தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலையும், கலையாத கனவும்!

கலையும், கலையாத கனவும்!

கலையும், கலையாத கனவும்!


PUBLISHED ON : ஆக 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வலக்கையால் லாவகமாய் அரிசியை களைந்து கொண்டிருந்தாள், பாக்கியம்.

''என்ன செய்றீங்க பாட்டி?'' என்று கேட்டபடி, பக்கத்தில் வந்து அமர்ந்த பேத்தியை புன்னகையுடன் பார்த்து, ''அரிசி களையறேன் தாயி... கையில குண்டாவ உருட்ட உருட்ட, பொடிக்கல்லு அடியில சேகரம் ஆயிடும்,'' என்ற பாட்டியை, விசித்திரமாய் பார்த்தாள்.

''ஏன் பாட்டி கல்லு இருக்கிற அரிசியை வாங்குறீங்க... நாங்க வாங்குற அரிசியில எல்லாம் கல், மண் இருக்காது,'' என்றாள்.

''யம்மாடி... அரிசியில கல்; அழுக்கான உப்பு, விதையுள்ள கறிகாய் இது தான் அசல். ஆமா... இதெல்லாம் உனக்கு எங்க புரியப் போகுது; அரிசி பருப்பு, காய்கறி அவ்வளவு ஏன்... மனுஷ முகத்தைக் கூட, 'ப்ளீச்' பண்ற ஊர்ல இருந்துதான நீ வர்றே... இதோட மகிமை உனக்கு இப்ப புரியாது,'' என்றவள், ''தாயி சீத்தாலட்சுமி... அந்த முறத்த எடு,'' என்றாள்...

''பாட்டி... என்னை நீங்க சீத்தா லட்சுமின்னு கூப்பிடாதீங்க; பட்டிக்காடா இருக்கு. சீத்தல்ன்னு கூப்பிடுங்க. என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை, 'சீத்து'ன்னு தான் கூப்பிடுவாங்க,'' என்றாள், சிணுங்கலுடன்!

''இந்த சீத்தல், பேத்தல்ன்னு எல்லாம் நான் கூப்பிட மாட்டேன்டியம்மா... அந்த காலத்துல, பேர்கள ஏன் மங்களரமாக வைச்சங்கன்னா, அந்தப் பேரைச் சொல்லி கூப்பிடயில நல்ல சக்தி எதிரொலிக்கும்கிறது ஐதீகம். அதுனாலதான், உங்க அப்பனுக்கு செல்வம்ன்னு பேர் வச்சோம்; அவன் பொறந்து, அவன் பேரைச் சொல்லி கூப்பிடக் கூப்பிட, வீட்டில செல்வமா சேர்ந்தது, உங்க தாத்தா பேர் வினைதீர்த்தான்.

''அவர், பஞ்சாயத்துல தீர்த்து வைக்காத பிரச்னையே இல்ல; உங்க, அத்தாச்சி, மாமான்னு எல்லார் பேரும் இப்படி மங்களகரமானது தான்...'' என்று

சொல்ல, சிணுங்கியபடி எழுந்து உள்ளே ஓடினாள், சீத்தாலட்சுமி.

''அம்மா... உன் பேத்திட்ட கொஞ்சினது போதும்; 'பொங்கலுக்கு புறப்பட்டு வா; அப்பா இந்த வருஷம் கூத்து போடப் போறாருன்'னு போன் பண்ணி சொன்னியே... இதென்னமா கூத்து,'' என்றான் செல்வம்.

தாழ்வாரத்தில் வெள்ளை துணியை விரித்து, அதில் களைந்து வைத்திருந்த அரிசியை, கொட்டி பரப்பி, விரல்களால் துழாவி, காய வைத்தபடி, ''ஐயா செல்வம்... நம்ம ஊர்ல கூத்து நடந்து, 15 வருஷம் ஆச்சு; கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாமும் கூட அப்பப்பா எங்கயாச்சும் நடக்குது. ஆனா, தெருக்கூத்து முழுக்க முழுக்க அத்துப் போச்சு,'' என்று விசனமாய் பேசிய அம்மாவிடம், ''அதுக்காக, வயசான காலத்துல இவரால முடியுமா... கை காசை செலவழிச்சு, கஷ்டத்தை அள்ளிக் கட்டிக்கப் போறாரு...'' என்றான்.

வெளியில் போயிருந்த பெரியவர் வினைதீர்த்தான், அச்சமயம் வீட்டிற்குள் நுழைந்தார். முற்றத்தில், கை, கால்கள் கழுவி, ஈஸி சேரில் தளர்வாய் சரிந்தவர், ''பாக்கியம்... கொஞ்சம் தண்ணீ கொண்டா,'' என்றார். முண்டா பனியனையும் மீறி, அவருடைய மூப்பு, உடல் தளர்வின் மூலம் தெரிந்தது.

''அப்பா...'' என்றான் செல்வம்.

''என்னய்யா...'' என்று சினேகமாய் சிரித்தார்.

''எதுக்குப்பா இந்த வேலை... இப்ப, எங்க போய் அலைஞ்சிட்டு வர்றீங்க?''

''காரமடைக்கு போய் மேளக்காரரைப் பார்த்து, பொட்டி வாசிக்கிற ஆளு இருக்கான்னு கேட்டேன். கீரிப்பாளையத்துல ஒருத்தர் செட்டு வச்சிருக்காராம்; இப்பத்தான் கூத்தே இல்லாம போயிருச்சே... அதுனால, எதுனா கோவில் திருவிழாவுக்கு வாசிக்க கூப்பிடுறாங்களாம்... அதுக்கு மட்டும் போவாரு போல, அவர்கிட்ட பேசி முடிக்கறேங்கறாரு. ரேட்டு கொஞ்சம் கூடத் தான்; ஒரு ராத்திரிக்கு, ஐயாயிரம் ரூபா...

''அந்த நாள்ல, நாங்க தேரடி வீதியில கூத்து போடுவோம்; உனக்கு கூட நல்லாத் தெரியுமே... குட்டை வாத்தியார்ன்னு ஒருத்தர், குழந்தைகளுக்கெல்லாம் பாட்டு கத்து தர்றவரு. கூத்துன்னு போய் சொல்லிட்டா, நாம கேட்கிறதையும் விட அதிகம் வாசிப்பாரு. அரை மணி நேரம்தான் ஒத்திகை பாப்பாரு... அதுக்கப்புறம் நேரா மேடை தான். செட்டுல இருக்கிற எல்லாரும் ஒரே கலர்ல, 'ஜிகுஜிகு'ன்னு சட்டை போட்டுட்டு, வாய் நிறைய தாம்பூலம் தறிச்சு, மேடை மேல வந்து நின்னாப் போதும்; ஊரே மெய்சிலிர்க்கும்,'' என்றார் ரசனையுடன்!

''அதெல்லாம் சரிப்பா... இந்த வயசுல உங்களால முடியுமா?''

''வயசென்னயா வயசு... அனுமன் கதைதான் போடப் போறேன்; ஒத்திகை கூட கிட்டத்தட்ட முடிஞ்சுபோச்சு. என்ன... இப்ப கூத்தெல்லாம் இல்லாம போனதால, அதற்குரிய பொருட்களை தேடுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு. படுதா, கலர் விளக்கு, கத, மகுடம்ன்னு நிறைய பொருட்கள் தேவைப்படுது. வாங்கியாரச் சொல்லி, டவுனுக்கு ஆள் அனுப்பி இருக்கேன்,'' என்றார்.

வயதை மீறிய வைராக்கியம் அவருடைய பேச்சில் தென்பட்டது. அதனால், நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாகி விட்டான், செல்வம்.

''புள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடுறான்னு சொல்றது இதுதானா...'' பக்கத்தில் வந்து மெதுவாய் சொன்ன மனைவியை, கோபமாய் திரும்பிப் பார்த்தான், செல்வம்.

''பின்ன என்னங்க... ஏக்கர் கணக்குல கொட்டி கிடக்குற சொத்தை, ரெண்டு பெரிசுகதான் அனுபவிக்கிறாங்க. விளைச்சல்ன்னு நமக்கும் தவறாம அனுப்பி வைக்கிறாங்க தான்; அதுக்காக, அத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சா... 'இந்தா அஞ்சு லட்சம், பத்து லட்சம்'ன்னு என்னைக்காவது காச கண்ணுல காட்டியிருக்காங்களா... இவங்களுக்கு கைவேலை செய்ய வீடு நிறைய ஆளுங்க; அப்பப்ப அவங்களுக்கு தர்மம் வேற... ரெண்டு பேருக்கு இத்தனை ஆர்பாட்டம் தேவையா... இனியும் நாம சும்மா இருந்தா, எதுவும் மிஞ்சாது; திரும்பிப் போகும்போது, கார் வாங்க காசு வாங்கிட்டுத்தான் போறோம்,'' அதிகார அறிவிப்பை வெளியிட்டாள்.

அவள் கேட்பதிலும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது என்று நினைத்த செல்வம், கோபமாய் வெளியில் வந்தான்.

கன்றுக்குட்டிக்கு தண்ணி காட்டிக்கொண்டிருந்த பாக்கியம், மகனை அன்பாய் பார்த்தாள்.

''செல்வம், போன வாரம் நம்ம லட்சுமி பசு, இந்த கன்றுக்குட்டிய போட்டுச்சு. முன்னெல்லாம், நீ தான் நம்ம வீட்டு கன்றுக்குட்டிகளுக்கு பேர் வைப்பே...'' என்றாள்.

''அதெல்லாம் இருக்கட்டும்; கூத்துங்கற பேரால, அப்பா காச தண்ணியா செலவழிக்கிறாரு... இதெல்லாம் வேணாம்ன்னு நீ எடுத்துச் சொல்ல மாட்டீயா...'' என்றான், எரிச்சலாக!

''காசை பாத்தா, கலையை வளர்க்க முடியாது; அந்தக் காலத்துல, வயல்லயும், காட்டுலயும் கஷ்டப்பட்டு உழைச்சுட்டு வர்ற மனுஷங்க, இளைப்பாற, இந்த கூத்தும், கலையும் தான் வடிகாலா இருந்துச்சு. அதை, அப்படியே விட்டுட முடியாதுய்யா,'' என்றாள்.

''ஆமாம்... நாம தான் கலையை வளர்க்க வந்த வித்தகர்களாக்கும்; வீடு நிறைய ஆட்களை வச்சுட்டு, காசை வாரி இறைக்கிறீங்க... இதெல்லாம் அனுபவிக்க வேண்டிய நான், எங்கயோ இருக்கேன். அதெல்லாம் போகட்டும், நீ அப்பாகிட்ட பேசி, எனக்கு கார் வாங்க பணம் வாங்கித் தா; இதுக்கு மேலயும் என்னால, ஆபீசுக்கு பைக்ல போய் வர முடியாது,'' என்றான்.

ஜிகினா தாள் ஒட்டிய கிரீடத்தை தலையில் வைத்து, கண்ணாடியில் அழகு பார்த்தார், வினைதீர்த்தான். அவர் முகத்தில் இனம் புரியாத கம்பீரம் வந்து ஒட்டிக் கொண்டு இருப்பதாய் தோன்றியது.

''பாக்கியம்... இப்ப எப்படி இருக்கு...'' என்றார், மனைவியின் பக்கம் திரும்பி!

''பீமண்ண மகாராஜா மாதிரி இருக்கு; என்ன கொஞ்சம் வயசான மகாராஜா...'' என்று சொல்லி, பக்கத்தில் அமர்ந்திருந்த பேத்தியை பார்த்து கண்ணடிக்க, அவள் வாய்மூடிச் சிரித்தாள்.

''வெற்றிலை கொடிய, தொட்டியில போட்டு ரெடி பண்ணி வைக்க சொன்னேனே செஞ்சியா... நாடகம் போடுற அன்னைக்கு, எல்லாத்தையும் மறந்து, அங்க போய் நிக்க வச்சுறாதே,'' என்றவரை குறும்பாய் பார்த்தாள்.

''என்ன இப்பத்தான் புதுசா கூத்து போடுற இளந்தாரி மாதிரி, எல்லாத்துக்கும் பதற்றப்படுறீங்க... அந்த நாளுல, கோவலன் கதை போட்டு, நீங்க நடிச்ச அழகை பார்த்து தானே, எங்க அய்யாகிட்ட, 'இவரைத்தான் கட்டுவேன்'னு ஒத்த கால்ல நின்னேன்...''

கிழவி காதல் நினைவுகளில் பயணப்பட, பேத்தி விலாவில் இடித்தாள்.

''என்ன பாட்டி... உங்களது, 'லவ் மேரேஜா... சொல்லவேயில்ல,'' என்றவள், ''அது சரி, தாத்தா எதுக்கு வெற்றிலை கொடி கேட்குறாரு,'' என்றாள் புரியாமல்!

''அதுவா கண்ணு... அனுமன் கதையில, அனுமன் அசோகவனத்துக்கு துாது போகும்போது, பக்கத்துல இருந்த வெற்றிலையை கிள்ளிப்போட்டு, சீதாதேவியை ஆசீர்வாதம் பண்ற மாதிரி காட்சி வரும். அதுக்குத்தான், வெற்றிலை கொடி. வெற்றியைத் தர்ற இலையா இருக்கட்டும்ன்னு சொல்லி, அவர் வாழ்த்தினதால தான், அதுக்கு பேர் வெற்றிலைன்னு வந்துச்சாம்,'' என்று பாக்கியம் கூறியதும், கைதட்டி ரசித்தாள், பேத்தி.

மேடையில், ஜிகினா விளக்குகளும், ஜரிகைத் துணிகளுமாய் களைகட்டியிருந்தது. வலப்புறம், வாத்திய கோஷ்டி அமர்ந்திருக்க, அவர்கள் போட்டி போட்டு ஒத்திகை நடத்த, அந்த பிரதேசம் முழுக்க ஒழுங்கில்லாத சத்தமாய் இருந்தது.

மேடைக்கு பக்கவாட்டில், வரிசையாய் மடக்கு நாற்காலிகள் கிடத்தப்பட்டு இருக்க, வினைதீர்த்தான் குடும்பமும், ஊரில் இருந்த பிரதான மனிதர்களும் அமர்ந்திருக்க, மேடைக்கு முன், சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

ஏழு மணிக்கு முன், நாடகம் துவங்கப் போவதாய் அறிவிப்பு வந்தபடி இருக்க, சொற்ப நொடியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ராமரும் - சீதையும், பத்து தலை வைத்த ராவணனும் மேடையில் தோன்ற, விசில் பறந்தது.

'அதாகப்பட்டது...'

'பட்டது...'

'அசோகவனத்துல இருக்கும் சீதையை சந்தித்து, ராமருடைய துாதைச் சொல்ல, அனுமன் புறப்பட்டார்...'

'அனுமன் புறப்பட்டார்...'

பக்கவாத்தியக்காரர்களில் ஒருவர் எடுத்துச் சொல்ல, மற்றவர்கள் பின்பாட்டு பாட, வாலும், கதயுமாக மேடையில் பிரசன்னம் ஆனார், வினைதீர்த்தான். உடம்பெல்லாம் சவரம் செய்து, குங்குமத்தை அங்கமெல்லாம் பூசி ஆளே மாறி இருந்தார்.

வலது கையையும், இடது காலையும் நீட்டி பறப்பது போல நடிக்க, படுதா நொடியில் மாற, அசோகவன காட்சி வந்தது. சீதை சோகமாய் அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில், பாட்டி நட்டு வைத்திருந்த வெற்றிலை கொடி, தொட்டியில் இருந்தது. அனுமன், சீதையை அணுகி, துாதைச் சொல்லவும், பக்க வாத்தியக்காரர்கள் காட்சியை விவரித்தபடி இசை சேர்க்கவும், வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு, அனுமன் ஆசீர்வதித்து பாடவும், பார்த்துக் கொண்டிருந்த சீத்தாலட்சுமிக்கு, அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது. தன் தோழிகளிடம் காட்ட, கூத்து முழுவதையும் மொபைல் போனில் படம் பிடித்தாள்.

கூடாரத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தார், வினைதீர்த்தான். இரவு முழுக்க குரலெடுத்து பாடியதால், தொண்டை கட்டியிருந்தது. பக்கத்தில் தட்டில் இருந்த சுக்கு, திப்பிலி, பனங்கற்கண்டு கலவையை, இரண்டு விரலில் அள்ளி, வாயில் போட்டு அடக்கினார்.

உடல் முழுக்க மிச்சமிருந்த குங்குமமும், முகத்தில் மிஞ்சியிருந்த அரிதாரமும் அவருக்கு ஒரு தெய்வீகத்தன்மையை தந்திருந்தது.

''அப்பா... தொண்டை வலி தேவலயா?'' பக்கத்தில் வந்து அமர்ந்து கரிசனமாய் கேட்ட மகனை, அன்பாய் பார்த்தார், வினைதீர்த்தான்.

''அதெல்லாம் ஒண்ணு இல்லயா... சொல்லப் போனா, கூத்து போட்ட பின், பத்து வயசு குறைஞ்ச மாதிரி உற்சாகமா இருக்கு. அது சரி... நீ அம்மாகிட்ட ஏதோ பணம் கேட்டியாமே... பத்து நாள் பொறுத்துக்க; மேற்கால காட்டை விலை பேசி இருக்கேன்; பணம் கைக்கு வந்ததும், நானே கொண்டாந்து தர்றேன்,'' என்றதும், குற்ற உணர்வில் குறுகிப் போனது, மனது.

''அப்பா... எதுக்கு உங்கள இப்படி வருத்திக்கறீங்க... கூத்துங்கறது மிகப்பெரிய கலை; அதை, நீங்க ஒருத்தர் காப்பாத்த முடியுமா... அப்படியே காப்பாத்தினாலும், உங்களுக்குப் பின், அதை யார் எடுத்துச் செய்யப் போறாங்க... இதையெல்லாம் விட்டுட்டு என் கூட ஊருக்கு வாங்க... எனக்கும், என்னை பெத்தவங்கள, வசதியா வச்சு பாத்துக்கணும்கிற ஆசை இருக்காதா,'' என்றான் ஆதங்கமாய்!

''இந்த மட்டுக்கு நாங்க புண்ணியம் பண்ணவங்கயா... இந்த உலகம் தோன்றுன காலம் தொட்டு, எல்லாமே பயணம் தான். அது கலை, மொழி, கலாசாரம்ன்னு எதுவா இருந்தாலும், அவ்வளவும் பயணம் தான். மாரத்தான்னு ஒரு விளையாட்டு இருக்கே... அது மாதிரித்தான் வாழ்க்கை; ஜெயிக்க போறமா, தோற்க போறமா, இன்னும் எவ்வளவு துாரம் ஓடணும், இது எதைப் பத்தியுமே நாம கவலைப்பட வேண்டியதில்ல.

''நம்மோட பொறுப்பு எல்லாம், நம்ம கையில இருக்கிற பொருளை அடுத்தது வர்றவங்க கிட்ட சேர்க்கிறது தான். காலம் காலமா இப்படித்தான்யா இந்த தொடர் பயணம் நடந்துட்டு இருக்கு. என் முன்னோர் என்கிட்ட ஒப்படைச்சுட்டுப் போன பொறுப்பை, என் தலைமுறையில காப்பாத்தி தந்துட்டா போதும்; எனக்கு பின், இதையெல்லாம் எடுத்துட்டு ஓட எங்கிருந்தாவது ஒருத்தன் வருவான்.

''கூத்து, கரகாட்டம்ன்னு கிராமிய கலைகளை நடத்தறது லாபம் பாக்க இல்ல; அந்த கலைய நம்பி வாழ்றவங்க வாழ்வாதாரத்தை காப்பாத்தி தர்ற வேலைய, வசதி படைச்சவங்க புரவலரா நின்னு காப்பாத்தி தரணும்; அதுக்குத்தான் இதெல்லாம்.

''எனக்கப்புறம் இதெல்லாம் நீ கொண்டு போகணும்ன்னு ஆசைப்பட்டேன். அதனால தான், உன்னை விவசாயம் படிக்க வச்சேன்; ஆனா, உனக்கு களப்பணி செய்ய ஆர்வமில்ல. அதைப்பத்தி இனி பேசி, என்ன பயன்...

''எங்கப்பாதான் சொல்வாரு, 'மொழியை பாதுகாக்க பெருசா மெனக்கெட வேண்டியதில்ல; அதை தப்பு இல்லாம பேசிட்டு இருந்தாப் போதும்'ன்னு. அதே மாதிரித்தான் கலையை பாதுகாக்க, அதை பார்த்து ரசிச்சுட்டு இருந்தாலே போதும்; அழிஞ்சு போகாது,'' என்று சொன்ன தந்தையை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

முற்றத்தில் செப்புக்காசாய் சிதறி, வெளிச்சம் அவர்களை ஆசிர்வதித்தது.

''புரிஞ்சுக்கிட்டேன்ப்பா... இனி, எங்க இருந்தாலும் நான் கிராமத்தான் தான்; காட்டை வித்து நீங்க எனக்கு கார் வாங்கித் தரவேணாம்; அந்த இடத்துல எதை விளைவிக்கலாம்ன்னு நான் கண்டுபிடிக்கறேன். உங்க பொறுப்புகளை வாங்கி, இந்த மாரத்தானை தொடர நான் இருக்கேன்பா,'' அவர் கைகளை பற்றி, நா தழுதழுக்க சொன்ன மகனை, மறுமுறை, மகன் தன் மடியில் பிறந்தது போன்ற பூரிப்பில் அமர்ந்தார், வினைதீர்த்தான்.

எஸ்.பர்வின்பானு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us