PUBLISHED ON : செப் 16, 2018

பரிசளிப்பது ஒரு கலை. சரியான சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு தகுந்த பரிசை அளிப்பது, மிகவும் பாராட்டுக்குரியது. அவரவருக்கு பயன்படும் விதத்தில், வித்தியாசமான பொருட்கள் பரிசளிப்பதற்கான டிப்ஸ் இதோ:
* கைக் குழந்தையை பார்க்க போகும்போது, நேப்கின், டிஸ்போசபிள் நேப்பி, பீடிங் பாட்டில், ஸ்வெட்டர், குல்லாய், கை, கால்களுக்கு கிளவுஸ் மற்றும் சிறு பொம்மைகளை பரிசளிக்கலாம்
* விருந்திற்கு பின் பணத்தை கவரில் போட்டு கொடுக்கும்போது, கவரின் உள் பகுதியில் உங்கள் பெயர், முகவரி, பரிசுத் தொகை ஆகியவற்றை குறிக்கவும்
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தரமான விளையாட்டு பொருட்கள், பிஸ்கட், சாக்லேட், உடை, பென்சில் பாக்ஸ், டிராயிங் செட், புத்தக பை, கதைப் புத்தகங்கள் மற்றும் டிபன் பாக்ஸ் போன்றவற்றை தரலாம்
* சிறுமியருக்கு, ஹேர் க்ளிப், ஹேர் பேண்டு, வளையல்கள், தோடுகள், கலர் ஸ்டிக்கர் பொட்டுகளை கொடுக்கலாம்
* வயதிற்கேற்றவாறு புத்தகங்களை பரிசாக கொடுப்பது, பெறுபவருக்கு உற்ற நண்பரை பெற்றுத் தருவதற்கு சமம்
* பள்ளி மாணவர்களுக்கு, மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டு பொருட்களைத் தரலாம்
* புதுமனை புகு விழாவிற்கு செல்வோர், மேஜை விரிப்புகள், படுக்கை விரிப்பு, மிதியடிகள், காலிங் பெல், கெய்சர், மின்விசிறி மற்றும் அலங்கார லைட் போன்றவற்றை தருவது பயனுள்ளதாகயிருக்கும்
* திருமண தம்பதியருக்கு, அவர்கள் உபயோகிக்க கூடிய பரிசு பொருட்களாக கொடுக்கவும்
* 'டீன் - ஏஜ்' பெண்களுக்கு, அழகு சாதனங்கள், துப்பட்டா, ஸ்கர்ட், டாப்ஸ் மற்றும் சல்வார் கமீஸ் போன்றவற்றை தரலாம்
* 'டீன் ஏஜ்' ஆண்களுக்கு, ஆப்டர் ஷேவ் லோஷன், டி - ஷர்ட், பெர்முடாக்கள் மற்றும் ஜீன்ஸ் போன்றவற்றை பரிசளிக்கலாம்
* நெருங்கிய நண்பர்களுக்கு, உடை மற்றும் வாசனை பொருட்களை கொடுக்கலாம்
* உயர் அதிகாரிகளுக்கு, விலை உயர்ந்த பரிசுகளை அளித்தால், தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதோடு, நீங்கள் காக்காய் பிடிக்க முயல்வதாக மனதில் கொள்வர்; தவிர்க்கவும்
* பெண்களுக்கு, தாம்பூலத்துடன், அரக்கு, அடர்ந்த பச்சை, மஞ்சள் நிறத்தில் தரமான ரவிக்கை துணி வைத்து கொடுக்கலாம்
* இசைப் பிரியர்களுக்கு, ஆடியோ,'சிடி'க்கள், கேசட்டுகள்
* நண்பர் மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது, பழம், பிஸ்கட், பூ போன்றவை தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்பதில்லை... ஜாம் சக்தி தரும் குடிமான, புட்டிகளை அளிக்கலாம்! பக்தி பாடல், சி.டி., மற்றும் சின்ன ரேடியோ போன்றவற்றையும் தரலாம்
* வார, மாத பத்திரிகைகளுக்கு சந்தா கட்டினால், வீட்டு உபயோக பொருட்கள், சமையல் குறிப்புகள் மற்றும் பல செய்திகளை படிக்க உதவும்
* திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு நேரில் சென்று பரிசளிக்க முடியாவிட்டால், கூரியர் மூலம் அனுப்பினால், செலவும் மிச்சம்; குறித்த நேரத்திலும் சென்றடையும்
* விலை உயர்ந்த அலங்கார பொருட்களை விட, சாதாரண துண்டு, மப்ளர், சாக்ஸ் மற்றும் இசைத்தட்டு போன்றவற்றை வயதானோருக்கு அளிக்கலாம்
* தோட்டக் கலையில் ஆர்வமுள்ளோருக்கு, செடிகள் மற்றும் மரக் கன்றுகளைத் தந்தால், இவை வளர்ந்து காலத்திற்கும் மகிழ்ச்சியும், பலனும் தரக்கூடியவை
* நெருங்கிய நண்பர் மற்றும் உறவினருக்கு திருமண பரிசு தரும்போது, அவர்களின் தேவை என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றார் போல் பரிசளிக்கலாம்
* பணமாக கொடுப்பதை விட, 'கிப்ட்' செக் மற்றும் வவுச்சர்களாக கொடுத்தால், சம்பந்தப்பட்டோர், தேவைக்கேற்ப உபயோகப்படுத்துவர்
* யார் எந்த பரிசு அளித்தாலும், பெறுபவர், அவர்களுக்கு, 'நன்றி' சொல்வது, நாகரிகத்தை காட்டும்.
- சி.மந்தாகினி.
