
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம், சின்னாளபட்டி; செயற்கை பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது. சமீப காலமாக இந்த ஊர் புடவைகளுக்கு, கிராக்கி குறைந்து போய் விட்டது. அதனால், அங்குள்ள நெசவாளர்கள் மில் சேலைகளை (சூரத், பெங்களூருவில் இவை கொள்முதல் செய்யப்படுகின்றன!) விற்பனை செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களில் சிலர் இந்தியா முழுவதும் செல்கின்றனர்; பலர் வெளிநாடுகளுக்கு சென்று, சேலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது சின்னாள பட்டியைச் சேர்ந்த பல வியாபாரிகள் சேலை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நாடுகளில் வாழும் தமிழர்கள் இவர்களுக்கு ஆதரவு தந்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் திரும்பிய சேலை வியாபாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது; அவர் கூறினார்:
தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் மொத்தம், 10 பேர் அடங்கிய சேலை வியாபாரிகள், ஒரு முகாம் அமைத்திருந்தோம். காலையில் புடவைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து, மாலையில் வசூல் பணத்துடன் திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். சென்னையை விட பெரிய நகரமான இங்கு, ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள், 160 ஆண்டுகளுக்கு முன் அங்கு குடியேறினர்; ஓரளவிற்கு தமிழ் பேசுகின்றனர்.
தமிழர்களாக இருந்தாலும், அவர்களின் உடை மற்றும் கலாசாரம் தென்னாப்பிரிக்க மக்களைச் சார்ந்துதான் உள்ளது. பெண்கள் பேன்ட், டி-சர்ட்டும்; ஆண்கள் பர்முடாஸ் மற்றும் டி-சர்ட்டும் அணிந்து தான் காணப்படுகின்றனர். மிகவும் அளவு குறைந்த ஆடைகளையே அணிய பிரியப்படுகின்றனர். கோவிலுக்கு செல்லும் போதும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், துக்க காரியத்திற்கு செல்லும் போதும் மட்டுமே சேலை அணிந்து செல்வது அவர்களின் வழக்கமாக இருக்கிறது.
எந்த பெண்ணும் நகை அணிவது கிடையாது. காலையில் பிரட், கோக்குடன், 'பிரேக்-பாஸ்ட்' முடிந்து விடுகிறது. வேலைக்கு சென்று மாலை திரும்பிய பின்னர் கடைகளில் விற்கும், 'பேக்டு புட்' அயிட்டங்களை வாங்கி வந்து, 'டின்னரை' முடிக்கின்றனர்.
அங்கேயும் ஏழை, பணக்காரன் வித்தியாசம் காணப்படுகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் பென்ஷன் தருகிறது. இந்த வகையில், நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவிற்கு பணம் கிடைத்து விடுகிறது.
குண்டூசி முதல், கார் வரை எல்லா பொருட்களும் சுலப தவணை முறையில் கிடைக்கின்றன. யாரும் ரொக்கமாக பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான வீடுகளில் விலை உயர்ந்த சோபா, கட்டில், எலக்ட்ரானிக் பொருட்களை காண முடிகிறது. குடிநீர் மற்றும் மின்சாரம் தவிர அனைத்துமே அரசாங்கத்தில் இருந்து இலவசமாக கிடைக்கிறது. பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்; ஆண்கள் சோம்பேறிகளாக காணப்படுகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் பூர்வீக குடிகள், 'காப்ரி' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் பலர் முரடர்களாக இருந்தாலும், பெரும்பான்மையோர் அந்நியர்களுடன் அன்பாக பழகுவதை காண முடிந்தது. இரு சக்கர வாகனங்களை காண்பது அரிது; எல்லாருமே கார் வைத்திருக்கின்றனர். நாங்கள் கூட கார்களில் சென்றுதான் புடவை விற்பனை செய்தோம்.
எங்கு பார்த்தாலும் சுத்தம் பளிச்சிடுகிறது; தூசு என்பதே கிடையாது. சீதோஷ்ண நிலையை பொறுத்தவரையில் எந்த காலத்திலும் இதமாக இருக்கிறது. இலை போடாமலேயே சாப்பிடும் அளவிற்கு சாலைகள் தூய்மையானவையாகவும், மேடு, பள்ளங்கள் இல்லாதவையாகவும் காணப்படுகின்றன. மணிக்கு, 140 கி.மீ., வேகத்தில் கார்கள் செல்வது சாதாரணம்.
தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால், நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எந்த வீட்டிற்கு சென்றாலும் முதலில் சாப்பிடத்தான் சொல்கின்றனர். ஓரளவிற்கு தமிழ் பேசுகின்றனர்.
இந்திய, தமிழக அரசியலில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. தமிழ் மற்றும் இந்தி சினிமா நடிகர், நடிகைகளை மட்டும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். இன்றைய நிலையில் ஷாருக்கான் அங்கு பெரிய ஹீரோவாக மதிக்கப்படுகிறார். தமிழ், இந்தி படங்கள் இங்கு திரையிடப்பட்ட உடனேயே அங்கும் வந்து விடுகின்றன.
பாதுகாப்பு என்பது குறைவுதான். மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியில் உலாவுவது பாதுகாப்பானதல்ல. துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடிப்பது அங்கு சாதாரணம்.
இதனால், எல்லா கடைகளும், மார்க்கெட்டுகளும் மாலை, 5:00 மணிக்கே மூடப்பட்டு விடுகின்றன. காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மட்டுமே மனித நடமாட்டம் காணப்படுகிறது.
இருப்பினும் பெரும்பாலானவர்கள் அன்பும், பாசமும் கொண்டவர்களாவே காணப்படுகின்றனர். ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் போன்றவை அங்கு இல்லை என்றார்.
— கிராமத்து தமிழர்கள், 'வேலையில்லையே...' என்று சோம்பிப் போய் விடாமல், பிச்சை எடுக்காமல், திருடாமல், கொள்ளையடிக்காமல் உலகின் எந்த மூலையானாலும் சென்று பிழைத்துக் கொள்வதை எண்ணி பெருமை கொண்டேன்.
***
எனக்கு வந்திருந்த, 'மின் அஞ்சல்கள்' - இ-மெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிங்கப்பூரில் இருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.
அவரது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றுவதாகவும், தம்பதியருக்கு, நான்கு வயதில் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறி இருந்ததோடு, இன்டர்நெட் மூலம் வாரமலர் இதழில் என்னுடைய, கேள்வி - பதில் பகுதியைப் படித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பலன்களையும் எழுதியிருந்தார்.
தான் வெகுகாலமாக, 'டிவி' சீரியல்களில் மூழ்கி இருந்ததாகவும், இதனால், அந்த தொடர்களில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, மிகுந்த மன அழுத்தம், வேதனை ஏற்பட்டதாம்... மூக்கு நுனியில் கோபம் வரும் திடீர் பழக்கம் ஒட்டிக் கொண்டதாம்...
இதனால், தன் கணவரையோ, குழந்தையையோ சரியானபடி கவனிக்க முடியாமல் போனது என்றும், அவர்கள் மீது எரிந்து விழுவது, கோபப்படுவது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டதுடன், வீட்டையும் ஒழுங்காக பராமரிக்க இயலாத நிலை வந்து விட்டதாம்...
இவரிடம் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த அன்பான கணவர், இந்த மாற்றங்களுக்கான காரணம், டெலிவிஷன் சீரியல்கள் தான் என்பதை உணர்ந்து, அவரிடம் எடுத்து கூறி, டெலிவிஷன் பார்ப்பதை நிறுத்த கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், நம் வாசகியால் சீரியல் என்ற அரக்கியின் கோரப் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை.
அதன் பின், வாரமலர் இதழில் வெளியான கட்டுரை மூலம், 'டிவி' சீரியலால் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி அறிந்து, 'தன் கணவரும் இதைத் தானே கூறுகிறார்...' என்ற எண்ணம் வந்து, கேபிள் கனெக்ஷனை துண்டித்திருக்கிறார். கேபிள் கனெக்ஷனுக்கான மாதாந்திர வாடகையும் மிச்சமானதாம்.
ஆனால், அடுத்து வந்த நாட்கள் சிலவற்றில், சீரியல் பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு, ஆசை, மோகம், வெறி தன்னை ஆட்டிப் படைத்ததாகவும், இப்போது, அதிலிருந்து விடுபட்டு, சீரியல் பற்றிய எண்ணங்களே இல்லாமல், மிகுந்த மன நிம்மதியுடன் இருப்பதாகவும், தன்னை தொற்றிக் கொண்ட திடீர் கோபம், மன அழுத்தம், குபுக்கென்று
கண்ணீர் விடுவது ஆகியவை முற்றிலும் அகன்று விட்டதாகவும், தன் மகனுடன் அதிக நேரம் செலவிடுவதாகவும், இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதாகவும் எழுதி, எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
— குறைந்தபட்சம் ஒரு பெண்மணியையாவது சீரியல் அடிமைத் தனத்திலிருந்து, என்னுடைய எழுத்துக்களால் வெளியே கொண்டு வர முடிந்ததே என எண்ணி, மகிழ்ச்சியடைந்தேன்.
***