sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தேர்வுக்கு தயாராகிறீர்களா... (1)

/

தேர்வுக்கு தயாராகிறீர்களா... (1)

தேர்வுக்கு தயாராகிறீர்களா... (1)

தேர்வுக்கு தயாராகிறீர்களா... (1)


PUBLISHED ON : பிப் 16, 2020

Google News

PUBLISHED ON : பிப் 16, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீப காலமாக, தேர்வுகள், இனம்புரியாத பயத்தை உருவாக்குபவையாகவும், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளை உருவாக்கும் காரணிகளாகவும் திகழ துவங்கி விட்டன. நாம் படித்ததெல்லாம், தேர்வு சமயத்தில் மறந்து விடுமோ என்ற எண்ணம் தான், தேர்வு பற்றிய பயத்திற்கு முதல் காரணம்.

அடுத்து, எதிர்பார்ப்புகளுடன் கூடிய அணுகுமுறை. தேர்வு எளிதாக இருக்குமா, நன்கு தெரிந்த பகுதிகளிலிருந்து அதிக கேள்விகள் வருமா, தேர்வை சிறப்பாக எழுதி, திட்டமிட்டபடி மதிப்பெண் பெற முடியுமா என்ற சந்தேக எண்ணங்கள் எதிர்பார்ப்புகளாக முன்னே நிற்கும்போது, நமக்குள் தேவையற்ற பதற்றம் உருவாகிறது. தேர்வு நெருங்க நெருங்க, இந்த பதற்றம் பயமாக மாறி விடுகிறது.

படித்தவைகளையும், மனதில் பதிந்து கொண்டவைகளையும் தொடர்ந்து வாசிப்பது மற்றும் எழுதி பார்ப்பதன் மூலம் நினைவில் கொண்டு வர, பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும், மொழி பாடத்தில், மனப்பாட பகுதிகள். அறிவியல் பாடத்தில், சமன்பாடுகள் மற்றும் விதிகள். கணித பாடத்தில், சூத்திரங்கள், விதிகள். வரலாறு பாடத்தில், ஆண்டு, நிகழ்வுகள் ஆகியவைகளை மட்டுமாவது பயிற்சிக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இவற்றோடு, 'என்னால் முடியும்...' என்ற நம்பிக்கையையும் சேர்த்துக் கொண்ட பின், தேர்வுக்கு தயாராக வேண்டும்.

அதற்கு முன், ஒரு அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதில், நம் பலம், பலவீனம், படிக்க வேண்டிய பாடங்கள், அவைகளை படித்து முடிக்க வேண்டிய நாட்கள் மற்றும் திருப்புதல் - 'ரிவிஷன்' செய்து பார்க்க வேண்டிய நாட்கள் என்ற ஐந்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

படிக்க வேண்டியிருக்கும் புதிய பாடங்களையும், விடுபட்டு போன பாடங்களையும் படித்து முடித்த பின், அவைகளுக்கு நினைவு குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்வது, தொடர் திருப்புதலுக்கு உதவும்.

பாடங்களை படிக்கும்போது, கடிகாரத்தை பார்க்கவோ, படிக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்த முயலவோ வேண்டாம். அதனால் உண்டாகக் கூடிய பதற்றம், அவசரம் போன்றவை, படிப்பதை வேகப்படுத்தி, புரிதலை குறைத்து விடும்.

காலை, பின்னிரவுக்கு முந்தைய நேரத்தை படிப்பதற்கும், மற்ற நேரங்களை, படித்தவைகளை நினைவுபடுத்தி பார்த்தல், மனப்பாடப் பகுதிகள், சமன்பாடுகள், சூத்திரங்களை எழுதி பார்த்தல் போன்ற வேலைகளுக்கும் ஒதுக்கிக் கொள்ளலாம். இதன் மூலம், தொடர் படிப்பால் ஏற்படக்கூடிய இறுக்கங்களை தளர்த்திக் கொள்ளலாம்.

முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், துணை நுால்களிலிருந்து தயார் செய்த கேள்வித் தாள்கள் மற்றும் மற்ற பள்ளிகளிலிருந்து சேகரித்த கேள்வித் தாள்கள் என, தனித்தனியாக பிரித்து எழுதி, அவைகளுக்கு விடை காண முயல்வது, தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளவும், எழுதவும் உதவும்.

திருப்புதலுக்கு என ஒதுக்கியுள்ள நாட்களில், அறிவியல் சார்ந்த பாடங்களுக்குரிய படங்கள், கணித பாடங்களுக்குரிய படங்கள், கிராப், மேப் ஆகியவற்றை தெளிவாக வரைந்து பழக, கூடுதல் நேரங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்.

அதேபோல், தேர்வுக்கு முன், சேகரித்து வைத்துள்ள கேள்வித் தாள்களை வைத்து, சொந்தமாக தேர்வை எழுதி பார்க்கலாம். அவ்வாறு எழுதி முடித்த பின், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முழுமையாக எழுதி முடித்திருக்கிறோமா என்றும், அப்படி இல்லையெனில், அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.

இதனால், எந்த வகையான கேள்விகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம் என்பதை, முன்னரே திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

தொடர் படிப்பிற்கு இடையே நீங்கள் எடுத்துக் கொள்கிற ஓய்வு, உங்களை புதுப்பித்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும். மூளையை துாண்டுதல், கையெழுத்தை மேம்படுத்துதல், தேர்விற்கான தயாரிப்பை அளவிடுதல் போன்ற, படிப்பு சார்ந்த பயிற்சிகளை ஓய்வு நேரத்தில் செய்வதால், தொடர்ந்து தேர்விற்கான தயாரிப்பிலேயே இருக்க முடியும்.

தேர்வில் எழுதுகிற விடைகளுக்கு மட்டும் மதிப்பெண் தரப்படுவதில்லை. விடைகளுக்கு, முக்கால்வாசி மதிப்பெண்களும், அதை எழுதிய விதம், கையெழுத்து போன்றவைகளுக்கு மீதி மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. எனவே, படித்ததை தேர்வுகளில் எழுத்தாக்கும்போது, தெளிவாகவும், நேராகவும், திருத்துபவர் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும்.

இவை தவிர, ஓய்வு நேரத்தில், திருப்புதல், மற்றும் வாசிப்பு தேவை என, நீங்கள் நினைக்கிற கேள்வி - பதில்களை மொபைல் போனில் பதிவு செய்து வைக்கலாம். தேர்வுக்கு முந்திய திருப்புதல் செய்யும் நாட்களில் இவைகளை பார்த்து நினைவுபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

இடைவிடாத தொடர் படிப்பு மற்றும் தேர்விற்கான தயாரிப்பிலும் அயர்ந்து போயிருக்கிற மூளைக்கும் தேவையான ஓய்வை கட்டாயம் கொடுக்க வேண்டும். அந்த ஓய்வையும், தேர்வுக்கு முந்தைய நாளில் கொடுக்கும்போது, தேர்வு நாளன்று மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் செயல்படும்.

தேர்வுக்கு முந்தைய நாளில், பேனா, பென்சில், ரப்பர், கலர் பேனா, தண்ணீர் பாட்டில், கடிகாரம், படங்கள் வரைவதற்குரிய பொருட்கள் ஆகியவைகளை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு அறைக்குள் நுழைவதற்கான, நுழைவுச் சீட்டை எடுத்துச் செல்ல மறக்கவே கூடாது.

குறைந்தது, எட்டு மணி நேர துாக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, மறுநாள் தேர்வை சோர்வின்றி எழுத உதவும்.

படுக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், படிப்பதையோ, பாடம் சார்ந்த விபரங்களை அசை போடுவதையோ, தேர்வு குறித்த விபரங்களை நினைப்பதையோ, முழுமையாக நிறுத்தி விட வேண்டும்.

தேர்வுக்கு முந்தைய நாளை விட, தேர்வு நாளன்று, இனம் புரியாத பயம், பதற்றம் தொற்றிக் கொள்ளும். அப்போது செய்யும் சிறு தவறுகள் தரும் விளைவுகள், எதிர்காலத்தையே மாற்றி விடும்.

ஆண்டு முழுவதும், படித்தவைகளை, தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்தி, மதிப்பெண்களாக மாற்ற வேண்டுமானால், தேர்வுக்கு முந்தைய நாளில் துவங்கி, தேர்வை எழுதி முடிக்கும் கடைசி நிமிடம் வரை பதற்றமின்றி செயல்பட வேண்டும். அப்போது தான் தேர்வை இயல்பாக எதிர்கொள்வது சாத்தியம்.

தொடரும்.

எஸ். பரணி







      Dinamalar
      Follow us