/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்!
/
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணம்!
PUBLISHED ON : அக் 02, 2011

தென் கிழக்கு ஆசிய நாடுகளில், கி.பி., முதல் நூற்றாண்டிலேயே, ராமாயணம் பரவத் தொடங்கி விட்டது. முதலில் வாய்மொழியாகவும், பிறகு நாடக வடிவிலும், அதற்கு பிறகு இலக்கிய வடிவத்திலும், ராமாயணம் இந்த வட்டார மக்களிடம், பிரபல மடைந்துள்ளது.
தாய்லாந்து, மலேசியா, இந் தோனேசியா, கம்போடியாவில் ராமாயண கதை இயற்றப் பட்டிருக் கின்றன. தாய்லாந்து ராமாயணத் தின் பெயர் ராமாக்கியன்; ராமகீர்த்தி என்றும் அது அழைக்கப்படுகிறது.
மலாய் மொழியில் இயற்றப்பட்ட ராமாயணத்தின் பெயர், ஹிக்காயத் ஸ்ரீராமா. பர்மா விலும், ஜாவாவிலும், 10ம் நூற்றாண்டில் எழுதப் பட்ட ராமாயணம், 'ராம வத்து!'
சீனாவில், 16ம் நூற் றாண்டில், ராம காவியம் வரையப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய ராமாயணங்கள் வால்மீகி, கம்ப ராமாயணங்களுடன் ஒன்றுபட்டும், வேறு பட்டும் உள்ளன. வால்மீகி - கம்ப ராமாயணத்தில், தசரத மன்னருக்கு கவுசல்யா, சுமித்ரா, கைகேயி என்று மூன்று மனைவியர்.
தாய்லாந்தின் ராமாக்கியனில், இவர்கள் கவுசுரியா, சமுத்ராஜா, கையாகேஷி என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால், மலாய் மொழி ஹிக்காயத் ஸ்ரீராமாவில் தசரத மன்னருக்கு, இரு மனைவியர் தாம். அவர்களின் பெயர் மண்டூதரி, பல்யாதுரி!
தாய்லாந்து ராமாக்கியன் காவியம், கம்ப ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ்ச்சொற் களும், பெயர்களும் உள்ளன. கலைக்கோட்டி, ராம பட்டன், திரிபுரம், கென், சடாயு ஆகியவை சில உதாரணங்கள். இதைப் போன்றே, மலாய் மொழி ஹிக்காயத் ஸ்ரீராமாவிலும் பல தமிழ்ச் சொற்கள் காணப்படு கின்றன. தமிழர்களால், இப் பகுதிகளில் ராமாயணம் பரப்பப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நாடுகளின் அரசியல், சமய, கலாசார மாற்றங்கள், ராமாயணத்திலும் எதிரொலிக்கிறது. பர்மா, ஜாவா போன்ற நாடுகளில், 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராமா யணத்தில், புத்த மதத்தின் தாக்கம் உள்ளது. அதனால், உயிர் பலி, தற்கொலை போன்ற அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. தசரதனுக்கு அளிக்கப்பட்ட சாபம், சூர்ப் பணகையின் மூக்கறுப்பு போன்றவை இதில் அகற்றப்பட்டுள்ளன. பூஷணன், தன் சகோதரன் ராவணனுக்கு புத்த சித்தாந்தத்தை உபதேசிக்கும் நீண்ட பகுதியும் இந்த, 'ராமவத்து' காவியத் தில் உள்ளது.
சீன ராமாயண காவியம், 16ம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. அதில், குரங்கு வடிவான கடவுளுக்கு முக்கிய இடம் உண்டு. சீனப் புத்தகங்களில், குரங்குக் கடவுளின் படம் (அனுமன்) இடம் பெற்றுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா வில், ராமாயணம் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. ஜாவா, சுமத்ரா, பாலி ஆகிய வட்டாரங்களில் பல ராமா யணங்கள் உள்ளன. 'யோகீஸ்வரா' ஜாவா ராமா யணத்தின் பெயர். இந்தோ னேசியர்களின் வாழ்க்கை முறையில் இன்றளவும் ராமாயணம் தார்மீகப் பங்காற்றி வருகிறது.
இந்தோனேசியாவைப் போன்றே மலேசியா விலும் பல பெயர்களில் நீண்ட காலமாக ராமாயணம் செல்வாக்குடன் விளங்கி வருகிறது; ஹிக்காயத் ஸ்ரீராமா அவற்றில் ஒன்று. இது, 13ம் நூற்றாண்டுக்கும், 17ம் நூற்றாண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் தோன்றியது. உரை நடையில் இயற்றப்பட்ட இந்த ராமா யணம், முதல் முறையாக, 1843ல் அச்சிடப்பட்டது. ராவணனின் பிறப்பு பற்றிய விவரிப்புடன், இது துவங்குகிறது. அன்றைய மலாயாவின் ராமாயணமான இதில், பாத்திரங்களின் உறவு முறையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, சீதை, ராவணனின் மகள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ராமனுக்கும், தேவி அஞ்சாதிக்கும் பிறந்தவன் அனுமன். வாலி, சுக்ரீவனின் சகோதரி இந்த அஞ்சாதி. ராவணன் மனைவி மண்டோதரிக்கும், வாலிக்கும் பிறந்தவன் அங்கதன் என்று வித்தியாசமான பல கருத்துகள் இதில் காணப்படுகின்றன. மலேசியாவில் ராமாயணப் பொம்மலாட்டங்களுக்கும் குறைவில்லை.
தாய்லாந்தில் ராமாயணம், ஆலய வழிபாடுகள், நாட்டியம், பொம்மலாட்டம், சிற்பம், ஓவியம் என பல துறைகளில் நீண்ட காலமாகச் செல்வாக்கு பெற்றிருக்கிறது. குறிப்பாக, தென்னிந்திய மரபில் வந்த ராமாயணம் என்பதால், வால்மீகி ராமாயணத் தாக்கம் அதிகம் இல்லை. வால்மீகி ராமாயணத்தில் அரக்கியாக வரும் சூர்ப்பணகை, அழகிய பெண்ணாக ராமனைச் சந்திக்கிறாள். கம்ப ராமாயணத்தில் இடம் பெறாத மயில் ராவணன் கதையும் இங்கு பிர பலம். தாய்லாந்து ராமாயணத்தில், அனுமனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டி ருக்கிறது.
'நாங்' என்ற ராமா யணப் பொம்மலாட் டம், தாய்லாந்தில் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகிறது. தலை நகர் பாங்காக்கில் அமைந்துள்ள புத்தர் ஆலய சுற்று வட்டாரங் களில், ராமாயணகதைக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
லாவோஸ் நாட்டில், பல ராமாயணங்கள் வழங்கி வருகின்றன. வங்காள ராமாயணப் பின்னணியில் அமைந்த ராமாயணமும் அவற்றில் அடங்கும். அங்கு வழக்கத்தில் இருந்த, இரண்டு ராமாயணங்கள் சென்ற நூற்றாண்டில் லாவோசிய மொழியில் நூலாக அச்சிடப்பட்டன. தலைநகர் வியந்தின் கோவிலில் சுவரோவியமாகவும் ராமாயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்தில் உள்ளது போல், சீதை, ராமன் மீது காதல் கொள்ளும் நிலை, லாவோஸ் ராமா யணத்திலும் வர்ணிக்கப்படுகிறது. அதே சமயம், சீதை, ராவணனின் மகள் என்றும் கூறப்படுகிறது. காஷ்மீர் ராமாயணத்திலும் இவ்வாறு உள்ளது கவனிக் கத்தக்கது.
ராவணனுக்கு, 10 தலைகளும், 20 கைகளும் உள்ளதாக, தென் கிழக்கு ஆசிய ராமாயணங்களில் கூறப்படவில்லை.
கம்போஜம் என்று முன்பு அழைக்கப்பட்ட கம்போடியாவிலும் ராமாயணம் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. அங்குள்ள அங்கோர்வாட் கோவில் புகழ் மிக்கது. இந்தக் கோவிலில் ராமாயண நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பாற்கடலைக் கடையும் காட்சியில், வாலி பங்கெடுத்துக் கொள்வதாகக் காட்டப்பட்டுள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இந்த நிகழ்ச்சி கூறப்படாவிட்டாலும், கம்ப ராமா யணத்தைப் பின்பற்றி, இக்காட்சி உருவாக் கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த கைலாய பரம்பரையினர், கம்போடியாவிலும், தாய்லாந் திலும் இந்தக் கதைச் சம்பவங்களைப் பரப்பி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ராமகீர்த்தி எனும் பெயர் பெற்ற கம்போடிய ராமாயணம்,
15ம் நூற்றாண்டை சேர்ந்தது. ராமாயணக் கதை, லகோன் கோல் எனும் பெயரில் நாட்டிய நாடகமாகவும், கம்போடியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
வியட்னாமியர்களிடையே, கி.பி., மூன்றாம் நூற்றாண்டிலேயே ராமாயணம் செல்வாக்கு பெறத் துவங்கியது. ஸ்ரீமாறா என்ற மன்னரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், ராமாயணக் கதை இடம் பெற்றுள்ளது. ஸ்ரீமாறன் என்ற பெயர், பாண்டிய மன்னர் பரம்பரைக்குரியது என்பதால் வியட்னாமு டன் அவர்களுக்கு பழங்காலத் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. அந்த நாட்டின் வோ-கான் பகுதியிலுள்ள, 7ம் நூற் றாண்டுக் கல்வெட்டில், வால்மீகியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
***
ஜே.எம்.சாலி