தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலைவாணர் என்.எஸ்.கே., (7)

கலைவாணர் என்.எஸ்.கே., (7)

கலைவாணர் என்.எஸ்.கே., (7)


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை, கலைவாணருக்கு சொந்தமான வேன், வெளியூரிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது விபத்துக்குள்ளானது; சேதி அறிந்து, காரில் அங்கு விரைந்தார், கிருஷ்ணன்.

'நல்லவேளை... எல்லாரும் பிழைச்சுட்டாங்க...' என்று சொல்லி, விபத்துக்குள்ளான வேனை சுற்றிப் பார்த்தார். கீழே பழங்கள் சிதறிக் கிடந்தன. அவைகளை எடுத்து, அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக தந்து, தாமும் ஒரு பழத்தை உரித்து, சாப்பிட ஆரம்பித்தார்.

அவ்வழியாக சென்ற ஒரு பஸ், இவரை கண்டதும் நின்று விட்டது. பஸ்சில் இருந்த பயணிகள், கிருஷ்ணனை சூழ்ந்தனர். அதில் ஒருவர், 'என்ன வேன் இப்படி கிடக்கிறதே...' என்று பரபரப்போடு கேட்டார்.

அதற்கு கிருஷ்ணன், 'ஒண்ணுமில்லே... நடுவழியிலே, பழம் சாப்பிடணும்ன்னு நினைச்சோம்; அதான், காரை இப்படி சாச்சு வெச்சுட்டு பழம் சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்...' என்றார்.

விபத்து செய்தி கூட, கலைவாணருக்கு நகைச்சுவையை தந்தது. தமிழ் படங்களின் ஆரம்ப காலத்தில், சினிமா நகைச்சுவை என்றால், சர்க்கஸ் கோமாளியின் சேட்டையை போல் இருந்தது. அந்தக் காலத்தில், நாடகத்தில் நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள், சினிமாவிலும் அதே மேடை தமாஷையே, புகுத்தி வந்தனர்.

ஆனால், கலைவாணர், அவ்வாறு இல்லாமல் நகைச்சுவையோடு, உயர்ந்த கருத்துகளையும், தேவையான சீர்த்திருத்தங்களையும் படங்களில் இடம் பார்த்து, புகுத்தினார். மக்களும் அவற்றை ரசித்தனர்.

சினிமாவில், அவர் பேசிய வசனங்கள், வீண் போகவில்லை; அவை, மக்கள் மனதைத் தொட்டன. அதன் காரணமாக, படங்களில் அவர் சொன்ன சில வார்த்தைகள், மக்களிடையே பிரபலமாகியது.

கலைவாணரது நகைச்சுவைகள், தனிச் சிறப்பு பெற்றதற்கு, காரணங்கள் இருந்தன. படங்களுக்கு ஒப்பந்தம் ஆனவுடன், முன்பணம் பெற்று, நிம்மதியாக உறங்கச் சென்று விட மாட்டார்.

கதையை தெளிவாக கேட்டு, அதற்கேற்ப நகைச்சுவையை எப்படி அமைப்பது என்று சிந்தித்து, அதன்படி நகைச்சுவை வசனங்களை பேசுவார். இதனாலேயே, படத்தின் கதையும், நடிகர்களின் நடிப்பும், பாடாவதியாக இருந்தாலும், கிருஷ்ணன் - மதுரம், 'ஹாஸ்ய' காட்சிக்காக, அப்படத்தை பார்க்க, விரும்பி செல்வர், மக்கள். இது, வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத தனிச்சிறப்பு!

கலைவாணர் உண்மையான நகைச்சுவை கலைஞர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, அவரது தூக்கத்தை குறிப்பிட்டு, 'கலைவாணர் அயர்ந்து தூங்கும் போது கூட, அவரது உதட்டில் சிரிப்பிருக்கும்; பிறவி நகைச்சுவையாளரால் தான், அப்படி இருக்க முடியும்...' என்பார், அவருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய அவரது நண்பர், கவிஞர் சுப்பு ஆறுமுகம்.

அழுதால் கலைவாணருக்கு பிடிக்காது; சிரிக்காதவர்கள் தமக்கு பக்கத்தில் இருப்பதை, அவர், தண்டனையாகவே கருதினார்.

பிறரை, எப்படியாவது சிரிக்க வைத்து விடுவதில் கலைவாணர் வல்லவர் என்பதற்கு இந்த சம்பவமே சான்று...

முதன் முதலாக, சதி லீலாவதி படப்பிடிப்பின் போதுதான் கலைவாணரை சந்தித்தார், எம்.ஜி.ஆர்.,

பின் ஒரு நாள், எம்.வி.மணி, எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ஆர்., ஆகியோர், சீட்டாடியவாறு இருந்தனர். திடீரென அங்கு வந்தார், கிருஷ்ணன்.

ஏற்கனவே, அவரது நகைச்சுவையும், திறமைகளையும், நன்கு அறிந்திருந்த நடிகர் எம்.வி.மணி, எம்.ஜி., சகோதரர்களுக்கு அவரை பற்றி சொல்லியிருந்தார். அதனால், திடீரென்று தமக்கு பின் வந்து நின்ற என்.எஸ்.கே.,யை கண்டதும், ஆவலும், ஆச்சரியமும் மேலிட, அவரையே சற்று நேரம் பார்த்தார், எம்.ஜி.ஆர்.,

மற்றவர்கள், 'ராமச்சந்திரா... சீட்டைப் போடு, ஆட்டத்தை கவனி...' என்றனர். உடனே, கிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் கையிலிருந்து சீட்டு ஒன்றை பிடுங்கிப் போட்டார். எம்.ஜி.ஆர்., 'அதுவல்ல, துருப்பு...' என்று சொன்னதும், மற்றவர்களும் அதையே கூறினர்.

உடனே, எம்.ஜி.ஆரின் கையிலிருந்த மற்ற சீட்டுக்களை எல்லாம் வாங்கி கீழே விரித்து, 'இதில் எதைப் போடுவது... நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்...' என்று சொன்னார்; எல்லாரும் அதைக் கேட்டு சிரித்தனர். அவர்களில் சிரிக்காத ஒருவரும் இருந்தார்; அவர் தான், எம்.ஜி.சக்ரபாணி!

கலைவாணரின் கைகளைப் பார்த்தபடி, அவர் தம் பொடி மட்டையை எடுத்து, பொடியை உறிஞ்சினார். அதைக் கவனித்த கலைவாணர், 'அடடே... எனக்கு கூட்டாளி இங்கே இருக்கிறாரே...' என்று சொல்லி, சக்ரபாணியின் பொடி டப்பியை வாங்கி, சிறிது பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சிக் கொண்டவர், 'ஆகா... பொடி பிரமாதம்! நானும் வர்ற வழியில், பொடி வாங்கினேன். நெய்ப்பொடி என்று, பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தான். வாங்கி உறிஞ்சிப் பார்த்த பின் தான், உண்மை தெரிந்தது. அது மிளகாய்ப் பொடியில் செய்து வைத்திருக்கிறான்னு...' என்று சொல்லியவாறு, தம் மட்டையிலிருந்த பொடியை, கீழே கொட்டி, சக்ரபாணியின் பொடி மட்டையிலிருந்த பொடி முழுவதையும், தம் மட்டையில் நிரப்பி, இடுப்பில் செருகினார்.

அதைப்பார்த்த சக்ரபாணி, 'அண்ணே... என்கிட்ட வேறு பொடி இல்ல...' என்று அவதியோடு தெரிவித்தார்.

'வாப்பா வா... அப்படி வழிக்கு வா. நான், எவ்வளவோ பாடுபட்டு, காமெடி செய்தா எல்லாரும் சிரிக்கும் போது, நீ மட்டும், எதையோ பறி கொடுத்தவன் போல், 'உம்'மென்னு உட்கார்ந்திருக்கீயே... இப்போதும் அப்படியே உட்கார்; பொருத்தமாக இருக்கும்...' என்று சொல்லிச் சிரித்தார்.

அதைக் கேட்ட சக்ரபாணி சிரித்து விட்டார். அந்த இடத்திற்கு கலைவாணர் வந்து கால்மணி நேரங்கூட ஆகியிருக்காது. இதற்குள், அங்கிருந்த அனைவரையும், அவர் தம் வயப்படுத்தி விட்டார். அத்துடன், எதற்கும் சிரிக்காத, சிரிக்க வைக்க முடியாத, எம்.ஜி.சக்ரபாணியையும் சிரிக்க வைத்து விட்டார்.

கலைவாணருடைய ஆதரவு பெற்ற பலர், தற்போது பிரபல நட்சத்திரங்களாகவும், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை - வசன கர்த்தாக்களாகவும் ஆகியுள்ளனர்.

அவர்களில், கே.ஆர்.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம், பாண்டியன், டி.கே.ராமச்சந்திரன், காகா ராதாகிருஷ்ணன், துரைராஜ், டி.எஸ்.பாலையா,

வி.கே.ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், பத்மினி மற்றும் எம்.என்.ராஜம், இயக்குனர்களான பீம்சிங், கிருஷ்ணன் - பஞ்சு, பாடல்கள் எழுதும் உடுமலை நாராயணக்கவி மற்றும் சுப்பு ஆறுமுகம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கதைக்கேற்றபடி, நகைச்சுவைக் காட்சிகளை, கலைவாணர் தம் குழுவினருடன் கலந்து ஆலோசித்து செய்த படங்களில் குறிப்பிடத்தக்கது, சகுந்தலை. அதில், செம்படவர்களாக கிருஷ்ணனும், துரைராஜும் வந்து செய்த, காமெடி காட்சிகளை, யாரும் மறந்திருக்க மாட்டார்கள். துரைராஜ், கிருஷ்ணனிடம் அடி வாங்கியபடி, 'ஙொப்பன் மவனே, சிங்கண்டா... அடிப்பியோ...' என்று அழுது, வீராப்பு காட்டும் காட்சி பற்றி, பின்னாளில் துரைராஜ் குறிப்பிடுகையில், 'அன்று, கலைவாணரிடம் படத்திற்காக நான் வாங்கிய அடி, அதிர்ஷ்ட அடியாகப் போய் விட்டது; அதன்பின் தான், நான் புகழேணியில் ஏறினேன்...' என்றார்.

— தொடரும்.

நன்றி: வ.உ.சி., நூலகம் பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us