PUBLISHED ON : அக் 22, 2023

எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல், துாய்மையான பக்தி கொண்டவர், பக்த துகாராம். அவர், பண்டரிபுர பகவானுடன் பேசுவார். அவர் அழைத்தால், பண்டரிநாதர் வந்து, அவருடன் உணவு உண்பார். இத்தகவல் மக்களிடையே பரவியது.
துகாராமின் புகழை விரும்பாதவர்கள், ஒன்றாகக் கூடி, 'அவர் மட்டும் தான் பக்தரா... நாங்கள் கூப்பிட்டால் பகவான் வரமாட்டாரா, எங்களுடன் உண்ண மாட்டாரா என்ன? ஊஹும்... சரிப்பட்டு வராது. அவரை ஒரு கை பார்க்க வேண்டும்...' என்று முடிவெடுத்தனர்.
அவர்களில் முக்கியமானவர், தேவ் என்பவர். அவர், சின்சு வாடி என்ற ஊரில் இருந்தார். தினமும் விநாயகரைப் பூஜை செய்யும் வழக்கம், அவருக்கு உண்டு.
ஒரு சமயம், தேவ்வை பார்க்க வந்தார், துகாராம். வந்தவரை உணவு உண்ண அழைத்தார் தேவ். மறுக்காமல், உணவு உண்ண உட்கார்ந்தார், துகாராம்.
'தேவ்ஜி, நீங்களும் என்னுடன் உணவு உண்ண உட்காருங்கள்...' என்றார்.
'இவராக வந்து அகப்பட்டுக் கொண்டார்...' என்ற மகிழ்ச்சியில், துகாராமுடன், தானும் உணவு உண்ண உட்கார்ந்தார்.
துகாராமிடம் ஒரு தட்டு கொடுத்தனர்.
'பகவான் பண்டரிநாதர், என் நண்பர். அவரும் இங்கே உணவு உண்ண வருவார். அவருக்கும் ஒரு தட்டு வையுங்கள்...' என்றார், துகாராம்.
'சரி சரி, அவருக்கும் ஒரு தட்டு வைக்கிறேன்...' என்று ஏளனமாக சிரித்தபடியே, இன்னொரு தட்டு வைத்தார், தேவ்.
அங்கிருந்த பலரும் இளப்பமாகப் பார்க்கையில், உணவு பரிமாறப்பட்டது. பூஜை அறைக்குப் போய் விநாயகரை வணங்கி திரும்பினார், தேவ்.
சற்று நேரமானது, தெய்வங்கள் வரவில்லை. அங்கு இருந்தவர்கள், துகாராமைப் பார்த்து சிரித்தனர்.
'தேவ், பக்தன் ஒருவன் கடலில் மூழ்கி விட்டான். 'விநாயகா காப்பாற்று, காப்பாற்று...' என்று கத்தினான். அவனைக் காப்பாற்றப் போயிருந்ததால் தான், விநாயகர் வரத் தாமதமானது. உங்கள் பூஜை அறையில் போய் பாருங்கள்...' என்றார், துகாராம்.
உடனே போய் பார்த்தார், தேவ்.
விநாயகருக்குச் சாற்றியிருந்த ஆடை, ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. அந்த நீரில் சிறிதளவு எடுத்து சுவைத்துப் பார்த்தார், தேவ்; உப்பு கரித்தது.
அது கடல்நீர் என்பதை அறிந்த தேவ், ஓடி வந்து, துகாராமின் கால்களில் விழுந்து, 'நீங்கள் சொன்னது உண்மை. மன்னியுங்கள்...' என, வேண்டினார்.
'விநாயகரும் வந்து விட்டார். இப்போது நாம் சாப்பிடலாம்...' என்றார், துகாராம்.
பண்டரிநாதரும், விநாயகரும், துகாராமின் கண்களுக்கு மட்டும் தெரிந்தனர்.
அதேசமயம், தெய்வங்களுக்காக வைக்கப்பட்டிருந்த தட்டுகளில், உணவு குறைவதை, அனைவரும் பார்த்தனர்.
துகாராமை வணங்கி, 'சுவாமி... உங்கள் அழைப்பிற்கு இணங்கி தெய்வங்களே வந்து, உங்களுடன் சேர்ந்து உண்பது உண்மை. எங்களை மன்னியுங்கள்...' என்று, வேண்டினர், அனைவரும்.
அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்பட்டு பலன் இல்லை. அறியாதவர்க்கு அரியவராக இருக்கும் தெய்வம், அடியார்க்கு எளிமையானவர் என்பதை, விளக்கும் நிகழ்வு இது!
பி. என். பரசுராமன்
