தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (3)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (3)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (3)


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயிலில் பயணம் செய்தபோது, ஏகப்பட்ட நகைகள் அணிந்த பாகவதரை பார்த்து சிரித்த பெண்மணி கூறியதைக் கேட்டு, அவரை உற்றுப் பார்த்தார்.

வாக்குவாதம் நடக்கப் போகிறதோ என்று அனைவரும் நினைத்திருந்த சமயத்தில், பாகவதர் சிரித்தபடியே, காதிலிருந்த வைர கடுக்கண் மற்றும் கையிலிருந்த வைர சங்கிலி ஆகியவற்றை கழற்றி, வேஷ்டியின் மேல் முனையில் முடிந்து கொண்டார்.

பிறகு, அப்பெண்ணிடம், 'முகத்தில், லட்சுமி களை தாண்டவமாடுகிறது. நெற்றிப் பொட்டு, பெரிய பூஷணம் போல் தோற்றமளிக்கிறது. மெலிந்த ஜரிகை கரை போட்ட இந்த வெள்ளை புடவையில், உங்களைப் பார்க்கும்போது, அன்னை சரஸ்வதி போன்றே தோன்றுகிறது. என் வாழ்க்கையில் இன்று முதல் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளேன்...' என்றார், பாகவதர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, வைர கடுக்கண் மற்றும் கையில் வைர சங்கிலி அணிவதை தவிர்த்து விட்டார், பாகவதர்.

எஸ்.ஜி.கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் ஜோடி போல், பாகவதர் - எஸ்.டி.சுப்புலட்சுமியும் அக்காலத்தில், பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர்.

பாகவதரோடு பல நாடகங்கள் மற்றும் முதல் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து, வெற்றி ஜோடிகள் என, நாடகம் மற்றும் சினிமா உலகில் புகழ்பெற்றனர்.

பவளக்கொடி மற்றும் நவீன சாரங்கதாரா ஆகிய இரு படங்களுமே வசூல் மற்றும் புகழில் பெருமளவில் பேசப்பட்டன.

'சினிமா பியூட்டி, முல்லைச் சிரிப்பழகி...' என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர், எஸ்.டி.சுப்புலட்சுமி. நார்ட்டன் சுப்புலட்சுமி என்ற சிறப்பு பெயரும் அவருக்கு உண்டு.

அதாவது, அந்த காலத்தில், நார்ட்டன் என்ற வெள்ளைக்கார வக்கீல் இருந்தார். அவரது வாதத் திறமையும், குறுக்கு விசாரணை செய்யும் சாமர்த்தியமும், எதிரணியில் இருக்கும் எத்தகைய வக்கீலையும் திணறடித்து விடுமாம். அப்படிப்பட்ட திறமை நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இருந்ததால், அப்படி அழைத்தனர்.

கடந்த, 1935ல் வெளிவந்த படங்களில், சிறந்ததாக, நவீன சாரங்கதாராவும், சிறந்த நடிகராக, பாகவதரும், சிறந்த நடிகையாக, எஸ்.டி.சுப்புலட்சுமியும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அழகு, வசன உச்சரிப்பில் தெளிவு, அபார நடிப்பாற்றல், சமயோசிதமாக பேசுவதிலும், நடிப்பதிலும் பெரும் திறமை மற்றும் கதாகாலட்சேபம் செய்வது என, பண்முகம் கொண்டு, தன்னிகரற்று விளங்கினார், எஸ்.டி.சுப்புலட்சுமி. காலட்சேப கலா பூஷணம் பனிபாய் என்ற வித்வானிடம் முறையாக பயின்றவர். பாகவதரின் திருமணத்தில், எஸ்.டி.எஸ்., கதாகாலட்சேபம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அக்கால, நாடகங்களில், கதாநாயகனும், கதாநாயகியும், கதைக்கு சம்பந்தம் இல்லாமல், ஒருவரை ஒருவர் மடக்குவதற்காக, வேடிக்கையாக, சொந்த வசனங்களையும் எடுத்து விடுவர். ரசிகர்களும், இதை பலமாக கரகோஷம் செய்து ரசிப்பர்.

அப்படி, பாகவதரும், எஸ்.டி.சுப்புலட்சுமியும், நாடகங்களில் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு பேசும், ஸ்பெஷல் வசனங்கள் மிகவும் பிரபலம்.

கடந்த, 1952ல் வெளிவந்தது, பாகவதரின், அமரகவி படம். வழக்கம்போல், அருமையான பாடல்கள் நிறைந்த படமாக அமைந்தது.

அமரகவி படத்திற்கு பிறகு, எப்போதும் போலவே, நாடகம் மற்றும் கச்சேரி என்று முழு வீச்சில் ஈடுபட்டார், பாகவதர்.

இசைப்பேரரசி, எம்.எஸ்.சுப்புலட்சுமியை, இயக்குனர் கே.சுப்பிரமணியம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியது, எஸ்.டி.சுப்புலட்சுமி தான். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வக்கீலுக்கு படித்து, சிறிது காலம் வழக்கறிஞராக தொழிலும் செய்து, அதன்பின், சினிமாவை தன் முழுநேர தொழிலாக கொண்டவர், இயக்குனர் கே.சுப்பிரமணியம். மிகவும் புகழ்பெற்ற, பாரம்பரியமிக்க, செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தென் மாநிலத்தில், முதன் முதலாக டாக்குமென்டரி படங்களை எடுத்தவர் இவரே.

கலைகளில் தீராத ஆர்வம் கொண்டவர், சுப்பிரமணியம். வக்கீல் தொழிலில் நிறைய சம்பாதித்தும், சினிமா ஆர்வத்தால், வக்கீல் தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு, முழுநேர சினிமாக்காரர் ஆனவர்.

இயக்குனர் கே.எஸ்., பற்றி ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், ஏழிசை மன்னர், பாகவதரை சினிமா உலகில் அறிமுகப்படுத்தியதும், இவர் தான்.

அந்த காலத்தில், காரைக்குடியில், இரண்டு நகரத்தார் நண்பர்கள் இருந்தனர். ஒருவர், அழ ராம அழகப்ப செட்டியார்; மற்றொருவர், மானகிரிலேனா என்றழைக்கப்பட்ட லட்சுமணன் செட்டியார்.

'பவளக்கொடி' நாடகத்தை பற்றி கேள்விப்பட்ட நண்பர்கள் இருவரும், அதை படமாக எடுக்கலாம் என முடிவு செய்து, இயக்குனராக சுப்பிரமணியத்தையே போடுவதென்று தீர்மானித்தனர்.

மூவரும் சென்று, 'பவளக்கொடி' நாடகத்தை பார்த்தனர்.

இனி, நடந்ததை, இயக்குனர் சுப்ரமணியனின் வாய்மொழியிலேயே பார்ப்போம்...

'அச்சமயம், காரைக்குடியில், 'பவளக்கொடி' நாடகம் நடந்து கொண்டிருந்தது. போய் நாடகத்தை பார்க்கலாம் என்று அழகப்ப செட்டியாரும், லட்சுமணன் செட்டியாரும், என்னை கூப்பிட்டனர். நாடகம் எப்படித்தான் இருக்கிறது பார்க்கலாமே என, நானும் அவர்களோடு போனேன்.

'நாடகத்தில், அர்ஜுனனாக, ஒரு கட்டழகு வாலிபர், நெஞ்சைத் தொடும் இனிய குரலில் பாடியதைக் கேட்டு பரவசமானேன்.

'அவரது பாட்டுகளை கேட்கவே, தினசரி பெரும் கூட்டம் வருகிறது என்றும் கேள்விப்பட்டேன். அந்த நாடகத்தை தான் நாங்கள் படமாக எடுத்தோம்...' என்று கூறியுள்ளார், சுப்பிரமணியம்.

இதில், என்ன விசேஷம் என்றால், பாகவதர், எஸ்.டி.எஸ்., தவிர, இயக்குனர் கே.சுப்பிரமணியத்திற்கும், பவளக்கொடி தான் முதல் சினிமா.

பாகவதரின், பரம ரசிகரான ஹரிராம் சேட் பற்றி...

— தொடரும்

அக்காலக் கட்டத்தில், பெரும்பாலான படங்கள், பம்பாய், புனா, கல்கத்தா போன்ற நகரங்களில் தான் எடுக்கப்பட்டன. ஆனால், சுப்பிரமணியமோ, சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்று முடிவு செய்து, அடையாறில் அப்போதிருந்த மீனாட்சி சினிடோன் என்ற ஸ்டூடியோவில், படப்பிடிப்பை நடத்தினார்.அந்த ஸ்டூடியோ தான் பிறகு, சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ், நெப்டியூன் ஸ்டூடியோஸ் என்றெல்லாம் கைகள் மாறி, முடிவாக, எம்.ஜி.ஆரிடம் வந்து சேர்ந்து, சத்யா ஸ்டூடியோஸ் என்றானது. இன்று, அது, எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரியாக மாறி இருக்கிறது.

எஸ்.கார்முகிலோன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us