தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவர் ஒரு பாரின் கார் டீலர். வெளிநாட்டு கார்கள் — உபயோகப்படுத்தப்பட்ட கார்களை வாங்கி, விற்பவர். அதே போல, ஸ்பேர் பார்ட்டுகள் வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்து கொடுப்பவர். நீண்ட கால நண்பர்.

கடந்த வாரத்தில் ஒரு நாள், 'பெஜேரோ' ஜீப் எடுத்து வந்திருந்தார். இவ்வகை வண்டிகள், 'போர் வீல் டிரைவ்' கொண்டவை; சாதாரண கார்கள், 'டூ வீல் டிரைவ்' ஆகத்தான் இருக்கும்.

அதாவது, இன்ஜின் சுழற்சியால் முன்னிரு சக்கரங்களோ, பின் இரு சக்கரங்களோ சுழலும், அந்த உந்து விசையால் மற்ற இரு சக்கரங்களும் சுழலும்.

அம்பாசிடர், பியட் போன்ற கார்கள், 'பேக் வீல் டிரைவ்' கார்கள். பின் சக்கர சுழற்சியால் இயங்குபவை. மாருதி, ஹூண்டாய், போர்டு, ஹோண்டா போன்றவை முன் சக்கர சுழற்சி கொண்டவை.

ஜீப் போன்ற சில வகை கார்களில் நான்கு சக்கரங்களும் இன்ஜினுடைய சுழற்சிக்கு இணைக்கப்பட்டு இயங்கும் வசதி கொண்டவை.

இந்த வசதி இருப்பதால், செங்குத்தான மலை, மணற்பாங்கான பாலைவனம், கடற்கரை போன்ற இடங்களில் சுலபமாகச் செல்லலாம்.

'மணி... மகாபலிபுரம் போய், அங்கிருந்து கடற்கரை மணலில், கடலை ஒட்டி, 'பெஜேரோ'வில் சென்னை திரும்பி வரலாமா?' எனக் கேட்டார் நண்பர்.

சுகானுபவமாயிற்றே... மறுப்பேனா...

அன்று, நான், லென்ஸ் மாமா மற்றும் அந்த நண்பரும், 'மஹாப்ஸ்' சென்று, கடற்கரை மணலில் காரை இறக்கி, கடல் காற்றை, 'என்ஜாய்' செய்தபடியே சென்னையை நோக்கி வர ஆரம்பித்தோம்...

வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, வண்டியில் இருந்து இறங்கி, கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்த போது, நண்பரும், லென்ஸ் மாமாவும் வெண்குழல் வத்தி பற்ற வைக்க, தீப்பெட்டியை உரசி, உரசி காலி செய்தனர். கடல் காற்றால் தீக்குச்சி பற்றவே இல்லை. 'நெருப்புப் பெட்டி மாதிரி கீழே போட்டு உடைத்துப் பற்ற வைக்க வேண்டும் போலிருக்கிறது...' என்றார் மாமா.

'பெட்டியைப் போட்டு உடைப்பதா?' என்றேன்.

'பெட்டி என்றால் பெட்டியா? புட்டி, கண்ணாடிக் குழாய். காற்றுப் புகாத கண்ணாடிக் குழாய் உருவில் தான் பிரான்சில் முதன் முதலில் தீப்பெட்டி வந்தது 1781ல்.

'பாஸ்பரசில் தோய்த்த காகிதச் சுருள் ஒன்று அதற்குள்ளே இருக்கும். நெருப்பு தேவை என்றால் அந்தக் குழாயைப் போட்டு உடைக்க வேண்டும். குபீரென்று நெருப்புக் கிளம்பும். அதில் பற்ற வைத்துக் கொள்ள வேண்டியது தான்!'

'அப்படியானால் ஒரு குச்சி தேவைக்கு, ஒரு புட்டியையே உடைக்க வேண்டும்!'

'அது மட்டுமல்ல... பாஸ்பரஸ் புகை விஷத்தால் ஏராளமான சாவு வேறு. தற்கொலை செய்து கொள்கிறவர்களுக்கு அந்த பாஸ்பரஸ் குழாய் கிடைத்தது ரொம்ப வசதியாகப் போய் விட்டது. தப்பித் தவறி கீழே விழுந்தோ, மோதியோ உடைந்தாலும் ஆபத்து!' என்றார் மாமா.

'இப்போதும் அப்படிப்பட்ட தீப்பெட்டிதான் கிடைக்கும் என்று இருக்கக் கூடாதோ? சிகரட் பிடிக்கிறவர்கள் தாமாவே நிறுத்திக் கொள்வார்கள்...' என்றேன்.

உடனே, மாமா, 'அந்த காலத்திலே எங்கப்பா சுதேசி இயக்கத்தில் சேர்ந்து அன்னிய நாட்டு துணியைக் கொளுத்தினார். வெள்ளைக்கார போலீசு எங்கப்பனைப் பிடித்து சிறையில் போட்டது. இப்போது நான் கடைத்தெருவில் நின்று வெளிநாட்டு சிகரட்... 555... பிடிச்சால் போலீசு கைது பண்ணி அபராதம் போடுது. 'தியாகி'கள் குடும்பத்துக்கு

எப்போதும் போலீசு தொந்தரவுதான்!' என்று, 'வருந்தி'ச் சொன்னார்.

தலையிலடித்துக் கொண்டேன்.

'அதெல்லாம் சரி... ஜீப் அனுபவத்தை சொல்...' என்கிறீர்களா?

அது தனிக்கதை; இன்னொரு முறை சொல்கிறேன்!

***

தனியார் சேட்டிலைட் வானொலி ஒன்றின் அறிவிப்பாளர், தயாரிப்பாளர் தேர்வுக்கான நேர்முகம் ஒன்று கடந்த வாரம் நடந்தது. தேர்வுக் குழுவில் என்னையும் ஒருவராகக் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.

எத்தனை, எத்தனை, 'டேலண்டுகள்...' எத்தனையோ பேரிடம் திறமைகள் பொதிந்து கிடக்கின்றன... அதை வெளியே கொண்டு வர வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

திண்டுக்கல்லை சொந்த ஊராகக் கொண்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர்... மாதம், 'டேக் ஹோம் பே' 33 ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்... ஆனால், வானொலியின் மீது உள்ள காதலால், தற்போது வாங்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும் என்றார்.

'டிவி' வந்து விட்டதால், வானொலியின், 'பாப்புலாரிட்டி' போய் விட்டது என பலர் எண்ணம் கொண்டுள்ளனர்; அது மாயத் தோற்றமே என்பது, இந்த நேர்காணலில் மீண்டும் நிரூபணமானது.

'இன்னமும் ஏன் வானொலி கேட்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ஆயிரமாயிரம் பதில் வருகிறது.

'இந்த குறிப்பிட்ட வானொலி, 24 மணி நேர ஒலிபரப்பு ஆதலால், இரவு 12:00 மணிக்கு மேல் எந்த நேயர் கேட்கப் போகிறார்...' என, ஒரு கேள்வியை எடுத்து விட்டேன்.

'ஏன் சார்... நைட் டூட்டி டாக்டர்கள் இல்லையா? நர்சுகள்... வாட்ச்மென்கள்... மாணவர்கள்... ஒர்க்ஷாப்புகள்... காவல் நிலையங்கள்... இரவு நேர ரோட்டோர ஓட்டல்கள்... டீ கடைகள்...' என அடுக்கிக் கொண்டே போயினர் நேர்காணலுக்கு வந்தவர்கள்.

நேர்காணல் முடிந்த பிறகு, 'ஹை—டீ' ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது நேர்காணல் நடத்த வந்திருந்தவர்களுடன் பேசினேன். அதில் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒரு வரும் கலந்து கொண்டார். மனிதர் கண்ணதாசனை கரைத்து குடித்திருக்கிறார்.

'அத்திக்காய் காய் காய்... ஆலங்காய் வெண்ணிலவே...' பாடலில் வரும், 'மாதுளங்காய் ஆனாலும்...' என்று வரும் வரிகளுக்கு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்... நினைத்தே பார்த்திராத விளக்கம்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஆணுறை வியாபாரம், அதன் முன்னேற்றம் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன்...

அவர் சொன்னார்...

எங்க, 'புராடக்ட்' விற்பனையாகும், 28 நாடுகளில் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தோம்... இதில் துருக்கி நாட்டவர் தான் உஷாரானவர்களாக இருக்கின்றனர். 'எய்ட்ஸ்' தாக்கி விடுமோ என, 98 சதவீதம் பேருக்கு பயமிருக்கிறது. அதனால், 76 சதவீத மக்கள், 'பாதுகாப்பான' உறவு வைத்துக் கொள்கின்றனர்.

உலகின் நம்பர் ஒன் நாடாக இருக்கும் அமெரிக்கா, இதிலும் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. ஆண்டுக்கு, 124 முறை, 'உறவு' வைத்துக் கொள்கின்றனர். நம் இந்தியர்கள், 76 முறையும், ஹாங்காங் வாசிகள், 63, சீனர்கள், 72 முறையும்...

இதில் நாம் கட்டுப்பெட்டி என்றாலும் சந்தோஷமே! அதாவது, இந்தியர்களில், 72 சதவீதம் பேருக்கு ஒரே, 'பார்ட்னர்' தான்! ஆனால், இதுவே அமெரிக்கர்களுக்கு, 11 சதவீதம் தான். இங்கிலாந்தில், 13 சதவீதம்!

இந்தியாவில், 'அந்த' அனுபவத்தை சராசரியாக, 20.3 வயதில் பெறுகின்றனர். இதுவே அமெரிக்காவில், 16 வயதிலும், இங்கிலாந்தில், 16.9 வயதிலும் பெற்று விடுகின்றனர்.

சர்வே எடுத்தவர்களிடம், 'உங்களுக்கு மிகவும் மன மகிழ்ச்சி தரும் செயல் எது?' என்று கேட்ட போது, இந்தியர்களில், 30 சதவீதம், 'வேலைக்குப் போவது...' என்றும், 21 சதவீதம் பேர், 'நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது...' எனவும், 14 சதவீதம் பேர், 'டிவி' பார்ப்பது' என்றும் கூறினர். 'உறவு கொள்வதில் மகிழ்ச்சி காண்கிறோம்...' என கூறியவர்கள் வெறும், 3 சதவீதத்தினரே! இதுவே, இங்கிலாந்து, 31 சதவீதம்.

உலகில், 10ல், 4 பேர், 'காண்டம்' உபயோகிக்கின்றனர். 16 முதல், 24 வயதுடையோரில், 64 சதவீதம் பேர் கண்டிப்பாக, 'காண்டம்' பயன்படுத்துகின்றனர்.

'ஒரு பரிதாபமான செய்தியையும் சொல்லியே ஆக வேண்டும். உலகிலேயே மிகக் குறைந்த அளவில் இந்தியர்கள், 'காண்டம்' பயன்படுத்துகின்றனர்...' என கூறி முடித்தார்.

— 'ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று இருந்தால், இந்த, 'காண்டம்' கண்றாவி எல்லாம் எதற்கு...' என நினைத்துக் கொண்டேன்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us