sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 11, 2011

Google News

PUBLISHED ON : செப் 11, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்றைக்கு கன்னிமாரா நூலகத்திற்குப் போனேன். அப்போது தான் உள்ளேயிருந்து வெளியே வந்தார் குப்பண்ணா. மாலை நேரமானதால் அவரோடு பேசிக் கொண்டே, அங்கிருந்த மரத்தடியில் இருவரும் உட்கார்ந்தோம்.

நூலகங்களைப் பற்றிய பேச்சு வந்தது. வெற்றிலை போட்டு, விரல் சுண்ணாம்பை மரத்தின் மீது தடவி விட்டு சொன்னார் குப்பண்ணா:

இந்திய சரித்திரத்தில் நூலகங்களின் வளர்ச்சியை வேத காலம், பவுத்த காலம், மத்திய காலம், முஸ்லிம் காலம், பிரிட்டிஷ் காலம், காந்திய காலம் என்று, பல பிரிவுகளாக பிரிக்கலாம்.

வேத காலத்தில் எழுதும் பழக்கம் ஏற்படவில்லை என்பதால், அந்தக் காலத்தில் புத்தக சாலைகள் இருந்திருக்க நியாயமில்லை என்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியைக் கொண்டு தான் நாம் பவுத்த காலத்துப் புத்தக சாலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. நாலந்தா, தட்சசீலா போன்ற இடங்களில், பல்கலைக்கழகங்கள் இருந்ததாகத் தெரிகிறது.

பவுத்த காலத்துக்குப் பின் ஏராளமான நூலகங்கள் இருந்திருக்கின்றன. இவை கோவில்களில் தான் அமைக்கப்பட்டிருந்தன. கோவில்களில் மக்களை அனுமதித்தது போலவே, இந்த நூலகங்களிலும் அனுமதித்து வந்துள்ளனர்.

மடங்களும் இந்த மாதிரி புத்தக சாலைகளை அமைத்து ஆதரித்து வந்தன. ஆதிசங்கரர் இப்படி ஒரு பெரிய புத்தக சாலையைப் பயன்படுத்தியதாகச் சொல்வர்.

லலிதா சகஸ்ரநாமத்திற்கு உரை எழுத எண்ணினார் சங்கரர். புத்தக சாலையை கவனித்துக் கொள்ளும் அதிகாரியிடம், அந்தச் சகஸ்ரநாம சுவடியை எடுத்து வரச் சொன்னாராம். அவர் விஷ்ணு சகஸ்ர நாமத்தைக் கொண்டு வந்து தந்தாராம். 'ஏன் இதை எடுத்து வந்தாய்... நான் கேட்டது லலிதா சகஸ்ர நாமம் தானே?' என்றாராம் சங்கரர். புத்தகசாலை அதிகாரி, 'உங்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என்று அங்கே இருக்கிற அம்மாள் இதைக் கொடுக்கும்படி சொன்னாள்...' என்றாராம்.

'கோவில்களில் இருந்த புத்தக சாலைகள் என்ன ஆயின?'

வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்களின் கண்ணில் முதன் முதல் பட்டவை கோவில்கள் தான். தெற்கே காமாட்சியம்மன் கோவிலையும், மேற்கே சோமநாதர் கோவிலையும், வடக்கே காசி விஸ்வநாதர் கோவிலையும் அவர்கள் இடித்துத் தள்ளினர். பகைவர்களைப் பார்த்ததுமே, கோவில் அர்ச்சகர்கள் எல்லா சுவடிகளையும் பத்திரமான இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

அவைகளைத் திரும்பக் கொண்டு வரவேயில்லை. இப்போதும் எங்காவது கோவில் அர்ச்சகரின் பழைய வீடுகளில் அரிய சுவடிகள் கிடைப்பதற்கு இது தான் காரணம்.

இந்தியாவிற்கு முஸ்லிம்கள் படையெடுத்து வந்த பிறகு, இந்தப் புத்தகச் சாலைகளின் நிலை மாறி விட்டது. அந்தக் காலத்து மன்னர்கள் தங்கள் சொந்த நாட்டில், அரண்மனைகளில் இந்த மாதிரி புத்தகச் சாலைகள் அமைத்துக் கொண்டனர். இவர்களைப் பார்த்து, இவர்களுக்குக் கீழுள்ள பிரபுக்களும், ராஜ சபையைச் சேர்ந்த பிறரும் தத்தம்

வீட்டில் இப்படியே புத்தகசாலை அமைத்துக் கொண்டனர். வாசக சாலை என்ற ஒன்று தன் வீட்டில் இருந்தால் தான் பண்பாடும், சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தும் இருப்பதாகக் கருதி வந்தனர்.

ஷாஜஹானின் மகனான தாரா, டில்லியில் புத்தக சாலைக்கென்றே ஒரு கட்டடம் அமைத்ததாகச் சொல்கின்றனர். அதில், இப்போது டில்லி பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் இருக்கிறது. அங்கே, முன்பு இருந்த புத்தகத் தொகுதிகள் என்னாயிற்று என்று தெரியவில்லை.

சிற்றரசர்கள் பலர் தம் மாளிகைகளில் இப்படிப் புத்தக சாலைகளை அமைத்தனர். இந்த வழக்கம் கி.பி.19ம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை, இருந்து வந்தது. இந்த ரீதியில் கடைசியாக அமைக்கப் பெற்றது தான் தஞ்சாவூரிலுள்ள சரஸ்வதி மஹால் புத்தக சாலை.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த வகை நூலகங்களிலிருந்து நூல்கள் கொள்ளை போய் வந்தன. உதாரணம் - திப்புவின் அரண்மனைப் புத்தக சாலையிலிருந்து கொள்ளை போன ஒரு பகுதி, வங்க ஏஷியாடிக் சங்கத்துக்குக் கிடைத்தது. பல ஏட்டுச் சுவடிகளை ஐரோப்பாவுக்கு எடுத்துப் போய் விட்டனர். இவற்றில் சில, மிகவும் அரிய நூல்கள்.

முஸ்லிம் ஆட்சிக் காலத்து புத்தக சாலைகளில், அச்சடித்த நூல்கள் இருந்திருக்க நியாயமில்லை. இதற்குக் காரணம், இந்தியாவில் அச்சுக்கலை அவ்வளவாகப் பரவாதிருந்தது தான். ஆகவே, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தான் அச்சடித்த நூல்கள் புத்தக சாலைகளில் இடம்பெற்றன.

கொல்கத்தா, மும்பை, சென்னை இந்த மூன்று பெரிய நகரங்களிலும் இந்த மாதிரி நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. 'கல்கத்தா நூலகம்' என்பது வங்க ராயல் ஏஷியாடிக் சங்கத்தின் ஒரு பகுதி; பல மொழிகளில் தேர்ந்த பிரபல அறிஞரும், சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜும் ஆன சர் வில்லியம் ஜோன்ஸ் தான் இந்தச் சங்கத்தை நிறுவினார். இந்தச் சங்கத்துக்குப் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், சித்திரங்கள் முதலியவை இனாமாகக் கிடைத்து வந்தன. முதலில் சங்கச் செயலர் வீட்டில் இவைகளை வைத்திருந்தனர். 1808ல் சங்கத்துக்கென்றே சொந்தக் கட்டடம் கிடைத்து விட்டதால், இந்தப் புத்தகங்களை அங்கே கொண்டு போய் சேர்த்தனர். பிறகு, ஒவ்வொரு ஆண்டும் புதிய புத்தகங்களை வாங்கினர். பொது மக்களும் - அதாவது, வெள்ளைக்கார பொதுமக்கள் மட்டும் இங்கே படிக்க வசதி அளித்தனர். இதற்கென்று விதிமுறைகளும் விதித்தனர்.

பம்பாய் லைப்ரரி, 1789ல் துவங்கியது. அப்போது வைத்தியம், இலக்கியம் இந்தத் துறைகளைச் சேர்ந்த நூல்களே இருந்தன. ஆனால், 1904ல் பம்பாய் இலக்கிய சங்கத்தார் இதைத் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.

இந்தியர்களை இந்த லைப்ரரிக்குள் அனுமதிப்பதில்லை. அந்த நாளில் சில இந்திய அறிஞர்களும், பிரபல வணிகர்களும் இதை ஆட்சேபித்தனர்.

இந்தக் கிளர்ச்சி காரணமாக, 1846ல் பம்பாயில், 'பீப்பிள்ஸ் லைப்ரரி' என்ற தனி நூலகம் துவங்கப்பட்டது. இரண்டும் இப்போதும் இயங்கி வருகிறது.

பின்னர், 19ம் நூற்றாண்டின் பின் பகுதியில் சென்னை, லக்னோ, லாகூர் போன்ற நகரங்களில் மியூசியத்தோடு இணைந்து, 'நூலகங்கள்'கள் உருவாக்கப்பட்டன. சென்னை கன்னிமாரா நூலகமும் இப்படி உருவானது தான்.

கர்சன் பிரபு, வைஸ்ராயாக இருந்த போது, கொல்கத்தாவில், 'இம்பீரியல் லைப்ரரி'யை நிறுவினார். பல்கலைக்கழகங்களோடு இணைந்த லைப்ரரிகளும், இந்த நூற்றாண்டு துவக்கத்தில் ஏற்பட்டன என்று, விளக்கமாகச் சொல்லி முடித்தார் குப்பண்ணா.

— இருட்ட ஆரம்பித்திருந்தது; நூலகத்தில் நுழையாமலே, குப்பண்ணாவுடன் வெளியேறினேன்.

***






      Dinamalar
      Follow us