தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று அலுவலகத்துக்கு, பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் அர்த்தநாரி வந்திருந்தார். என் கையால், காபி வாங்கி குடிப்பதில் அவருக்கு அலாதிபிரியம். சர்க்கரை, சூடு எல்லாம் சரியான பக்குவத்தில் கொடுப்பேன் என்று கூறுவார்.

அப்போது, திண்ணை மேட்டர் கொடுக்க வந்த நடுத்தெரு நாராயணன், தன் பக்கத்து வீட்டுக்காரர், தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து, ஓரடி நிலத்தை அபகரித்து, காம்பவுண்டு சுவர் எழுப்பியதை பற்றி புலம்பினார்.

'போனது போகட்டும் விடுங்க சார்... வினை விதைச்சா வினை அறுக்கணும்; முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களே... கேள்விப்பட்டதில்லையா? இதுக்கு போய் கோர்ட்டு, கேஸ் என்று அலைய போறீரா?' என்று கூறி, சமாதானப்படுத்தினேன். எங்களது பேச்சை செவிமடுத்த டாக்டர் அர்த்தநாரி, மருத்துவத் துறையில் தான் கேள்விப்பட்ட, விஷயத்தை நினைவு கூர்ந்தார்.

அவர் கூறியதின் சாராம்சம்...

இதய நோய் நிபுணராக, 30 ஆண்டு அனுபவத்தில், பேராசிரியராக இருந்த போதும், பிரபல மருத்துவமனைகளில் பணிபுரிந்த போதும், நோயாளிகளின் மருத்துவ வரலாறு கேட்கும் போதும், பல உண்மைகளும், வேதனைகளும் வெளி வரும். அவைகளிலிருந்து, கடவுள் உள்ளார் என்பதற்கு, இரண்டு உதாரணங்களை சொல்ல முடியும். அவை:

என்னிடம் இதய நோய்க்கு வைத்தியம் பார்க்க வந்த, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஒருவர், 35 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் வருமானம் ஈட்டி தரும் பகுதி ஒன்றில் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். காவல் நிலையத்தில் இருந்த போது, 'இளம் பெண் ஒருத்தி தீக்குளித்தார்...' என்ற அவசரமான தொலைபேசி அழைப்பு தகவலைக் கேட்டு, இவரும், மற்றொரு போலீஸ்காரரும் விரைந்தனர். தீயில் கருகிய, இளம் பெண், 'இதற்கு காரணம், என் மாமனார் தான்...' எனக் கூறி, இறந்து போனாள்.

இன்ஸ்பெக்டராக இருந்தவரும், சப் - இன்ஸ்பெக்டர் ஒருவரும் மற்றும் மேற்கூறிய இரு காவலர்கள் தான் இந்த வழக்கை விசாரணை செய்தனர். குற்றவாளியான, அந்த பெண்ணின் மாமனாரை, காவலர்கள் அடித்து, வெளுத்து வாங்கினர். என்ன பயன்? குற்றவாளி பெரும் செல்வந்தர், வியாபாரி. இந்த குற்றத்தையே திசை திருப்பி, இன்ஸ்பெக்டருக்கு, ஒரு லட்சம் ரூபாய் தந்தார். 35 வருடத்திற்கு முன், இந்த ஒரு லட்சம் எவ்வளவு மதிப்புள்ளது என்று சொல்ல வேண்டியதில்லை. எப்.ஐ.ஆர்., எழுதிய சப்- இன்ஸ்பெக்டருக்கு, 50 ஆயிரம்; இரண்டு காவலர்களில் ஒருவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் என, பகிர்ந்து கொடுத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விட்டார் அந்த செல்வந்தர். ஆனால், இன்னொரு காவலர், பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

சில வருடங்கள் சென்ற பின், ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மனைவி, சினிமா நடிகை போல் இருப்பாராம். ஸ்டவ் வெடித்து, தீப்பிடித்து கொண்டது. மனைவியை காப்பாற்ற, மனைவியை அணைத்து தீயைத் தடுத்தார் இன்ஸ்பெக்டர். ஆனால், மனைவி பிழைக்கவில்லை. இவர் உடலும் தீயில் கருகி, தீக்காயங்களோடு பிழைத்தார்.

எப்.ஐ.ஆர்., எழுதிய, சப் - இன்ஸ்பெக்டர், மோட்டார் பைக் விபத்து ஒன்றில், வலது கையை இழந்தார்.

கையூட்டு வாங்கிய காவலர், லஞ்ச பணத்தில், நிலம் வாங்கி, வீடு கட்டி, தன் செல்ல மகளுக்கு, தடபுடலாக திருமணம் செய்து வைத்தார். ஆனால், ஒரே வாரத்தில், விபத்தில் புது மாப்பிள்ளை உயிர் துறந்தார்; மகள் விதவையானாள்.

சேலத்தில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி...

கடந்த, 1982ல் மாதமிருமுறை, முதல் மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், இதய நோயாளிகளை பார்க்க, சேலம் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது, 10 பவுன் கொண்ட கழுத்துச் செயின், என் கைப்பையிலிருந்து காணாமல் போனது. இதைப் பற்றி, அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஒரு மாதம் ஆகியும் எதுவும் செய்யவில்லை.

இரண்டு மாதம் கழித்து, சிகிச்சைக்கு என்னிடம் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரிடம் நகையை மீட்டு தர சிபாரிசு செய்யக் கூறினேன், அந்த இன்ஸ்பெக்டர் ஆழ்ந்த கவலையில் இருந்தார். 'அவரிடம், உங்கள் இதய நோயைப் பற்றி கவலைப்படாதீர்கள்...' என்று கூறினேன்.

'நான் நோயைப் பற்றி கவலைப்படவில்லை, என் மகள், திருமணம் ஆகி, ஒரு மாதத்தில் கிணற்றில் விழுந்து, தற்கொலை செய்து கொண்டாள். மூன்று ஆண்டுகளுக்கு முன், என் மூத்த மகள் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாள். துக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்?' என்றார். இது பற்றி, என் தாயாரிடம் கூறிய போது, 'அந்த இன்ஸ்பெக்டர், எத்தனை நிரபராதிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து இருப்பாரோ...' என்று கூறினார்.

இவை இரண்டும், நான் கேட்டறிந்த உண்மை நிகழ்ச்சி. ஆனால், நம் அரசியல் வாதிகள், தன் தலைமுறை, தன் மகன், மகள் தலைமுறை, தன் பேரன்மார் தலைமுறை என்று, எல்லாருக்கும் வஞ்சனையில்லாமல், எங்கும், எதிலும் அதிகாரம், பொருள் வளத்தில் பகிர்ந்து கொடுத்து வாழ்வதைப் பார்த்தால், கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று நினைக்கத் தோன்றுகிறது. என்று முடித்தார் டாக்டர்.

— படித்து, நேர்மையாக உழைத்து, 30 - 40 ஆண்டுகள் பணியாற்றி, தன் பிள்ளைகளுக்கு படிப்பு தவிர, வீடு, வாசல், கார், நிலபுலன் என்று வேறு எதுவும் கொடுக்க முடியாமல், வேதனையோடு, வாழ்க்கையில் போராடி வரும் மக்களுக்கு இடையே, படிப்பறிவு இல்லா அரசியல்வாதிகளின் வாரிசுகள், சகல வசதிகளையும் அனுபவித்தபடி வலம் வருவது எந்த வகையில் நியாயம்? பட்ட பின் தான் திருந்துவரோ!

***

ஈ.வெ.ரா., தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம்:

தம்மை தாம் பெரிதாகவும், தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருப்பவர் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவர்.

எவ்வளவு பெரிய பதவியும், வருவாயும் வந்தாலும், ஆசையால் மனம் வாடி, சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பர். ஆதலால், வருவாய் போதாமல் இருப்பதற்கும், கடன்காரர்களாயிருப்பதற்கும் காரணம், தம் பலவீனத்தின் பயனான பேராசையும், அவசரமுமேயாகும்.

என்னை நான் சின்னவன் என்றும், குறைந்த செலவில் வாழ்வதற்குத் தகுதியுடைவன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கும் காரணத்தாலேயே, நான், என் யோக்கிய தைக்கு மீறின மிகப் பெருமையுடையவனாகவும், தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக் கொண்டிருக்கிறேன்.

நான் மூட்டை தூக்குவதில், பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனேயொழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதுபோல், மனதைக் கட்டுப்படுத்த சக்தியிருந்தால், எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.

'பி.ஏ., படிச்சிட்டேன்... எம்.ஏ., முடிச்சிட்டேன்... என் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்க மாட்டேங்குது...' என, 'ஒயிட்காலர்' வேலையை, கனா கண்டு கொண்டிருக்கும் இளைஞர்கள் தலையில் கொட்டியது போல இருக்கிறது அல்லவா?

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us