
*டி.முரளி, திருப்பூர்: அப்பா, அம்மா விருப்பத்திற்காக, தான் விரும்பும் பெண்ணை கைவிடுவது பாவமா?
பாவமோ - புண்ணியமோ தெரியாது. ஆனால், நம்பிக்கை துரோகியாகிறார் - நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், அடுத்த சில மாதங்களிலேயே துன்பம் அடைவதைக் கண்டிருக்கிறேன்!
***
*என்.சாய் சரவணன், செங்கல்பட்டு: அந்துமணியின் படங்களைப் பார்க்கும் போது, 'வெயிட்' பார்ட்டியாக இருப்பார் போல தெரிகிறதே...
உண்மையிலேயே சொல்கிறேன்... என் உயரத்திற்கேற்ற, 'வெயிட்'டில் தான் இருக்கிறேன்... இதை டாக்டர் நண்பர் ஒருவர் கூட சமீபத்தில் உறுதி செய்தார். பத்து ஆண்டுகளாக அதே, 69 கிலோதான். தீர்ந்ததா சந்தேகம்!
***
** எம்.திருச்செல்வம், மானாமதுரை: முடிவுகள் எடுப்பதில், பிரச்னையை எதிர் கொள்ள தயங்குவதில் முதலிடம் ஆணுக்கா, பெண்ணுக்கா?
ஆண்களுக்குத்தான்... சைக்கிள் ஓட்டுவது, கார் - பஸ் ஓட்டுவதையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்... சீரான வேகத்தில், சடக், படக் என்று பிரேக் போடாமல், 'பாம்... பாம்...' என காது பிளக்க ஹாரன் அடிக்காமல், அருகில், எதிரில், பின்னால், பக்கவாட்டில் என ஏற்படும் டிராபிக் பிரச்னையை சாதுர்யமாக கையாண்டு, 99 சதவீதம் விபத்தே இல்லாமல் டிரைவ் செய்வது பெண்கள் மட்டும்தான்; இதற்கு எதிர்மறை ஆண்களே!
***
*கே.சோமசுந்தரம், பி.என்.பாளையம்: யாரை நினைத்தால் சிரிப்பாக வரும்?
காசு கொடுத்து, அடைமொழி பட்டங்களை வாங்கிக் கொள்பவர்களை!
***
** கு.ஜெயகுமார், திருவள்ளூர்: வருமானத்திற்கு தக்கவாறு செலவை வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது செலவுக்கு தக்க வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமா?
முதல் வகையினர் புத்திசாலிகள்; இரண்டாம் வகை ஆசாமிகளே சாமர்த்தியசாலிகள்... இரண்டும் இல்லாமல், கடன் வாங்கி செலவு செய்பவர்கள் ஊதாரிகள், ஏமாளிகள், தற்பெருமை பிடித்து அலைபவர்கள்!
***
*எஸ்.சவுரிராஜன், விழுப்புரம்: உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும்?
நட்ட நடு இரவில், காட்டுக்கு கூப்பிட்டால் கூட, உடன் வர வேண்டும். இக்கால நண்பர்கள் ஊட்டிக்கு கூப்பிட்டால் மட்டுமே வருகின்றனர்.
***
** கி.ராதாகிருஷ்ணன், சென்னை: எத்தனை ஆண்களுக்கு கற்பனை செய்து வைத்த மனைவி அமைகிறார்?
'எதிர்பார்த்தது போல இல்லேப்பா...' என்ற பதிலைத்தான், 99.99 சதவீத ஆண்கள் சொல்கின்றனர். 'கற்பனை செய்தது போலவே மனைவி அமைந்து விட்டாள்!' எனக் கூறும் அந்த, 0.1 சதவீத ஆளை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. பெண்கள் இடையேயும் இந்த மனக்குறை உள்ளதை, அவர்கள் எனக்கு எழுதும் கடிதம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
***