PUBLISHED ON : அக் 22, 2023

கர்நாடக மாநில விழாவாகவே கொண்டாடப்படும் தசராவின், 10 நாட்களும், மைசூரே அலங்காரத்தில் ஜொலிக்கும்.
அசுரன் மகிஷாசுரன் அழிந்து, மைசூரு பிறந்த நாளே, தசரா. முதல் ஒன்பது நாட்களை, நவராத்திரியாகவும், ஸ்ரீசாமுண்டி, மகிஷனை அழித்த, 10வது நாளை, விஜயதசமியாகவும் கொண்டாடுகின்றனர்.
மைசூரு தசராவுக்கான, மொத்த செலவும், மைசூரு அரண்மனை நிர்வாகம் தான் செய்கிறது.
தசராவின், 10 நாட்களும், அரண்மனை முழுவதும், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். 'கொம்பே தட்டி' என்று சொல்லப்படும் பாரம்பரிய கொலு மண்டபத்தில், கொலு வைக்கப்படுகிறது.
அரண்மனை தர்பார் ஹாலில்,ஸ்ரீரங்கப் பட்டினத்திலிருந்து, ராஜ உடையார் கைப்பற்றிய, மைசூரு அரச பரம்பரையின் தங்க சிம்மாசனம் உள்ளது. அந்த சிம்மாசனத்தில், மைசூரு ராஜாக்களின் முன்னோர், பயன்படுத்திய வாளை வைத்து பூஜிக்கின்றனர்.
இந்த சிம்மாசனம், ஹஸ்தினாபுரத்தை ஆண்ட பாண்டவ மன்னன் யுதிர்ஷ்டன் அமர்ந்து ஆட்சி புரிந்ததாம். சிம்மாசனத்தில், சாமுண்டீஸ்வரி, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வடிக்கப்பட்டுள்ளனர்.
தர்பார் ஹாலில், பலவித கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். தசராவின், 10 நாட்களும், கொலு, தங்க சிம்மாசனத்தில் வைத்த வாள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, அனுமதிக்கப்படுகின்றனர், பொதுமக்கள்.
இந்தியா முழுவதிலிருந்தும், பிரசித்தி பெற்ற நாட்டிய குழுக்களை அழைத்து, நாட்டியங்கள் நடத்துகின்றனர். தசராவின்போது, மைசூரில் நடைபெறும், 'குஸ்தி சண்டை போட்டி'யும் பிரபலம்.
விஜயதசமியன்று, சாமுண்டி மலையில் ஏறி, கோவிலுக்கு செல்லும் அரண்மனை பிரதான யானை, ஸ்ரீசாமுண்டீஸ்வரியை, தங்க பல்லக்கில் வைத்து, துாக்கி வருகிறது. ஸ்ரீசாமுண்டீஸ்வரி, மகிஷாசுர வதத்துக்கு தயாராகிறாள் என்பது ஐதீகம்.
இந்த பல்லக்கு துாக்கு யானையை தவிர, அலங்கரிக்கப்பட்ட நான்கு யானைகள் மற்றும் குதிரைகளுடன், துர்க்கை அஷ்டோத்திரத்தை பாடியபடியும், சாமுண்டியின் நாமத்தை உச்சரித்தபடியும் செல்வர், பக்தர்கள்.
யானை மீதேறி ஊர்வலம் செல்வதை, 'ஜம்போ சவாரி' என்கின்றனர். தசராவின்போது நடைபெறும் இந்த ஜம்போ சவாரிக்கு, ஜூலை மாதத்திலிருந்தே யானைகள் மற்றும் குதிரைகளை பழக்க ஆரம்பித்து விடுவர்.
இந்த ஊர்வலத்தின் போது, பல்வேறு வகை வாத்தியங்களை வாசித்தபடியும், நாட்டியங்கள் ஆடியபடியும், சாமுண்டீஸ்வரியை ஊர்வலமாக கொண்டு செல்வர்.
பெரிய பெரிய மேளங்களை வாசித்தபடி ஒரு கோஷ்டி செல்ல, மகிஷாசுர வேடம் அணிந்து ஆடியபடி சிலர் வருவர். சாமுண்டீ வேடம் அணிந்தவர், மகிஷர்களை வதம் செய்யும் களியாட்டமும் ஊர்வலத்தில் நடைபெறும்.
யானை மீது பவனி வரும், ஸ்ரீசாமுண்டீஸ்வரி, மைசூரின் வடக்கு புறமாக தற்சமயம், ராணுவ பயிற்சி நடைபெறுகிற மைதானத்தில் உள்ள, 'பானி மண்டபம்' எனப்படும் இடத்தை அடைவாள். அங்கு ஒரு வன்னி மரம் (கன்னடத்தில், பானி மரம்) உள்ளது.
யுத்தத்துக்கு புறப்படும் முன், வன்னி மர தேவதையை பூஜித்து, அந்த மரத்துக்கு அடியில் ஒளித்து வைத்த, தங்களுடைய ஆயுதங்களை எடுத்து சென்றனர், பாண்டவர்கள். அதுபோல, மைசூரு அரசர்கள் தங்களின், 'ராஜ வாளை' வன்னி மரத்துக்கு அடியில் வைத்து வணங்கிய பின், போருக்கு செல்வராம்.
அந்த வழக்கப்படி, இங்கு சாமுண்டி வேடமணிந்தவரை, மகிஷாசுரனை அசுரவதம் செய்ய வைக்கின்றனர். அசுரவதம் முடிந்தவுடன், வாணவேடிக்கையும் நடைபெறும்.
போர் முடிவுக்கு வந்ததும், வெற்றிக்களிப்பில், பக்தர்களை ஆசிர்வதித்தபடி, அகல் விளக்கு ஊர்வலத்தோடு, மீண்டும் மலை ஏறுகிறாள், ஸ்ரீசாமுண்டீஸ்வரி.
