கில் முக்கிய இடம் பிடித்து விட்டது. ஆனால், நாம சாப்பாட்டுக்காக, அடுத்த நாடுகளிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம்...' என்று கூறியுள்ளார்.

'நம் மீது தீரா பகை கொண்ட, ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரே, நம்மை புகழ்ந்து பேசியுள்ளார் என்றால், நாம் எவ்வளவு முன்னேறி உள்ளோம்.

'அதுமட்டுமா... கனடா பிரதமர், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதோடு, இந்தியா மீது குற்றம் சாட்டினாரே... அதாவது, நினைவில் இருக்கா.

'அதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரியான மைக்கேல் ரூபின், இந்தியாவோடு, கனடா மோதுவது எப்படி இருக்கிறது என்றால், யானையை வம்பிழுக்கும் எறும்பு போல் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தாரே... அதாவது தெரியுமா?

'சர்வதேச அளவில், நாம் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். நீர் என்னமோ, தெரு சரியில்லை, புண்ணாக்கு சரியில்லை என்று பேசிட்டு இருக்கீங்க. தெருவில் தண்ணீர் தேங்குவதற்கு காரணம் யார்?

'குப்பைகளையும், பிளாஸ்டிக் பைகளையும் வீசி எறிந்து, தண்ணீர் வடிய விடாமல் தடுக்கிறோம். காட்டுக் கத்தலாக கத்தும் அரசாங்கத்தோடு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஆனால், நம் இடுப்பு வேட்டி அவிழ்ந்தால் கூட, அரசு தான் வந்து, கட்டிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்...' என்று விளாசி தள்ளினார், அந்த இளைஞர்.

அந்த இரு ஆசாமிகளும் பேந்த, பேந்த விழித்தபடி, அங்கிருந்து நகர, 'ஹோ' என்று சத்தம் எழுப்பி அவர்களை கலாய்த்தது, அங்கிருந்த இளைஞர் பட்டாளம்.

படக்கென்று, நாற்காலியை விட்டு எழுந்த லென்ஸ் மாமா, அந்த இரு இளைஞர்களின் முதுகில் தட்டி, பாராட்டி அழைத்து வந்து, எங்கள் எதிரில் அமர வைத்தார்.

எங்களை பற்றி விசாரித்த அந்த இளைஞர்கள், சகஜமாக பேச ஆரம்பித்தனர்.

அவர்களை பற்றி விசாரிக்க, இரு இளைஞர்களுமே, மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், வியாபாரம் நிமித்தமாக, மூன்று தலைமுறைக்கு முன்பே, தமிழகத்தில் குடி வந்தவர்கள் என்றும் தெரிந்தது.

பிறந்தது, படித்தது எல்லாம் தமிழகத்தில் தான். வீட்டில் ஹிந்தி பேசினாலும், தமிழ் மீடியத்தில் படித்ததால், தமிழ் நன்கு தெரியும். பிசினசுக்காக ஆங்கிலமும் அறிவோம் என்று தெரிவித்தனர்.

'இந்த மாதிரி ஆட்கள் தான் நமக்கு எதிரிகள். எப்ப பார்த்தாலும், அந்த நாட்டுல அப்படி, இந்த நாட்டுல இப்படின்னு சொல்லிட்டு இருப்பாங்களே தவிர, நம் நாட்டின் பெருமையை உணரவே மாட்டார்கள்.

'அசோகர் மரம் நட்டார்னு படிச்சுக்கிட்டே, மரங்களை வெட்டி சாய்ப்பாங்க. சாலைகள் அமைத்தார்ன்னு சொல்லிட்டு, தோண்டி போட்டு நாசம் செய்வாங்க. முன்னோர்கள் வழியிலும் செல்ல மாட்டாங்க, தாங்களும் சமூக பொறுப்புடன் நடந்துக்க மாட்டாங்க.

'எங்களையும் வழி நடத்த தெரியாது. இந்த மாதிரி ஆசாமிகளால் எப்போதும் நமக்கு தொல்லை தான்...' என்றார், ஆவேசமாக ஒரு இளைஞர்.

அவ்விரு இளைஞர்களையும், 'கூல்' செய்யும் விதமாக, அவர்களது குடும்பம், வியாபாரம் பற்றி பேசி, திசை திருப்பினார், லென்ஸ் மாமா.

மழை பலமாக வலுக்க, தங்கள் காரிலேயே எங்களை அழைத்து வந்து, அலுவலக வாசலில் இறக்கிச் சென்றனர், அந்த இளைஞர்கள்.

இக்கால இளைஞர்கள், தெளிவாக சிந்திக்கின்றனர் என்று புரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us