தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெர்வின் எழுதிய, 'அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்' நுாலிலிருந்து:

காமராஜரை, எதிர்க்கட்சிகள் மிகவும் தரக்குறைவாக பேசின.

இதைக் கேட்ட காமராஜர், 'ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை இருக்கு. எதிர்க்கட்சிக்கு என்ன வேலை, நம்மை பற்றி பேசற பிழைப்பு தானே... அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே...' என்றார்.

'ஐதராபாத் வங்கியில், ஒன்றரை கோடி ரூபாய், காமராஜர் போட்டிருக்கிறார்...' என்று வதந்தியை பரப்பினர், எதிர்க்கட்சியினர்.

'எவனோ எதையோ சொல்றான். எனக்கு யானை கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர்கிட்டயும் போய், என் காலை காட்டிக்கிட்டா இருக்க முடியும்...' என்று கேட்டார், காமராஜர்.

குறத்தி மகன் படத்தை, காமராஜருக்கு போட்டு காட்டினர். அரசாங்கத்துக்கு எதிரான பல கருத்துகள் அதில் இருந்தன.

படத்தை பார்த்து முடித்ததும், பிரபல நடிகர் ஒருவரின் பெயரை சொல்லி, 'அவர் நடித்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்...' என்றார், காமராஜர்.

'அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம் இருப்பதால், அவர் நடிக்க மறுத்து விட்டார்...' என்றார், இயக்குனர்.

உடனே, சிரித்தபடி, 'அரசாங்கத்தை யாராலயும் எதிர்க்க முடியாது. அது கடவுள் மாதிரி. அரசாங்கத்தை நடத்துகிற அரசியல் கட்சியை வேண்டுமானால் எதிர்க்கலாம்...' என்றார், காமராஜர்.

கி.வா.ஜகந்நாதன் எழுதிய, 'தமிழ் தாத்தா - உ.வே.சாமிநாதய்யர்' நுாலிலிருந்து:

ஏப்., 1, 1919ல் சென்னை வந்த, மகாகவி ரவீந்திரநாத் தாகூர், டி.எஸ்.ராமசாமி அய்யர் வீட்டில் தங்கியிருந்தார். தாகூரை பார்க்க அங்கே சென்றிருந்தார், தமிழ் தாத்தா - உ.வே.சாமிநாதய்யர்.

உ.வே.சா.,வைப் பற்றி, தாகூரிடம் கூறினர்.

உ.வே.சா., பதிப்பித்த நுால்களை எல்லாம் பார்த்து வியந்து, 'இவற்றையெல்லாம் நீங்கள் எப்படி பதிப்பித்தீர்கள்?' என்று கேட்டார், தாகூர்.

'தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தேடி, ஓலை சுவடிகளை எடுத்து வந்து, அவற்றை ஆராய்ந்து செப்பம் செய்து, கடிதப் பிரதி எடுத்து பதிப்பித்து வருகிறேன்...' என்றார், உ.வே.சா.,

இதையெல்லாம் கேட்டு, வியப்படைந்து, 'நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்...' என்றார், தாகூர்.

அன்று மாலையே, தியாகராஜ விலாசத்திற்கு வந்து, அங்கிருந்த ஏட்டு சுவடிகளையும், கடிதப் பிரதிகளையும் பார்த்து வியந்தார், தாகூர். ஏட்டு சுவடியில் எப்படி எழுதுவது என்பதையும், அவருக்கு எழுதிக் காட்டினார், உ.வே.சா.,

உ.வே.சா., வீட்டிற்கு, தாகூர் வந்ததை பார்த்து பலரும் வியந்தனர். அதுநாள் வரை, உ.வே.சா.,வை யார் என்றே தெரியாதவர்கள் கூட, மிகப் பெரியவர் என உணர்ந்து, வணங்கினர்.

மனோகரா படத்தில் சிறப்பாக நடித்தவர், கண்ணாம்பா. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் அவருக்கு பொருத்தமான ஜோடி, நாகையா. தமிழில், பி.யு.சின்னப்பா. இரண்டு மொழி ஜோடியுமே, ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

ஒருநாள், மது அருந்தி, கண்ணாம்பாவுடன் இணைந்து நடிக்க வந்தார், பி.யு.சின்னப்பா. அதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்தார், கண்ணாம்பா.

கதாநாயக நடிகரை, சகட்டு மேனிக்கு கண்ணாம்பா பேசுகிறாரே என, படப்பிடிப்பு தளமே திகைத்தது.

ஆனால், தன் நிலையை உணர்ந்த பி.யு.சின்னப்பா, 'இனி குடித்து விட்டு நடிக்க மாட்டேன்...' என கூறி, கண்ணாம்பாவிடம் மன்னிப்பு கோரினார்.

'எனக்கு பிடிக்கல. அதான் அப்படி சொன்னேன்...' என, பதிலுக்கு கண்ணாம்பா மன்னிப்பு கேட்க, அந்த சம்பவம் அத்துடன் முடிவுக்கு வந்தது.



- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us