PUBLISHED ON : ஜன 27, 2019

எண்ணத்தில் தீவிரம்; அழுத்தமான பிடிப்பு இருந்தால், நினைத்ததை அடையலாம்.
இதை விளக்கும் கதை ஒன்றை பார்ப்போம்:
மன்னர் ஒருவர், தினமும் சாளக்கிராம பூஜை செய்து வந்தார். அவரது மகள், சிளாபாயி. அவளுக்கு அரண்மனையிலேயே, ஆசிரியர் ஒருவர் வந்து, கல்வி முதலானவைகளை கற்பித்து வந்தார்.
தந்தை செய்யும் சாளக்கிராம பூஜையை பார்த்த சிளாபாயிக்கு, ஓர் ஆசை உண்டானது; தனக்கு கல்வி கற்பித்த குருநாதரிடம், 'என் தந்தை செய்வதை போல, நானும் சாளக்கிராம பூஜை செய்ய வேண்டும். எனக்கு நீங்கள் ஒரு சாளக்கிராமம் தாருங்கள்...' என, வேண்டினாள்.
ஆத்மார்த்தமான அவள் அன்பை புரிந்து கொள்ளாத ஆசிரியரோ, உருண்டையாக இருந்த ஒரு கல்லை எடுத்து, சிளாபாயிடம் கொடுத்தார்.
'இது தான் சாளக்கிராமம். இதை வைத்து பூஜை செய்...' என்றார்.
அதை அப்படியே வேத வாக்காக கருதிய சிளாபாயி, அதற்கு தினமும் வழிபாடு செய்யத் துவங்கினாள்; அழுத்தமான, துாய்மையான, அன்பு வழிபாடு நடந்தேறியது.
காலங்கள் செல்ல, சிளாபாயி பருவம் அடைந்து, திருமண வயதை அடைந்தாள். திருமணம் நடந்தது; கணவருடன் புறப்பட்டாள். அவள் உறவினர் சிலரும் கூடவே சென்றனர்.
போகும் வழியில், ஓய்வெடுப்பதற்காக ஓர் ஆற்றங்கரையில் தங்கினர். தெளிவாக, சலசலத்து ஓடும் ஆற்று நீரை கண்டவுடன், பூஜை பெட்டியை எடுத்த சிளாபாயி, வழக்கப்படி சாளக்கிராம பூஜையை செய்தாள்.
பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவர், 'இது என்ன?' என்று கேட்டார்.
சிளாபாயின் அழுத்தமான வழிபாட்டை அறியாத உறவினர்களோ, 'விளையாட்டாக, இப்படி செய்வாள்...' என்றனர்.
வழிபாடு முடிந்தது. புறப்படும் முன், சிளாபாயிக்கு தெரியாமல், பூஜை பெட்டியை எடுத்து, ஆற்றில் வீசி விட்டார், கணவர்.
பயணம் தொடர்ந்தது. கணவர் இல்லம் சென்ற சிளாபாயி, மறுநாள் பூஜை செய்வதற்கு தயாரானாள்; பூஜை பெட்டியை காணோம். வருந்திப் புலம்பத் துவங்கினாள்.
'பகவானே... இது என்ன சோதனை... வழிபாட்டிற்கு வந்ததே இடையூறு... பூஜை பெட்டி வந்தாலன்றி, உணவு உட்கொள்ள மாட்டேன்...' என்று உண்ணாமல், உறங்காமலிருந்தாள், சிளாபாயி.
தீவிரமான அவளது பக்தியைக் கண்ட பகவான், ஆச்சாரியாரை போல வடிவம் எடுத்து, பூஜை பெட்டியை அவளிடம் தந்து சென்றார்.
பூஜை பெட்டி வந்தவுடன், வழக்கப் படி பூஜை செய்தாள்; மனம் மகிழ்ந்தாள். அவள் கணவரும், மனைவியின் அழுத்தமான துாய்மையான வழிபாட்டை உணர்ந்து, தானும் திருந்தி நல்வழிப்பட்டார்.
அழுத்தமான, ஆழமான, அன்பு வழிபாடு அல்லல்களை தீர்க்கும்; சந்தேகமே இல்லை. பலர் வழிகாட்டி விட்டுப் போயிருக்கின்றனர்; நாமும் பயணிப்போம். நன்மையே விளையும்!
பி.என்.பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கேரளபுரத்தில், சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இங்குள்ள, அரச மரத்தடியில், நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள், வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள், கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திரகாந்த கல்லால் உருவாக்கப்பட்ட இந்த சிலைக்கு, இப்படி ஒரு சக்தி இருக்கிறது.