
விஜய்யுடன் மோத தயாராகும், ரஜினி!
தமிழ் சினிமாவில், ரஜினி, 'சூப்பர் ஸ்டார்' ஆன பின், ஹீரோவான நடிகர்களெல்லாம், அப்பா வேடங்களில் நடித்து வருகின்றனர். ஆனால், ரஜினியோ, 69 வயதிலும், ஹீரோவாக நடிப்பதோடு, விஜய் மற்றும் அஜீத் போன்ற நடிகர்களுக்கே நெருக்கடி கொடுத்து வருகிறார். அந்த வகையில், 2019 பொங்கலுக்கு வெளியான, பேட்ட படத்தில் நடித்து, அஜீத்தின், விஸ்வாசத்துக்கு நெருக்கடி கொடுத்த ரஜினி, அடுத்தபடியாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், படத்தில் நடித்து, தீபாவளிக்கு, விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப் போகிறார்.
—சினிமா பொன்னையா
நிவேதாவின் இடுப்பை ஒடித்த, பிரபுதேவா!
ஒருநாள் கூத்து மற்றும் திமிரு புடிச்சவன் படங்களில் நடித்தவர், நிவேதா பெத்துராஜ். தற்போது, பொன்மாணிக்கவேல் என்ற படத்தில், பிரபுதேவாவுடன், ஒரு பாடலில், அவருக்கு இணையாக உடம்பை வளைத்து, நெளித்து ஆட முடியாமல் ரொம்பவே அவஸ்தைபட்டிருக்கிறார். அதைப் பார்த்த பிரபுதேவா, தன் பாணியில், அவருக்கு சில மணி நேரங்கள் நடன பயிற்சி கொடுத்திருக்கிறார். அதையடுத்து, சிறப்பாக நடனமாடி இருக்கிறார், நிவேதா. ஆனால், 'அந்த பாடலில், பிரபுதேவாவுடன் நடனமாடி முடிப்பதற்குள், என் இடுப்பே ஒடிந்து விட்டது. அந்த அளவுக்கு அவருடன் வளைந்து, நெளிந்து ஆடினேன்...' என்கிறார்.
சும்மா அறுப்பாளா சொத்தைக் களாக்காயை!
— எலீசா
தமன்னாவுக்கு வந்த குத்தாட்ட ஆசை!
கதாநாயகியாக நடித்தபடியே, சில படங்களில் குத்துப்பாட்டுக்கும் நடனமாடி வருகிறார், தமன்னா. 'அதிக பணம் கிடைக்கிறதே என்பதற்காக, அப்படி ஆடவில்லை. கதாநாயகியாக, நடிக்கும் படங்களில், நடனமாட போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அதிரடியாக நடனமாட வேண்டும் என்ற தனிப்பட்ட ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத் தான், இப்படி அவ்வப்போது, 'அயிட்டம்' பாடல்களுக்கு நடனமாடுகிறேன்...' என்கிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற கதை!
— எலீசா
கமல் கட்சியில் சேர விரும்பும், ஷகீலா!
மலையாளப்பட கவர்ச்சி நடிகை, ஷகீலா, சமீபகாலமாக, காமெடி கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், எதிர்காலத்தில், தான் அரசியலுக்கு வரப் போவதாக, ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, 'நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகை. அதனால், அவரது, மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து, அரசியல் பணியாற்ற ஆசைப்படுகிறேன்...' என்று தெரிவித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* மூன்றெழுத்து நட்பு நடிகை, பழைய ஞாபகத்தில், தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர்களிடம், துருவி துருவி கதை கேட்டதோடு, 'என்னை, 'டம்மி' பண்ணினால் நடப்பதே வேறு...' என்று, எச்சரிக்கும் தொனியில் பேசி வந்தார். இதனால், அம்மணியின் வீட்டுப் பக்கம், சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூட செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, இன்னும் சில காலம் போனால் முழுவதுமாக தன்னை ரசிகர்கள் மறந்து விடுவர் என்று, தற்போது, சில இளவட்ட இயக்குனர்களுக்கு போன் செய்து, 'நீங்களாக பார்த்து என்ன வேடம் கொடுத்தாலும் நடிக்கிறேன். எனக்கு ஆதரவு கொடுங்கள்...' என்று, தேனொழுக இனிக்க இனிக்க பேசி, சினேகம் வளர்த்து வருகிறார்.
'நம்ம மூணாவது, 'பிளாட்' சினேகாகிட்ட, 'ரொம்ப பந்தா எல்லாம் செய்ய வேண்டாம்...' என்று சொல்லி வைப்பா, இந்த, 'பிளாட்'டை பராமரித்து வரும் என் கணவரிடம், 'இது எப்படி செய்யலாம், அது எப்படி செய்யலாம்...' என்று வாய் சவடால் விட்டுள்ளார்...' என்றாள், தோழி.
* பரோட்டா காமெடியனின் மார்க்கெட்டை வீழ்த்தி, உச்ச காமெடியனாகி விட்டார், பரட்டைத் தலை காமெடியன். மேலும், பரோட்டாவை சுத்தமாக, 'வாஷ் - அவுட்' செய்து விட வேண்டும் என்று, அவருக்கு செல்லவிருக்கும் ஓரிரு படங்களையும், குறைந்த சம்பளத்தில் நடித்துத் தருவதாக சொல்லி, தன் பக்கம் இழுத்து வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த பரோட்டா காமெடியன், பரட்டைத் தலைக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுமென்று, சில முன் வரிசை ஹீரோக்களுடன் நட்பு வளர்த்து, பதிலடி கொடுக்கும் திரைமறைவு வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார்.
'நம்ம யோக பாபுவுக்கு அடித்தது யோகம். அவன் தொட்டது எல்லாம் வெற்றி தான் மச்சி...' என்றான், நண்பன்.
'அது, சரி தான்... அதுக்காக, தன்னோடு இருப்பவனையே பலி ஆடாக்கி, அழித்து விட்டு, முன்னுக்கு வரணுமாடா... இது தப்பில்லையா?' என்றான், சூரி.
சினி துளிகள்!
* தான் பார்க்கும் படங்கள் ஏதேனும் அதிகம் பாதித்தால், உடனே, அந்த பட இயக்குனர்களுக்கு போன் செய்து பாராட்டுகிறார், சினேகா.
* சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடிக்கடி மதுரை சென்று, தன் ஓட்டலில் வியாபாரம் பார்க்கிறார், பரோட்டா சூரி.
அவ்ளோதான்!