/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கோபம் கோபமா வருதா? எங்ககிட்ட வாங்க!
/
கோபம் கோபமா வருதா? எங்ககிட்ட வாங்க!
PUBLISHED ON : ஜன 27, 2019

பணிச் சூழல், கடுமையான மன அழுத்தம் காரணமாக, பலருக்கு, கடுங்கோபம் வருவது, இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அப்போது, கோபத்தில், கையில் என்ன பொருள் கிடைக்கிறதோ, அதையெல்லாம் துாக்கிப் போட்டு உடைப்பது, நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் வாடிக்கையாகி விட்டது.
இதுபோன்றவர்களுக்காகவே, அண்டை நாடான, சீன தலைநகர், பீஜிங் நகரில், 'ஸ்மாஸ்' என்ற பெயரில், ஒரு கடையை திறந்துள்ளனர். இந்த கடையில், பழைய, 'டிவி' பெட்டிகள், கடிகாரம், ரிமோட், ஒயின் பாட்டில், டெலிபோன் மற்றும் மொபைல் போன் போன்ற பொருட்கள் இருக்கிறது.
அடக்க முடியாத கோபத்துடன் வருவோர், இந்த பொருட்களை, தங்கள் விருப்பப்படி, துாக்கிப் போட்டு உடைக்கலாம். அப்போது, காயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு உடை மற்றும் 'ஹெல்மெட்' போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
பொருட்களை உடைக்க துவங்கியதும், அதற்கேற்ப, பின்னணி இசை, ஒலிபரப்பப்படும். அதற்கு தகுந்தாற்போல், ருத்ர தாண்டவமாடிய படியே, பொருட்களை உடைத்து, துவம்சம் செய்யலாம்.
பொருட்களை உடைத்து நொறுக்குவதற்கு, கிரிக்கெட் மட்டை, சுத்தியல் போன்றவையும் தரப்படும். அரை மணி நேரத்துக்கு, ஒரு நபருக்கு, 1,700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த அரை மணி நேரத்திலும், கோபம் தீராதவர்கள், கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
நாளுக்கு நாள், இந்த கடையில் கூட்டம் அதிகரித்து வருவதால், பீஜிங் நகரின் மேலும் சில இடங்களிலும், இதுபோன்ற கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக, உரிமையாளர், ஜின் மெங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'வன்முறையை ஊக்குவிப்பது, எங்கள் நோக்கமல்ல. தற்போதைய சூழலில், பலருக்கும் மன அழுத்தம் அதிகரித்து விட்டது. அதை போக்குவதற்கு தான், இந்த கடையை திறந்துள்ளோம்...' என்கிறார்.
அமெரிக்கா போன்ற நாடுகளில், ஏற்கனவே இதுபோன்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிலும், இந்த கடைகள் திறக்கப்படும் காலம், வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
— ஜோல்னாபையன்.