sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 04, 2011

Google News

PUBLISHED ON : செப் 04, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி விட்டது. பல பொறியியல் பட்டதாரிகள், தம் படிப்புக்குத் தொடர்பில்லாத, 'மார்க்கெட்டிங்' பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதே நிலை, கம்ப்யூட்டர் படிப்பு முடித்தவர்களுக்கும் வந்து விட்டது.

மருத்துவப் படிப்போ கேட்கவே வேண்டாம். சாதாரண நிலையில் அதிகம் பெயர் பெறாத மருத்துவக் கல்லுரிகளில், ஒரு சீட்டின் விலை, 20 - 25 லட்ச ரூபாயும், பெயர் பெற்ற கல்லூரிகளில், 60 லட்ச ரூபாயும் போகிறது. இது போக ஐந்து வருட படிப்பிற்கு, வருடம் இரண்டு லட்ச ரூபாய் வீதம், 10 லட்ச ரூபாய் செலவாகும். வெறும் எம்.பி.பி.எஸ்.,க்கு இன்று மதிப்பில்லை; எம்.எஸ்.,ஸோ, எம்.டி.,யோ முடிக்க வேண்டும். அதற்கு, 30 லட்ச ரூபாய் குறைந்தபட்சமாகத் தேவை.

ஆக, சாதாரண மருத்துவக் கல்லூரியில், ஏழு வருடங்கள் படித்து, முழுமையான ஒரு டாக்டராக வெளி வர, 70 - 75 லட்சம் ரூபாய் தேவை.

சரி... செலவு செய்தாயிற்று... என்ன சம்பளம் கிடைக்கும்?

அரசாங்க வேலை வேண்டாம்... புது வரவுகளுக்கு, தனியாரிடம் என்ன சம்பளம் கிடைக்கும்? 5,000 - 6,000 ரூபாய் - சென்னை நிலவரப் படி கிடைக்கிறது! 40 வயது ஆகும் போது தான், ஒரு டாக்டரால் நாலு காசு பார்க்க முடிகிறது!

இதுவே, போட்டியில்லாத கிராமப்புறத்தில் ஒரு, 'ஷட்டர் கிளினிக்' (10 அடிக்கு, 10 அடி இடம்) போட்டால், 20 - 30 ஆயிரம் ரூபாயை எம்.பி. பி.எஸ்., டாக்டர் கூட சம்பாதிக்க முடியும் - ஆனால், கிராமத்தில் பணியாற்ற, 95 சதவீதத்தினர் விரும்புவதில்லையே! போகட்டும் —

கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்புகள் படித்தவர்களுக்கு உடனடி வேலை... உள்நாட்டில் என்றால், 20 - 30 ஆயிரம் ரூபாய் சம்பளம்... வெளிநாடுகளில் வேலை கிடைத்து விட்டாலோ மாதம், இரண்டு லட்சம் ரூபாய் என்ற நிலையும் மாறி விட்டது. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது... அப்படியே கிடைத்தாலும் 3,000 - 3,500 ரூபாய்க்கு, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்கும் நிலை உள்ளது.

நிலைமை இப்படி மோசமாக இருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கயவர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.

காசைக் கொட்டி, மூளையைத் தீட்டி, கஷ்டப்பட்டு படித்து, வெற்றி வாகை சூடிய இளைஞர்களை, அதைரியப்படுத்தும் விதமாக இதை எழுதவில்லை... 'எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்...' என்ற எண்ணத்தில் ஏமாறாமல், எச்சரிக்கையாக இருக்கவே எழுதுகிறேன்...

சென்னையில் தங்கி வேலை தேடி வரும் கிராமத்து பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் எழுதிய எச்சரிக்கைக் கடிதம் இது... படியுங்கள்...

அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு,

என் பெயர் ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) நான் கிளின்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) பொறியியல் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளேன்.

சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளைப் பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உங்கள் பணி தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது! அந்த வகையில், என்னைப் போன்ற படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களை ஏமாற்றும் போலியான, 'கன்சல்டன்சி' அமைப்புகளைப் பற்றி தங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தற்போது சென்னையில் தங்கி, வேலை தேடி வருகிறேன். கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், கோவையில் உள்ள ஒரு கன்சல்டன்சியின் விளம்பரம், நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது; நான் விண்ணப்பித்து இருந்தேன். ஒரு வாரத்தில் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில், ஐநூறு ரூபாய் மற்றும் சான்றிதழ் நகல்களை நேரிலோ அல்லது மணியார்டர், தபாலிலோ அனுப்பும்படி இருந்தது.

ஆனால், என் நண்பர்கள் சிலர், 'இது ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்கும்; பணம் அனுப்ப வேண்டாம்...' என்று கூறினர்; அதனால், நான் பணம் அனுப்பவில்லை. ஆனால், அடுத்த இரண்டு வாரத்தில் மறுபடியும் ஒரு தபால் வந்தது. அதில், என் தகுதிக்கேற்ற வேலை தயாராக இருப்ப தாகவும், 1,950 ரூபாய் நேரில் கொண்டு வரும்படி கேட்டு இருந்தனர்.

நான், தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டேன். கடிதத்தில் உள்ளதையே, தொலைபேசியிலும் கூறினர். பணம் கட்டினால் பெங்களூருவில் ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று கூறினர். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்த காலத்தில், இவ்வளவு எளிதாக வேலை கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு 2,000 ரூபாயை வீட்டில் வாங்கி, என் கூடப் படித்த நண்பனுடன் கோவை சென்றேன்.

அங்கு, 1,950 ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு வாரத்தில் பெங்களூரு அழைத்துச் சென்று வேலையில் சேர்த்து விடுவதாகக் கூறினர். மேலும், என் கூட வந்த நண்பனையும் மூளைச்சலவை செய்து, இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். வேலை பற்றிய கனவுடன் ஊர் திரும்பினோம்.

என் நண்பன் பணம் கட்டாததால், அவன் கட்டியவுடன் இருவரையும் சேர்த்து பெங்களூரு அனுப்புவதாக கூறினர். இரண்டு வாரத்திற்குப் பின், நானும், நண்பனும் மறுபடியும் கோவை சென்றோம். என் நண்பனும், 1,950 ரூபாய் கட்டினான். ஒரு வாரத்தில் வேலையில் சேர்வதற்காக உத்தரவு வரும் என்று கூறினர்.

கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தோம். இரண்டு, மூன்று வாரங்களாகியும் ஒரு பதிலும் இல்லை. அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறு கூறினர். இரண்டு மாதம் சென்றது.

இந்த இரண்டு மாதமும், ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என் நண்பனும், நானும் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தோம். அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை.

நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டதால், அடுத்த மாதம் பெங்களூருவில் உள்ள ஐ.டி.சி.,யில் கால் சென்டருக்கான எழுத்து தேர்வை எழுதுமாறு கூறினர். அதற்கு அவர்களிடம் இருந்து முறையான தகவல் இல்லை. எந்த விதத்தில் அவர்களை நம்பி பெங்களூரு செல்வது என்று தெரியாமல், அவர்களிடம் விசாரித்ததற்கு எரிந்து விழுந்தனர். அந்த தேர்வை எழுதினால் மட்டும் போதும், ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

மறுபடியும் நாங்கள் நம்பிக்கை கொண்டு பெங்களூரு சென்றோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, இந்த, 'கன்சல்டன்சி'க்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று! அந்த தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம், தினமும் அந்த தேர்வு நடக்கிறது என்று அங்கு போய் தான் தெரிந்து கொண்டோம்.

பெங்களூருவில் இருந்து கோவையை தொடர்பு கொண்டோம். அதற்கு அவர்கள், எங்களை ஊருக்குப் போக கூறினர். ஒரு வாரத்தில் வேலைக்கான உத்தரவு வரும் என்றனர்; ஆனால், மறுபடியும் நாங்கள் ஏமாந்தோம். மறுபடி, மறுபடி தொடர்பு கொண்டாலும், 'ஒரு வாரத்தில் வேலை கிடைத்து விடும்...' என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டனர்.

விரக்தியின் உச்சத்தில், நானும், என் நண்பனும் தற்போது சென்னையில் தங்கி வேலை தேடி வருகிறோம். இப்போது தான் இந்த போலியான, 'கன்சல்டன்சி' பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான், என் நண்பன் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ இளைஞர்கள் எங்களைப் போல போலியான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, பணத்தைத் தொலைத்து விட்டு நிற்கின்றனர்.

தமிழக அரசு ஏதாவது செய்து, போலி, 'கன்சல்டன்சி'க்களுக்கு தடை விதித்தும், 'கன்சல்டன்சி'க்களை முறைப்படுத்தியும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.

படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, இந்த மாதிரி போலியான அமைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதையும் தங்களின் சேவைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

'புரொபஷனல் கோர்ஸ்' முடித்த பட்டதாரி இளைஞர்களே... இதைப் படித்த பின்னும் கவனமின்றி செயல்பட்டு, நொந்து போகாதீர்கள்!

***






      Dinamalar
      Follow us