PUBLISHED ON : அக் 08, 2023

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கும் என்னென்ன நைவேத்தியம் செய்யலாம் என்பதை முன்னரே முடிவு செய்யுங்கள். அதற்கான பொருட்களை வாங்கி, தனித்தனியே பாக்கெட்டில் போட்டு வையுங்கள்
* வருகிறவர்களுக்கு சுண்டல் போட்டுக் கொடுக்க, கப், பேப்பர் பிளேட், பிளாஸ்டிக் ஸ்பூன் உள்ளிட்டவற்றை எந்த அளவுக்குத் தேவைப்படும் என்று கணக்குப் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
* பாக்கு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம், கேரி பேக்ஸ் உள்ளிட்டவற்றை, 'ஹோல்சேல்' கடையில் வாங்கி வைத்துக் கொண்டால், செலவு கணிசமாக குறையும்
* கொலுவுக்கு வருகிறவர்களுக்கான, 'கிப்ட்'டை வீட்டிலேயே சின்னச் சின்ன, 'கிராப்ட் ஒர்க்'காக நீங்களே செய்து கொடுக்கலாம்
* கொலு படிகளில் பொம்மைகளை, பிள்ளைகளை விட்டே வைக்க சொல்லலாம். உதாரணத்துக்கு, ஒரு பாலம் மாதிரி வடிவம் வைக்கிறோம் என்றால், பழைய,'சிடி'களை எடுத்து தொடர்ச்சியாக, அதை மணலில் பாதி புதைத்து வைக்கலாம். பாலமும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதேபோல, பொம்மைகளுக்கு, 'குவில்லிங்' பேப்பரால் டிரெஸ் போல செய்யலாம்
* வீட்டில் காலியான ஷாம்பூ பாட்டில், விக்ஸ் பாட்டில், மருந்து பாட்டில் இருந்தால், அவற்றின் மீது, கலர் பேப்பர்களை ஒட்டி, பேண்டு செட் போல வைக்கலாம்
* ரெடிமேட் பார்க்குகள் கிடைத்தாலும், நாமே நம் வீட்டுப் பிள்ளைகளை வைத்து பார்க் செய்யும்போது, திருப்தி கிடைக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம், 'இதைச் செய்தது நம் வீட்டுப் பிள்ளைகள்...' என்று அறிமுகப்படுத்தும்போது அவர்களின் தன்னம்பிக்கை வளரும்
* நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், நீங்கள் என்ன டிரெஸ் அணியப் போகிறீர்கள் என்பதை முன்னரே முடிவு செய்யுங்கள். புடவையாக இருந்தால், 'மேட்சிங் பிளவுசும்' சுடிதாராக இருந்தால், 'ஷாலும்' ஒரே செட்டாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொலு வைத்த பிறகு...
* படி ஓரங்களில் சார்ட் பேப்பர்களில் ஸ்லோகங்கள், பொன்மொழிகள் எழுதி ஒட்டி வைக்கலாம்
* தினமும் ஒரு வகை கோலத்தை பேப்பர் பிளேட்டில் போட்டு வைக்கலாம். பேப்பர் பிளேட்டில் பெவிகால் போட்டு ஜவ்வரிசியை ஒட்டி கோலம் போடலாம். குந்தன் கற்களைப் பயன்படுத்தி ஒரு நாள், மற்றொரு நாள் மணிகள், இன்னொரு நாள் ஜமிக்கி வைத்து என்று, ஒன்பது நாளும் விதவிதமாக கோலம் போடலாம்.
அரிசி மாக்கோலம், கோலமாவு கோலம், ரங்கோலி, பூக்கோலம், கலர் உப்பு கோலம், ஸ்டார் டஸ்ட் கோலம், இன்ட்ஸ்டண்ட் ரங்கோலி, நீர் மேல் கோலம், நீரின் அடியில் கோலம், நவதானிய கோலம் என, விதவிதமாக போட்டு ஜமாய்க்கலாம்
* வருகிறவர்களை புன்னகையோடு வரவேற்பது நல்லது. அதற்கு அந்த ஒன்பது நாட்களும், 'டிவி'யை நிறுத்தி வைப்பது மிகவும் அவசியம்
* நவராத்திரி நேரத்தில், நம் வீட்டுக் குழந்தைகளுக்கு விதவிதமாக அலங்காரம் செய்யலாம்; குழந்தைகளை பாடச் சொல்லலாம்; ஆட வைக்கலாம்
* கொலு வைத்தால் தினமும் தவறாமல் நைவேத்தியம் செய்வோம் இல்லையா? அதேபோல், தினமும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து, யார் காலும் படாத இடத்தில் அல்லது செடி, துளசி மாடம் உள்ள இடத்தில் ஆரத்தி தண்ணீரை ஊற்ற வேண்டும்
* கொலுவைப் பார்க்க வரும் கன்னிப் பெண்களுக்கு மருதாணி, வளையல், பொட்டு வைத்த தாம்பூலத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஒன்பது நாட்களுக்கும், தினம் குறைந்தது ஐந்தாறு பெண்மணிகளுக்காவது தாம்பூலம் கொடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்
* ஆண்டுக்கு ஆண்டு ஏதேனும் ஒரு, 'தீம்' எடுத்துக் கொண்டு, ரெகுலரான கொலுவுடன், அதையும் சேர்த்து வைக்கலாம்
* நவராத்திரி கொலுவில் வைக்க நாமே கலசம் செய்யலாம். வருஷா வருஷம் விதவிதமாக நம் கற்பனைத் திறனுக்கு ஏற்ப அலங்காரமும் செய்யலாம்
* உங்கள் ஏரியாவில் பாட்டு, வீணை என்று அசத்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை அழைத்து, கொலுவில் கச்சேரி செய்யச் சொல்லலாம்
* கொலு வைக்கும் படிக்கட்டுகளில், ஓரிழை கோலம் போட வேண்டும். 'ஒன்பது நாட்களும் கொலு நல்லபடியாக தங்கு தடையின்றி நடக்க வேண்டும்...' என, இறைவனை வேண்டி, 'லக்ஷ்மி கல்யாணம்' பாடி ஆரம்பிப்பது நல்லது
* ஒரே ஆண்டில், மொத்தமாக நிறைய பொம்மைகள் வாங்காமல், ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த, 'டிரெண்டு'க்கு ஏற்றாற் போல் வாங்கி கொலு வைக்கலாம்
* ஈடுபாட்டுடன் குடும்பமே ஒன்று சேர்ந்து கொலு வைக்கும் போது, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். எங்கோ புது உலகத்துக்கு, 'டூர்' சென்று, 'என்ஜாய்' செய்த ஆத்ம திருப்தி குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்கும்
* சின்னவீடு, கொலு வைக்க வசதியில்லை. படிகள் வாங்கி கொலு வைத்துவிட்டு பிறகு அந்தப் படிகளைப் பாதுகாக்க இடமில்லை என்றால், படிக்கும் புத்தகங்களை மூன்று படிக்கட்டுப் போல் அமைத்து, கொலு வைக்கலாம். இதனால் பாடப் புத்தகத்துக்கு பூஜை செய்தது போலவும் ஆயிற்று; கொலு வைத்த சந்தோஷமும் கிடைக்கும்
* நவராத்திரியின் வெள்ளிக்கிழமையில் ஸ்பெஷலாக புட்டு செய்து, 10 சுமங்கலிப் பெண்களுக்குக் கொடுத்து, நீங்களும் சாப்பிட்டால், வீட்டுப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மிகவும் விசேஷம்
* 'வெஸ்டர்ன் கல்ச்சரில்' மிதந்து கொண்டிருக்கும் குழந்தைகளை, நம் கலாசாரத்தில் நுழைக்க நவராத்திரி போல வேறு பண்டிகை இல்லை. எனவே, நீங்கள் கொலு வைக்கவில்லை என்றாலும், கொலு வைத்த கோவில்களுக்கு தினம் ஒரு, 'விசிட்' அடிக்கத் தவறாதீர்கள்.
