தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

நான், 65 வயது நிரம்பிய, அரசு துறையிலிருந்து பணி ஓய்வு பெற்றவன். எனக்கு, இரண்டு மகன்கள், ஒரு மகள். முதல் மகன் மற்றும் கடைசி மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

இரண்டாவது மகனுக்கு வயது, 34. பட்டப் படிப்பு படித்தவன். சிறு வயது முதலே அவன், பெற்றோருக்கு கீழ்ப்படியாதவன். கல்லுாரி வாழ்க்கையில், அவனுடைய தீய நட்பின் காரணமாக, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து, எப்படியோ படித்து முடித்தான். அவனாகவும் நல்ல வேலை தேடிக் கொள்ளவில்லை; நாங்கள் சொல்லும் இடத்திற்கும் வேலைக்கு செல்லவில்லை.

என் நற்குணங்களை தெரிந்த உயர் அதிகாரிகள் மற்றும் நண்பர்கள், வீடு தேடி வந்து, 'அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன். குறைந்த சம்பளமாக இருந்தாலும் செய்யச் சொல்லுங்கள். பிறகு, நல்ல வாய்ப்பு கிடைக்கும்...' என்று கூறினர்.

ஆனால், என் மனைவியிடம், 'அப்பா சொல்லும் இடத்திற்கு நான் வேலைக்கு போக முடியாது...' என்று, திட்டவட்டமாக மறுக்கிறான்.

வேறு வேலைக்கு போகச் சொன்னால், 'பிசினஸ்' பண்ண போகிறேன்...' என்றான். அதற்கு, மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, கம்ப்யூட்டர் கடை வைத்து கொடுத்தேன். அதை விட்டு வேறு ஏதோ ஒரு வேலைக்கு போய் விட்டான். அந்த கடையை எங்களால் பராமரிக்க முடியாததால், இரண்டு லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டர் மூலம் சம்பாதிக்க வழி செய்கிறேன் என்றால், அதையும் கேட்பதில்லை. 10 ஆண்டுகள் வீணானது தான் மிச்சம்.

என் மனைவியின் நிர்வாக சீர்கேட்டால், சொந்த வீட்டையும் விற்று, இப்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். பெற்ற கடனுக்காக, திருமணம் செய்து வைக்கலாம் என்று, மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சொந்த வீடு மற்றும் நல்ல வேலை இல்லை என்பதால், திருமணமாகவில்லை.

காலையில் வீட்டை விட்டு கிளம்பினால், இரவு, 11:00 மணிக்கு மேல் வீட்டிற்கு வருகிறான். மனைவியிடம், அவனைப் பற்றி கேட்டால், 'மூல ராசியில் பிறந்து விட்டான். அவன் அப்படித்தான் இருப்பான்...' என்கிறாள்.

நான், அவனை திருத்துவதற்கு ஏதேனும் அறிவுரை சொன்னால், 'அவன், உன்னால் தான் கெட்டு போய் விட்டான்...' என்று, அவன் எதிரிலேயே என்னை திட்டுவாள்.

ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட போகிறானோ என்ற பயம் ஒரு பக்கம்.

நான் ஒரு தகப்பனாக அல்லாமல் நண்பனாக எவ்வளவோ இறங்கி போய் முயற்சிக்கிறேன். பயன் இல்லை. இதனால், நான் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறேன். எனவே, அவனை நல்வழிப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்.

— இப்படிக்கு,

அன்பு சகோதரன்.



அன்பு சகோதரருக்கு —

உங்கள் மூத்த மகன் என்ன படித்தார், என்ன வேலையில் இருக்கிறார், அவரின் குணநலம் எப்படி... அவரின் மனைவி வேலைக்கு போகிறாரா, அவருக்கு எத்தனை குழந்தைகள்...

அவருக்கும், உங்கள் இளைய மகனுக்கும் உறவுமுறை எப்படி... இருமகன்களுக்கும் இடையே போட்டி பொறாமை தலை விரித்தாடுகிறதா... இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்கள் கடிதத்தில் தகுந்த விளக்கங்கள் இல்லை.

உங்கள் இளைய மகன் தீயவனாகவும், பொறுப்பற்றவனாகவும் ஊர் சுற்ற, கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம்.

உங்களின் அதிதீவிர கண்டிப்பு, பெற்ற தாயின் மிதமிஞ்சிய செல்லம், தீய நண்பர்கள் மற்றும் தீய பழக்க வழக்கங்கள். எல்லாவற்றையும், 'நெகடிவ்'வாகவே பார்க்கும் குயுக்தி மனம். அதிக துாக்கமும், சோம்பேறிதனமும் மற்றும் மரபியல் கல்யாணக் குணங்கள்.

உங்கள் இளைய மகன் விஷயத்தில், நீங்கள் செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன்...

1.கோவில் மாடு போல ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் மகனுக்கு, வரன் பார்ப்பதை நிறுத்துங்கள். அவனின் திருமணம், உங்கள் மீது கூடுதல் பாரமேற்றி நொறுங்கடித்து விடும்.

2.வீட்டின் வரவு, செலவை உங்கள் மனைவியிடமிருந்து பறியுங்கள். மனைவி ஆடம்பர செலவு செய்யும் வழிகளை அடையுங்கள்.

3. உங்கள் மனைவி, இரு மகன்கள் குழும செய்து, இளைய மகனுக்கு கண்டிப்பு உத்தரவுகளை போடுங்கள்.

'ஆறு மாத அவகாசத்துக்குள், 5,000 அல்லது 10 ஆயிரம் மாத சம்பளம் தரும் பணியில், நீ அமர வேண்டும். வியாபாரம் செய்ய பணம் கேட்டால், பத்து பைசா தர மாட்டேன். வேலை நேரம் தவிர, மீதி நேரம் வீட்டில் இருக்க வேண்டும்.

'இரவு ஊர் சுற்றக் கூடாது. உரிய நேரத்தில் துாங்கி, எழ வேண்டும். சுய சுத்தம் பேண வேண்டும். கண்டிப்பு அப்பாவால் கெட்டேன், செல்ல அம்மாவால் கெட்டேன் என்ற பழி விளையாட்டை நிறுத்திக் கொள்.

'ஆறு மாதத்திற்குள் நீ திருந்தா விட்டால், உன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவேன். நீ, என் மகன் இல்லை. நீ வாங்கும் கடனுக்கு நான் பொறுப்பு ஏற்க மாட்டேன்...' என்ற நிபந்தனையை விதியுங்கள்.

4. இளைய மகனின் ஜாதகத்தை கிழித்து போடுங்கள். கிழித்ததற்கு அவமானப்பட்டு மூல நட்சத்திரம் எங்காவது ஓடி ஒளியட்டும்.

5. பிறக்கும் போது உங்கள் மகனுடன் பிறந்தீர்களா, இறக்கும் போது உங்கள் மகனை கூட்டி செல்ல போகிறீர்களா, உங்கள் மகனின் நல்லது கெட்டதுகளை, நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள்? உங்கள் மரணத்திற்கு பின், 40 வயதில் மகன், திருந்தி வாழலாம் அல்லது அவன் மேலும் கெட்டொழிந்து, நடு ரோட்டில் விழுந்து கிடக்கலாம்.

6. இளைய மகன், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால், அதற்கான தண்டனையை அவனே அனுபவிக்கட்டும் என, கை கழுவி விடுங்கள். தொடர்ந்து அவன் பின்னே ஓடுவதை நிறுத்துங்கள்.

உங்கள் பாராமுகம் கூட, அவனுக்கான அதிர்ச்சி வைத்தியம். நம் நஷ்டங்களை, 'ஸ்பான்ஸர்' செய்ய, அப்பா வர மாட்டார் என்ற பயம், அவனை சொந்த காலில் நிற்க வைக்கும்.

7. தொடர்ந்து அவனை பற்றியே விசனப்படாமல் மூத்த மகன், மகள் வழி பேரன், பேத்திகளுடன் விளையாடி மகிழுங்கள்.

மேய்ச்சல் கயிறை தளர்த்தி விட்டிருக்கும் தந்தையாக தொடருங்கள். உங்களின் சிறு சிறு சந்தோஷங்களை ஓய்வூதிய பணத்தை வைத்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us