
அதிகாரிகளின், லிப்ட் அம்மணியரே உஷார்!
பதவி உயர்வுகள் மூலம், உயர் பதவிக்கு வந்த அதிகாரியிடம் பணிபுரியும் அரசு ஊழியை நான். சிறிய மாடல் செகண்ட் ஹேண்ட் காரில் வரும் அந்த அரைக்கிழ அதிகாரி, தானே மனமுவந்து பெண் ஊழியருக்கு, 'லிப்ட்' தருவது வழக்கம். அவரது, 'லிப்ட்' ஆர்வத்தில் நானும் ஒருநாள் சிக்க நேர்ந்தது.
'சாங்ஸ் கேக்கறீங்களா... ஐ லைக் ஓல்டு சாங்ஸ்...' என்ற அவர், 'சிடி'யை பாட விட்டார். அதில் ஒலித்த பாடல்கள் பின் வருமாறு:
'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...' 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...' 'தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன்...' 'சக்கரைக்கட்டி ராஜாத்தி... என் மனசை வச்சுக்கோ காப்பாத்தி...' 'மெதுவா மெதுவா தொடலாமா?'
இந்தப் பாடல் வரிகளை கவனித்த போது, அந்த அதிகாரியின் ஜொள்ளுத்தனம் தெளிவாக எனக்கு புரிந்தது. பாடல்கள் ஒலிக்கும் போது அந்த ஜொள்ளன், 'ஆஹா... என்ன வரிகள்... சூப்பரான இசை... என்ன ரசனையான கவிதை...' என்றெல்லாம் சிலாகித்து, தன்னையும் சேர்த்து இரு பொருள்பட, 'ஓல்டு இஸ் ஆல்வேஸ் கோல்டுதான்...' என்று வழிந்தது உச்சக்கட்ட இம்சை.
ஒரு கட்டத்தில் அவரது ஜொள்ளார்வத்தை சகிக்க முடியாமல், 'சார்... எங்க ரிலேட்டிவ் வீடு பக்கத்துல தான் இருக்கு. அங்க போயிட்டு போகணும். ஓரமா நிறுத்துங்க, இறங்கிக்கிறேன்...' என்று கழன்று கொண்டேன். வலி(ழி)ய வந்து, 'லிப்ட்' தரும் அதிகாரி களிடம், பெண் ஊழியர்களே உஷார்!
— பெயர் வெளியிட விரும்பாத நெல்லை வாசகி.
குறுந்தகவல் தணிக்கை!
சமீபத்தில், என் நெருங்கிய நண்பர் ஒருவர், தன் மொபைல் போனில், யாருக்கோ குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருப்பதை தற்செயலாய் கவனித்தேன். யோசித்து, யோசித்து, அனுப்ப வேண்டிய தகவலை, 30 வார்த்தைகளில், ஒரு குறிப்பு நோட்டில் எழுதினார்.
பின் அதை, 20 வார்த்தைகளாய் சுருக்கினார். வாக்கிய அமைப்பில் காணப்பட்ட இலக்கணத் தவறுகளை களைந்தார். கட்டளை வாக்கியத்தை கீழ்படிதல் வாக்கியமாக்கினார். மொத்தத்தில், 10 நிமிடங்கள் செலவழித்து, குறுந்தகவலை, தோட்டக்காரன் பூஞ்செடியை ட்ரிம் செய்வது போல சீர்மைபடுத்தினார். பின் அதையே அனுப்பவும் செய்தார்.
'குறுந்தகவல் அனுப்பச் சொன்னா, என்னப்பா ஐ.ஏ.எஸ்., பரிட்சை எழுதுகிறாய்...' என, நண்பரை கிண்டல் செய்தேன். அதற்கு அவர், 'குறுந்தகவல்கள் நண்பர்களுக்கிடையே ஆன நட்புக் கிறுக்கல்கள் அல்ல; அவை, எழுத்துப்பூர்வ சாட்சியங்கள்...' என்றார். நான் பார்த்த குறுந்தகவல், மேலதிகாரிக்கு அனுப்பப்பட்டது என்றும், அனுப்பும் தகவலை இலக்கண சுத்தமாய் வளவளா, கொழ, கொழா இல்லாமல், சம்மர் கிராப் அடித்து அனுப்பியதாகவும் கூறினார்.
'அலுவலக ரீதியாக அனுப்பும் குறுந்தகவல்களை மட்டும்தான் தணிக்கை செய்கிறாயா?' என்றேன். 'நண்பர்களுக்கும் தணிக்கை செய்கிறேன். தவிர, கோபமாய் இருக்கும் போது, நான் குறுந்தகவல் அனுப்புவதில்லை. நேரங்கெட்ட நேரங்களிலும் அனுப்புவதில்லை...' என கூறினார்.
அன்றிலிருந்து, நண்பர் பாணியில்தான், நானும் யாருக்கும் குறுந்தகவல் அனுப்புகிறேன். படிக்கும் நீங்களும், இதை பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன்.
— ஜே.ஜாபர் அலி, சென்னை.
பென்டிரைவ் விபரீதம்!
அரசு அலுவலகம் ஒன்றில் கணக்கராக பணபுரியும் பெண் நான். எங்கள் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்றை, 'இ-மெயிலில்' அனுப்ப வேண்டியிருந்தது. அச்சமயம், இன்டர்நெட் சரிவர வேலை செய்யாததால், வீட்டிலிருந்து அதை அனுப்பி விடலாம் என நினைத்து, சக பணியாளர் ஒருவரிடம், 'பென்டிரைவ்' வாங்கி, அந்த அறிக்கையை அதில், 'காப்பி' செய்து வந்தேன்.
எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில், அந்த, 'பென்டிரைவை' இணைத்து, 'ஓபன்' செய்து பார்த்த நான், அதிர்ந்து போனேன். அந்த, 'பென்டிரைவ்'வில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களும், ஆபாச வீடியோக்களும் நிறைய இருந்தன. சட்டென அந்த, 'பென்டிரைவை' கம்ப்யூட்டரிலிருந்து எடுத்து விட்டேன்.
என் கணவரோ, குழந்தைகளோ அதைப் பார்த்திருந்தால் என்னவாகியிருக்கும்?
ஆத்திர அவசரத்திற்கு பென்டிரைவ் கொடுக்கும் ஆசாமிகளே... அதில், இந்த மாதிரி ஆபாச வில்லங்கங்கள் இருந்தால், அதை மற்றவர்களிடம், குறிப்பாக, பெண்களிடம் கொடுப்பதை தவிர்த் திடுங்கள் அல்லது அந்த வக்கிர கருமங்களை பென்டிரைவிலிருந்து அகற்றிவிட்டு கொடுங்கள்; நான் சொல்வது உறைக்கிறதா?
— ஆர்.புனிதா ஆரோக்கியசாமி, பழங்காநந்தம்.