sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உயிரே உனக்காக.... (39)

/

உயிரே உனக்காக.... (39)

உயிரே உனக்காக.... (39)

உயிரே உனக்காக.... (39)


PUBLISHED ON : செப் 04, 2011

Google News

PUBLISHED ON : செப் 04, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரிமாவை அழைத்து செல்ல, விமான நிலையத்திற்கு வந்திருந்தார் வைத்தீஸ்வரன். தன்னை அழைத்து செல்ல, நரேன் நிச்சயம் வருவான் என எதிர்பார்த்து வந்த மதுவிற்கு, இது சற்று ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் இருந்தது.

''வா மது... உன்னை மறுபடியும் அமெரிக்காவில் வரவேற்பதில், நான் சந்தோஷப்படுகிறேன்.''

''சார்... சந்தோஷங்களைப் பிறகு கொண்டாடலாம். கவிதா எப்படி இருக்கிறாள்? முதலில் அதைச் சொல்லுங்கள்.''

''மது... எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது.''

''என்னுடைய கேள்வியில் ஆச்சரியப்படும்படி என்ன இருக்கிறது சார்?''

''ம்... நீ, முதலில் நரேனைப் பற்றி எதுவும் விசாரிக்காமல், கவிதாவைப் பற்றி விசாரிப்பது தான்; ரியலி சர்ப்ரைசிங்.''

மதுரிமா தனக்குள் யோசித்தாள்...

'நான் மாறி இருக்கிறேன் என்பதை நரேனுக்கும் முன்பாக முதலில், இவருக்குப் புரிய வைத்துவிட வேண்டும்...' இந்தத் தீர்மானத்திற்கு வந்தவளாய், அவருக்கு பதில் சொன்னாள் மது...

''சார்... முதலில் நான் நல்ல மனுஷியாக இருக்க ஆசைப்படுகிறேன். ஒரு நல்ல மனுஷி, நிச்சயம் நல்ல மனைவியாகவும் இருக்க முடியும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.''

மதுவின் பதிலில் சந்தோஷப்பட்டார் வைத்தீஸ்வரன்.

''குட்... உனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நான் பாராட்டுகிறேன் மது.''

''மாற்றம் ஒன்றைத் தவிர, மற்ற எல்லாமே மாறக் கூடியது என்று, அவர் அடிக்கடி சொல்வார். ஒன்றைப் புரிந்து கொள்ளும் போது, அது பற்றிய மாற்றம் இயல்பாகவே வந்து விடுகிறது.''

''உண்மைதான் மது... ஆனால், புரிந்து கொள்ள தவறும் போதும், தாமதமாகும் போதும், அந்த மாற்றத்திற்காக நாம் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. இது, நம் எல்லார் வாழ்க்கையிலு<ம் நிகழும் மிகப்பெரிய சோகம்.''

''ஒப்புக் கொள்கிறேன். நான் மாறுவதற்காக கவிதா, ஒரு கொலைக் குற்றவாளியாக மாற வேண்டியதாகி விட்டது. கவிதா கொலைக்காரியாக மாறுவதற்கு, நான் தான் காரணமோ என்ற குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டு, என்னைத் துன்புறுத்துகிறது.''

''இதில் நீ வருத்தப்பட ஒன்றுமில்லை மது. நீ கவிதாவை புரிந்து கொண்ட மாதிரி, கவிதாவும், அவள் கணவன் ஆண்டர்சனை புரிந்து கொண்டதன் விளைவுதான் இந்தக் கொலை. வாழ்க்கையின் போக்கில் சம்பவங்கள் அவரவர் வினைப் பயன்களுக்கு ஏற்ப, தாமாக அமைகின்றன.''

அவர்கள் இருவரும் பேசியபடி கார் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தனர். மதுரிமா காரின் பின் சீட்டில் ஏறி அமர, டிரைவர் சீட்டில் அமர்ந்தார் வைத்தீஸ்வரன். அவரது மொபைல் போன் ஒலித்தது.

''நரேன்... மது வந்தாச்சு. போலீஸ் விசாரணை முடிஞ்சு போச்சா... கவிதாவை நாளைக்கு கோர்ட்டுக்கு கொண்டு வராங்களா... ஓ.கே., நானும், மதுவும் வீட்டுக்கு வந்துடுறோம்.''

நரேனிடம் பேசிவிட்டு, வைத்தீஸ்வரன் போனைத் துண்டித்து விட, நரேன், தன்னுடன் பேசவில்லை என்பது மதுவிற்கு சற்று வருத்தமாக இருந்தது.

காரை ஸ்டார்ட் செய்தார் வைத்தீஸ்வரன். கார் விமான நிலையத்திலிருந்து வெளியேறி, வழுவழுப்பான சாலையில் வேகமாக ஓட ஆரம்பித்தது.

காரில் மவுனமாக அமர்ந்து வந்தாள் மதுரிமா. அவள் மனதுக்குள், ஒரே ஒரு கேள்வி மட்டும் மிகப்பெரிதாக எழுந்து, அவளை குடைந்து கொண்டே இருந்தது.

''மது... நரேனைப் பற்றி என்னிடம் கேட்பதற்கு, வேறு ஏதாவது விஷயங்கள் உன்னிடம் இருக்கா?''

''ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... என்னை மிகவும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் அது.''

''எதையும் மனசுக்குள் வைத்துக் கொண்டு சிரமப்படாதே... அதனால், எந்தப் பயனும் இல்லை. எப்போதும் வெளிப்படையா இருக்கப் பழகிக் கொள்; எல்லாமே தெளிவாகி விடும். என்ன விஷயம் அதுன்னு நானே சொல்லட்டுமா... 'நரேனால், எப்படி உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடிந்தது?' இதுதானே உன்னோட கேள்வியும், யோசனையும்?''

ஒரு சில வினாடிகளுக்கு மிரண்டு போய் அமர்ந்திருந்தாள் மது. எப்படி இந்த மனிதரால், பிறர் மனதை துல்லியமாக கணக்கிட முடிகிறது. இவர் சாதாரண மனிதர் அல்ல. ஆச்சரியத்துடன் கேட்டாள் மது...

''எப்படி சார் இத்தனை சரியாகக் கண்டு பிடித்தீர்கள்?''

''ரொம்பவும் சிம்பிள் மது... உயிருக்கு உயிராய் உண்மையாக நேசிக்கிற இரண்டு உள்ளங்களுக்கு இடையே, இதுதான் மிகப்பெரிய உறுத்தலாக இருக்கும்.''

''ரொம்பவும் சரி. நரேன் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை என்னால், உண்மையிலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை சார். எப்படி அவரால் முடிந்தது?''

''அதை அனுப்பியது நரேன் அல்ல; நான் தான்.''

''நீங்களா... நீங்கள் எதற்காக அதைச் செய்தீர்கள். இதில், உங்களுக்கு என்ன லாபம் சார்?''

''மது... வாழ்க்கை என்பது, எப்போதும் லாப - நஷ்டக் கணக்குப் பார்க்கும், ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் அல்ல. நீ, நரேனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப் போகிறாய் என்பதை அறிந்ததும், நான் யோசித்துப் பார்த்தேன்...

''ஆண்டர்சனை, கவிதா கொலை செய்ததற்கே, நீ தான் காரணமென்று, குற்ற உணர்வில் துன்புறுவதாக சொன்னாய் அல்லவா. நீ காரணம் இல்லாத ஒன்றே, உன்னை இத்தனை கஷ்டப்படுத்தும் போது, நீ விவாகரத்து நோட்டீசை அனுப்பி இருந்தால், அந்தக் குற்ற உணர்வு, காலம் பூராவும் உன்னை என்ன செய்திருக்கும்? உன் வாழ்க்கையின் சந்தோஷங்கள் அனைத்தையும், குழி தோண்டிப் புதைத்திருக்கும்.''

வைத்தீஸ்வரன் சொல்லும் யதார்த்தம் மதுவிற்குப் புரிந்தது. அதிர்ச்சியில் மது மவுனமாக இருக்க, அவரே தொடர்ந்து பேசினார்...

''ஏதோ ஒரு அவசரத்தில், உன் அம்மாவின் பேச்சைக் கேட்டு, அவ்வளவு பெரிய தவறை நீ செய்வதில் எனக்கு சம்மதமில்லை. அதனால்தான், நீ அந்த தவறை செய்யக் கூடாது என்பதற்காக, நீ நரேனைப் பற்றி தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று, நான்தான் நரேனை வற்புறுத்தி செய்ய வைத்தேன். நரேன், ஒரு துளியும் விருப்பமின்றி, என் கட்டாயத்தின் பெயரில், பழியைத் தன் மேல் போட்டு, இதைச் செய்தான். ரியலி ஹீ ஈஸ் கிரேட்.''

அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதுரிமா. அந்த நிமிடத்தில் அவளது கணவன் நரேனும், அவனது எம்.டி., வைத்தீஸ்வரனும் அவள் மனதில் மிகவும் உயர்ந்து நின்றனர். மதுவிற்கு நரேனைப் பற்றி நினைக்க, நினைக்கப் பெருமையாகவும், அவனைத் தவறாகப் புரிந்து, சந்தேகித்த தன்னை நினைத்து, வெட்கமாகவும் இருந்தது. அவளது தவறுக்காக நரேனைக் கட்டிப் பிடித்து, அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழ வேண்டும் போல் தோன்றியது.

கார் காம்பவுண்டிற்குள் நுழைந்து, போர்டிகோவில் வந்து நின்றது. அவர்களின் வருகைக்காக நரேன் காத்து நின்றிருக்க, காரின் கதவைத் திறந்து, வேகமாக அவனை நோக்கி ஓடிச் சென்ற மது, அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். அவர்கள் எதிரே வைத்தீஸ்வரன் நிற்பதை மறந்தவர்களாய், இருவருமே ஒரு சில நிமிடங்களுக்கு இடைவெளி அற்ற அணைப்பில் கட்டுண்டு நின்றனர்.

''என்ன மன்னிச்சிடுங்க!''

''சரி... சரி... அழாதே மது. இனிமேல் நீ அழக் கூடாது; நான், உன்னை அழவிட மாட்டேன்.''

மதுவை அணைத்தபடியே, நரேன் அவளை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அவர்களை வைத்தீஸ்வரன் தொடராமல், போர்டிகோவில் நின்றபடியே சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். அவர்கள் இருவரைக் காட்டிலும், அதிகமான சந்தோஷம் அவர் மனசுக்குள் பரவுவதை உணர்ந்தார் வைத்தீஸ்வரன்.

அன்று மாலை —

காவல் நிலையத்தில் ரிமாண்டில் இருக்கும் கவிதாவை சந்திக்க நரேனும், மதுரிமாவும் வந்திருந்தனர்; வைத்தீஸ்வரன் வரவில்லை. சிறைக் கம்பிகளை, இரு கைகளாலும் இறுகப் பற்றியபடி நின்று, மதுரிமாவை வரவேற்றாள் கவிதா...

''மது... நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!''

''என்னால் சந்தோஷமா இருக்க முடியலையே கவிதா. நம்ம சந்திப்பு இப்படி இருக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. கவிதா... ஏன் அவசரப்பட்டுட்ட?''

''இல்ல மது... நான் அவசரப்படல, எப்பவோ நடக்க வேண்டிய ஒன்று, ரொம்பவும் தாமதமா நடந்திருக்கு.''

''நீ செய்தது தவறு. எல்லா கேள்விகளுக்குமே விடையைக் கண்டுபுடிச்சுடணும்ன்னு அவசியமில்லை. சில கேள்விகள் கேள்விகளாகவே இருக்கிறதும், ஒரு மாதிரியான விடைதான். அந்தக் கேள்விகளை கேள்விகளாகவே விட்டுடணும்.''

''அதெப்படி மது... பதிலே இல்லாத கேள்விகள் மத்தவங்க வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கும் போது, அதைத் தவிர்க்க வேணாமா?''

''அவை தவறான கேள்வின்னு காலம் நிரூபிச்சிடும். சரி... எதனால உனக்கு இப்படி ஒரு ஆவேசம் வந்தது. ஆண்டர்சன் அப்படி என்ன செய்தார்?''

''நான், அவரோட இமேஜை ரொம்பவும் பாதிச்சிட்டதா தனக்குள்ள ஒரு தவறான முடிவுக்கு வந்துட்டாரு. சொல்லப் போனா இந்த, 'இமேஜ்'ங்கறதே தப்பான ஒரு மாயை... சில நேரங்கள்ல இதை நாமா உருவாக்குகிறோம்; சில நேரங்களில் இதை நமக்கு மத்தவங்க தேவையில்லாம உருவாக்கிக் கொடுக்கறாங்க. இந்த மாதிரியான, 'இமேஜ்' அவர்களை இணைக்காது; விலக்கி வைக்கும்.''

''சரி... அதுக்காக அவர் என்ன செய்தார்?''

''தண்டிக்கணும்ன்னு ஆசைப்பட்டாரு. அவர் என்னை தண்டிக்க ஆசைப்பட்டிருந்தா நான் இதை நிச்சயம் செஞ்சிருக்க மாட்டேன். அவர் உன்னை இந்த தண்டனைக்குள்ள கொண்டு வந்ததை என்னால தாங்கிக்க முடியல.''

''இது, நீயும் உன் கணவரும் சம்பந்தப்பட்ட விஷயம். உங்க ரெண்டு பேருக்குள்ள நான் எப்படி வந்தேன்?''

''நீ வரல... அது அவருக்கும் தெரியும்... ஆனா, எங்க ரெண்டு பேருக்கும் நடுவே, நரேன் வந்துட்டதா அவர் தப்பா புரிஞ்சுகிட்டாரு. அவரோட விபரீதமான ஆசைகளுக்கு நான் மறுத்ததுக்குக் காரணமே நரேன்தான்னு நெனச்சிட்டாரு.''

''சரி... ஆண்டர்சன் என்னை தண்டிக்கணும்ன்னு ஏன் நெனச்சார்?''

''உன்னை தண்டிக்கறது மூலமா என்னையும், நரேனையும் தண்டிக்கணும்கற குரூர எண்ணம், அவருக்குள் வந்துடுச்சு. சாமர்த்தியமா உன்னை கொலை செஞ்சுட்டு, அந்த பழியை எங்க மேல போடறதுக்கு அவர் திட்டம் போட்டாரு. நானும், நரேனும் சந்தோஷமா இருக்கறதுக்கு நீ தடையா இருக்கிற மாதிரி ஒரு காரணத்தை கற்பிச்சு, அதுக்காக நாங்க உன்னை கொன்னுட்டதா நினைக்கும் படி அவர் போட்ட திட்டத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன்.''

''சரி... இத நாம போலீஸ்ல சொல்லி இருக்கலாமே கவிதா. இதுக்காக நீயே அவரை கொலை செஞ்சு, இப்ப உன் வாழ்க்கையையே அழிச்சுக்கிட்டியே...''

கவிதா, சற்று நேரம் மவுனமாக இருந்து விட்டு, பிறகு பேசினாள்...

''இதுல என் அழிவைப் பத்தி நான் கவலைப்படல. ஆனால் நீயோ, நரேனோ அழிஞ்சு போறதுக்கு நான் காரணமா இருக்கக் கூடாது...''

அதற்கு மேல் பேச முடியாமல், கவிதாவின் நெஞ்சை துக்கம் அடைத்தது. கவிதாவின் அழகியக் கண்களில் கண்ணீர் திரண்டு, நெஞ்சு விம்மியது.

''இதுக்கு காரணம், உங்க கல்யாணத்துக்கு முன், நரேன் மேல எனக்குள் வந்த காதல் மட்டுமே அல்ல. நான் காதலிச்ச நரேனுக்கு உன் மேல வந்த காதலும் தான்.''

கவிதா சொல்வது மதுரிமாவுக்குப் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. இப்படியும் ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா!

தான் காதலிக்கும் ஒருவனைக் காப்பாற்ற ஒரு பெண் முயற்சிக்கலாம்; ஆனால், அந்த ஒருவன் தன்னைக் காதலிக்காமல், வேறு ஒருத்தியைக் காதலிப்பதை அறிந்த பின், அந்த ஒருத்தியை அவன் மணந்த பின், அந்த ஒருத்தியின் மீது அந்தப் பெண்ணுக்கு பொறாமை அல்லவா தோன்றும்?

ஆனால், இந்த கவிதா அவளைக் காப்பாற்ற நினைத்ததோடு, அந்தக் கணவன் - மனைவியின் சந்தோஷத்திற்காக, தன் கணவனையே கொல்லும் அளவிற்கு, உண்மையில் ஒரு சிலரே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், மனிதப் பிறவியை உன்னதமாகவும் மாற்றும் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த ஒரு சிலரில் கவிதாவும் ஒருத்தி. மதுரிமா கவிதாவைப் பற்றி பெருமையாக நினைத்த அதே நேரத்தில், அவள் மீது சந்தேகித்த தன்னை நினைத்து வெட்கமும் அடைந்தாள்.

''சரி... இந்தக் கொலை எப்படி நடந்தது கவிதா? இத்தனை மென்மையான இதயம் கொண்ட உன்னால், இந்தக் கொடூரத்தை எப்படி செய்ய முடிந்தது?''

கவிதா விரக்தியுடன் சிரித்துவிட்டுச் சொன்னாள்...

''மது... பெண் பூவாகவும் இருப்பாள்; சமயத்தில் புயலாகவும் மாறுவாள். தனி ஒரு மனிதனான கோவலனை எதுவும் செய்ய முடியாத கண்ணகி, மதுரையையே எரித்த கதைதான்... ஆண்டர்சன் அன்றிரவு அளவுக்கும் அதிகமாகவே குடித்துவிட்டு என் வீட்டிற்கு வந்தார். குடி போதையில் என்னைப் பற்றியும், நரேனைப் பற்றியும் ஏக வசனத்தில் எது எதையோ பேசித் திட்டித் தீர்த்தார். செக்ஸ் உணர்வில், ஒரு பெண் எல்லா ஆண்களிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்கிறாளா அல்லது வேறுபடுகிறாளா என்ற அவரது ஆராய்ச்சிக்கு, நான் உடன்பட மறுத்துவிட்டு, என்னளவில் அந்த வேறுபாட்டை நரேனிடம் அனுபவித்துக் கொண்டிருப்பதாக கூசாமல், சிறிது கூட வெட்கப் படாமல் வெளிப்படையாகச் சொன்னார்.

''இந்திய கலாசாரப் போர்வையில், உள்ளுக்குள் அமெரிக்க நாகரிக மோகம் கொண்டு, பத்தினி வேடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், 'பிராஸ்டிடியூட் 'என்று என்னைக் கேவலமாகப் பேசினார். அதோடு, உன்னை கொல்லும் திட்டத்தையும் கூறினார். ஒரு சில நிமிடங்களே நான் யோசித்தேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டவளாய், ஆண்டர்சனின் துப்பாக்கியாலேயே அவரை சுட்டு வீழ்த்தினேன்.''

அவளது இரு கைகளாலும் முகத்தை மூடி, கதறி அழுதாள் கவிதா.

''கவலைப்படாதே கவிதா... உன்னை ஜாமினில் எடுப்பதற்காக, வக்கீலை அழைத்து வரப் போயிருக்கிறார் வைத்தீஸ்வரன். இந்த வழக்கை வெற்றிகரமாக முடித்து, உன் விடுதலைக்குப் பிறகுதான் நானும், மதுவும் இந்தியா திரும்புவோம்.''

நரேன் ஆறுதலாகவும், நம்பிக்கையோடும் கவிதாவிடம் சொன்னதைக் கேட்டு, மதுவின் இரு கைகளையும் பற்றியபடி கேட்டாள் கவிதா...

''மது... எனக்காக நீ ஒரு உதவி செய்ய வேண்டும். நான் உன்னிடம் கேட்பது மிகப் பெரிய உதவி; செய்வாயா?''

''புரிகிறது கவிதா... நீ கேட்கப் போகும் உதவி உன் குழந்தையைப் பற்றித்தானே... இனி, அது உன் குழந்தை இல்லை. நீ கேட்டாலும் அந்தக் குழந்தையை உன்னிடம் தர மாட்டேன். அது, எங்கள் குழந்தையாக இனி எங்களிடமே வளரும்.''

மது, கவிதாவின் கைகளை இறுகப் பற்றியபடி சொன்னாள்.

''நீ இப்படிச் சொல்லும் போது, உன்னிடம் இன்னொரு உதவியும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது மது.''

''தைரியமாகக் கேள் கவிதா. நீ கேட்கும் உதவி எதுவாக இருந்தாலும், அதை நிச்சயம் செய்து முடிக்கிறேன்.''

இரண்டாவதாக என்ன உதவியை அவள் கேட்கப் போகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாய், கவிதாவை யோசனையுடன் பார்த்தான் நரேன்.

அதுவரையில் சோகமாக இருந்த கவிதா, அவளது வருத்தத்தை மறைத்து, அவளுக்கே உரிய அழகிய புன்னகையுடன் சொன்னாள்...

''நரேன்... நான் கேட்க நினைக்கும் இரண்டாவது உதவி, மதுரிமா மட்டுமே செய்து முடித்து விடுகிற உதவி அல்ல. அதில், உங்கள் பங்கும் பெரிதாக இருக்கிறது.'' நரேனும், மதுரிமாவும் புரியாமல் கவிதாவையே பார்த்தபடி நிற்க...

''நான் விடுதலையாகி வரும்போது, என் குழந்தையுடன், உங்கள் குழந்தையும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க வேண்டும்; என்ன, புரிகிறதா?''

சரி என்று சொல்ல வெட்கப்பட்டவளாய், தலைகுனிந்த தாமரையைப் போல் நின்றாள் மதுரிமா.

அன்றிரவு—

மதுரிமாவின் அருகில் படுத்திருந்த நரேனின் மொபைல் போன் இசையாக ஒலித்தது.

'இந்த நேரத்தில் யார்?' என்ற கேள்வியுடன், அவசரமாக போனை எடுத்தான் நரேன்.

''என்னப்பா நரேன்... வேஷம் கலைஞ்சாச்சா?''

''சார்... நானும், மதுவும் வேஷத்தை எப்பவோ கலைச்சிட்டோம். இனிமே வேஷம்கறதே கிடையாது; எப்பவும் யதார்த்தம்தான்.''

நரேன் சொன்னதைக் கேட்டு, வாய்விட்டு சிரித்தார் வைத்தீஸ்வரன்.

''நரேன்... நான் எதையோ கேட்டா, நீ எதையோ சொல்ற?''

''நீங்க எதை கேட்டீங்க; நான் எதை சொன்னேன்?''

''நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டதை நீ சொல்ற; ஆனா, நான் கேட்டது வேற ஒரு வேஷத்தைப் பத்தி.'' சொல்லிவிட்டு மீண்டும் அதே பொருள் மறைந்த சிரிப்பு சிரித்தார்.

நரேன் போனைத் துண்டித்து, மதுரிமாவைப் பார்த்தான். வேஷம் கலைந்த நிலையில், மதுரிமா எத்தனை அழகாய் தெரிகிறாள். கவிதாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் முயற்சியில் நரேனும், மதுரிமாவும் ஈடுபட்டனர்.

நிறைந்தது

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்






      Dinamalar
      Follow us