PUBLISHED ON : நவ 19, 2023

பா - கே
சமீபத்தில், பணி ஓய்வு பெற்றார், வங்கி அதிகாரியான நண்பர். சென்னை புறநகரில் வசிக்கும் அவரை சந்தித்து, 'ரிட்டயர்மென்ட் லைப்' எப்படி இருக்கிறது என்று விசாரித்து வர, நானும், லென்ஸ் மாமாவும், ஒருநாள் மாலை, அவர் வீட்டுக்கு சென்றிருந்தோம்.
அவரது மனைவி கோவிலுக்கு சென்றிருக்க, நண்பர் மட்டும் வீட்டிலிருந்தார்.
'எப்படி பொழுது போகிறது?' என்று கேட்டேன்.
'நான் பயந்தபடி எதுவும் இல்லை. வீட்டை சுற்றி தோட்டம் போட்டு, பராமரிக்கிறேன். தினமும் காலையில், 'வாக்கிங்' மற்றும் கோவிலுக்கு செல்வது பழக்கமாகி விட்டது.
'அக்கம் பக்கம் வசிப்பவர்களில் பெரும்பாலோர், உயர் பதவியில் இருந்து, ஓய்வு பெற்று, இங்கு வீடு வாங்கி குடியேறியவர்கள் தான். அவர்களுடன் பேசுவதில், பொழுது நன்றாகவே போகிறது...' என்றார்.
எங்கள் பேச்சு குரல் கேட்டு, பக்கத்து வீட்டில் வசிப்பவர் வந்து, நண்பரிடம் எங்களை பற்றி விசாரித்தார்.
சொன்னதும், 'அடடா... உங்களை பற்றி இவர் நிறைய சொல்லியிருக்கிறார். உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்...' என்று கூறி, கை குலுக்கினார்.
வந்தவர், 'கல்லுாரி ஒன்றில் வரலாற்று பேராசிரியராக இருந்து, ஓய்வு பெற்றவர். தற்சமயம், அரசு மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்...' என, அறிமுகப்படுத்தினார், நண்பர்.
அனைவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்று அமர வைத்து, டீ போட்டு கொடுத்தார், நண்பர்.
அப்போது, 'கரன்ட்' போய் விட, இருள் சூழ்ந்தது.
'இருங்க, 'எமர்ஜென்சி லைட்' எடுத்து வருகிறேன்...' என்று கூறி, மங்கலாக எரியும், விளக்கு ஒன்றை, எங்கள் முன் வைத்தார்.
'இந்த புறநகரில் இது தான் தொல்லை. அடிக்கடி, 'கரன்ட் கட்' ஆகி விடும். இதற்கு,'சார்ஜ்' போட்டு வைக்க மறந்து விட்டேன். அதான், மங்கலாக எரிகிறது...' என்று, அலுத்துக் கொண்டார், நண்பர்.
'கரன்ட் இல்லாவிட்டால், கொஞ்ச நேரம் கூட நம்மால் இருக்க முடியலையே... அந்த காலத்தில், 'சிம்னி' விளக்கு வெளிச்சத்தில் எப்படி தான் காலம் தள்ளினரோ...' என்றார், லென்ஸ் மாமா.
'அந்த காலம் என்றதும், இரண்டாம் உலகப் போரின் போது நடந்த, ஒரு சம்பவம் படித்துள்ளேன். சொல்லட்டுமா?' என்றார், பேராசிரியர்.
'கரன்ட்' வரும் வரை, ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்க கூட முடியாது. காதிலாவது கேட்போம். சொல்லுங்கள்...' என்றார், மாமா.
கூற ஆரம்பித்தார் பேராசிரியர்:
இரண்டாம் உலகப்போர் நடந்துகிட்டிருந்த சமயம்.
ஒருநாள் நள்ளிரவு, கும்மிருட்டுல, கப்பலில், ஜப்பானிய போர் வீரர்கள், வரைபடங்களைப் பார்த்து, போக வேண்டிய திசையையும், இடத்தையும் புரிஞ்சிக்கணும். ஆனா, அந்த நேரத்துல அவங்ககிட்ட விளக்குகள் எதுவுமில்ல. ஆனாலும், படத்தை பார்க்கறதுக்கு என்ன பண்ணினாங்க தெரியுமா?
ஏதோ ஒரு பொருளை உள்ளங்கையில் எடுத்து, அதுல கொஞ்சம் தண்ணீரை விட்டாங்க. உடனே அதுலயிருந்து வெளிச்சம் உண்டாச்சு. அந்த வெளிச்சத்தின் உதவியால் வரைபடத்தைப் பார்த்துப் புரிஞ்சிக்கிட்டாங்க!
அது சரி, அவங்க கையில எடுத்த பொருள் என்ன தெரியுமா? லுாசிபெரின். சிப்ரிடினாங்கற ஓர் உயிரினத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பொருள். கடலின் ஆழமான பகுதிகளில் இந்த உயிரினம் இருக்கும். இதன் உடம்புல உள்ள சில சுரப்பிகள், லுாசிபெரின் மற்றும் லுாசிபெரோஸ்ங்கிற பொருட்களை கடல் நீரில் வெளியேற்றும். அது ஆக்சிஜனுடன் இணைந்து வினைபடும்போது, பிரகாசமான நீலநிற ஒளி உண்டாகும்.
இதைத்தான் அந்த போர் வீரர்கள், அன்றைக்கு சாமர்த்தியமா பயன்படுத்திக்கிட்டாங்க.
வெளிச்சம்ங்கறது வெப்பத்துலயிருந்து மட்டும் தான் உண்டாகுதுன்னு நினைக்காதீங்க.
சில பொருள், இன்னொரு மூல ஒளி இருக்கறப்போ மட்டும் ஒளிரும். அந்த வெளிச்சம் இல்லேன்னா ஒளிராது. இதுக்குப் பேரு தான், ப்ளோரோசென்ஸ்.
பெட்ரோலியம், குயினைன் சல்பேட், ஆவி நிலையில் உள்ள அயோடின், சோடியம், பாதரசம் இதெல்லாம் அதுக்கு உதாரணங்கள்.
இந்த வகையில் தான், சில உயிரினங்களில் வேதிவினைகள் நிகழறப்பவும் ஒளி உமிழப்படுது. இதற்கு உதாரணம், மின்மினிப் பூச்சி.
கொஞ்ச காலத்துக்கு முன், 1988ல், திருச்செந்துார் பக்கத்துல, கடற்கரையில் ஒரு அதிசய வெளிச்சத்தை பார்த்தாங்க, மக்கள்.
திருச்செந்துார், காயல்பட்டணம், வீரபாண்டியன் பட்டணம் ஆலந்தலை ஆகிய இடங்களில் கும்மிருட்டு வேளையில், கடல்ல அலை வீசறப்போ, கண்ணைக் கவரக்கூடிய பச்சை நிற ஒளி தெரிஞ்சிருக்கு.
அந்தப் பக்கத்துல உள்ள மக்கள், கூட்டம் கூட்டமா போய் நின்னு வேடிக்கை பார்த்திருக்காங்க.
கடல் அலை கரையைத் தொட்டுட்டுப் போறப்போ, மின்மினிப் பூச்சி வெளிச்சம் மாதிரி பெரிசா தெரிஞ்சுருக்கு. சிலர், அந்த கடல் நீரை ஒரு பாத்திரத்துல எடுத்து ஊற்றிப் பார்த்திருக்காங்க. அப்பவும் அந்த வெளிச்சம் தெரிஞ்சுதாம்.
மெரைன் டைனோ அண்டு லாகல்லேட்ஸ் என்ற, கடலில் வாழும் நுண்ணுயிரினம் தான், இந்த பச்சை நிற வெளிச்சத்துக்குக் காரணம்.
இதுமாதிரி ஏகப்பட்ட புழு இனங்கள், பாக்டீரியாக்கள், கடற்பஞ்சு உயிரினங்கள் எல்லாம் ஒளி உமிழக் கூடிய தன்மையோட இருக்கு.
இனக்கவர்ச்சிக்கு, இரை தேடறதுக்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வெளிச்சம் அதுங்களுக்கு உபயோகப்படுது.
இது தவிர, அது ஏன் அப்படி வெளிச்சத்தை வெளிப்படுத்தறதுன்னு கண்டுபிடிக்க முடியாத பல காரணங்களும் இருக்குன்னு சொல்றாங்க, விஞ்ஞானிகள்.
இயற்கையோட ரகசியங்களை அவ்வளவு சுலபமா கண்டுபிடிச்சுட முடியுமா என்ன?
இருந்தாலும், மனுஷன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன் மாதிரி பேசிக்கிட்டிருப்பான். அது அவன் சுபாவம்.
- பேராசிரியர் கூறி முடிக்கவும், நண்பரின் மனைவி வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.
எங்களை வரவேற்று, 'இந்த, 'கரன்ட்' எப்ப வரும், போகும் என்றே சொல்ல முடியாது. இந்தியா ஒளிரும்ன்னு சொல்றாங்களே தவிர, சீரான மின்சார வினியோகத்தை தர முடியலையே...' என்று சலித்துக் கொண்டார்.
'பேராசிரியர் இப்ப தான், ஒளிரும் பூச்சி பற்றி ஒரு தகவல் சொல்லியிருக்கிறார். அது எங்கிருக்கிறதுன்னு விசாரிச்சுட்டு, ஒரு கூடை நிறைய வாங்கி வந்து, உங்கள் வீட்டு தொட்டியில் கொட்டுகிறேன். 'கரன்ட்' போகும் இரவு நேரத்தில், அந்த பூச்சிகளால் வெளிச்சத்தை பெற முடிகிறதா பார்ப்போம்...' என்றார், மாமா.
இதைக் கேட்டு சிரித்தவர், 'உங்களுக்கு எப்பவும், 'குசும்பு' தான். வராதவங்க வந்திருக்கீங்க... கொஞ்சம் இருங்க, டிபன் தயார் செய்யறேன். சாப்பிட்டுட்டு போகலாம்...' என்றவாறு, சமையல்கட்டுக்குள் நுழைந்தார், நண்பரின் மனைவி.
அவருக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல், நண்பரிடம் விடைபெற்று, வீடு திரும்பினோம்.
