தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தென் ஆப்ரிக்க பயணக் கட்டுரை - ஆதி மனிதன் பிறந்த பூமி (2)

தென் ஆப்ரிக்க பயணக் கட்டுரை - ஆதி மனிதன் பிறந்த பூமி (2)

தென் ஆப்ரிக்க பயணக் கட்டுரை - ஆதி மனிதன் பிறந்த பூமி (2)


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலை, 11:30 மணி; மதிய உணவுக்காக, கேப்டவுனின் மத்திய பகுதியில் அமைந்திருந்த, உட்ஸ்டாக் என்ற இடத்தில் உள்ள, 'தி ஓல்ட் பிஸ்கட் மில்' என்ற மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றார், கைடு. அங்கு, பல தரப்பட்ட பொருட்களும் கிடைக்கும் என்றாலும், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பல நாட்டு உணவு வகைகள் கொண்ட கையேந்தி பவன்களே அதிகம் உள்ளன.

காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, வாரத்தில் ஆறு நாட்கள், இந்த மார்க்கெட் செயல்படும். ஞாயிறு விடுமுறை; தென் ஆப்ரிக்காவின் கரன்சி பெயர், ராண்ட். ஒரு ராண்ட், நம்மூர் ஐந்து ரூபாய்க்கு சமம்.

கேப்டவுன் நகரை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், இந்த மார்க்கெட்டுக்கு தவறாமல் வந்து, பசியாறி செல்கின்றனர்.

சாப்பிட்டு முடித்ததும், 'சைடு கார்' எனப்படும் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில், கேப்டவுனிலிருந்து, 15 கி.மீ., தொலைவில், தென் மேற்கு கோடியில், அட்லான்டிக் கடலை ஒட்டி அமைந்துள்ள, சாப்மேன் மலை முகடுக்கு பயணமானோம்.

'சைடு கார்' என்றால், 'பக்கத்தில் உள்ள கார்' என நினைக்க வேண்டாம். நம்மூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான, இரு சக்கர வாகனத்தில கூடுதலாக, ஒரு சீட் இணைக்கப்பட்டிருக்கும் அல்லவா... அதுபோன்ற வாகனம் தான், 'சைடு கார்!'

ஹெல்மெட் மற்றும் ஸ்வெட்டர் சகிதமாய், அதில் ஏறி அமர்ந்ததும், 'ஜிவ்'வெனப் பறந்தது, அந்த ஸ்கூட்டர். கிட்டத்தட்ட, 20 நிமிட பயணம்.

கடந்த, 1607ல் பிரிட்டனிலிருந்து, தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்த ஜான் சாப்மேன் என்ற மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் இது என்பதால் இதற்கு, 'சாப்மேன் மலை முகடு' என்று பெயர். இந்த மலைக்கு சரியான பாதை அமைத்து, சுற்றுலா மையமாக பராமரித்து வருகிறது, அந்நாட்டு அரசு.

பொதுவாக, தெரியாத ஊருக்கு, பழகாத நபர்களுடன் பயணப்படும் போது, நாக்கு வறண்டு, மேலண்ணத்துடன் ஒட்டும் அல்லவா... அது போன்ற, எந்த உணர்ச்சியும், இங்கு ஏற்படவில்லை. மாறாக, 'நம் நாட்டு மக்கள் அருகாமையில் தான் உள்ளோம்...' என்ற உணர்வே ஏற்பட்டது. குளிரை விரட்ட, டூர் ஆபரேட்டர்கள், உ.பா.,வும் கொண்டு வந்திருந்தது, என்னுடன் வந்திருந்தோருக்கு வசதியாக இருந்தது.

சாப்மேன் டிரைவ் முடிந்ததும், கேப்டவுன் வந்து, 'சதர்ன்சன் வாட்டர்பிரன்ட்' ஓட்டலில் இரவு தங்கினோம். அதற்கு முன்னதாக, இரவு, 'சைடு கார்' ஆபரேட் செய்யும் நிறுவனத்தினரின் ஓட்டலில், இரவு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தென் ஆப்ரிக்கர்களின் முக்கிய உணவு, பழுப்பு நிற மக்காச்சோள மாவுக் களி. பன்றி, மாடு, முதலை மற்றும் மான் என, ஏதாவது ஒன்றின் கறியில், மசாலா தடவி, சுட்டோ அல்லது பொறித்தோ, களியுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இவர்களது விருப்ப உணவு. அவற்றுடன் பிரெட் வகைகளையும் எடுத்து கொள்கின்றனர்.

சாப்பிடும் போது முதல் இரண்டு மடக்கு தண்ணீர் மட்டும் இலவசம். அடுத்தடுத்து தேவைப்பட்டால், 44 ராண்ட் கொடுத்தால் தான், அரை லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இங்கு, குளிர் பானங்கள் மற்றும் உ.பா., வகைகள், தண்ணீரின் விலையில், பாதி விலை தான்!

இரவு உணவின் போது, தென் ஆப்ரிக்க நாட்டுப்புற பாடல்களுக்கு, பெரும் உடுக்கை மற்றும் டிரம்ஸ் சத்தத்துடன் நடனமாடி மகிழ்வித்தனர், நாட்டுப்புற கலைஞர்கள். பெரிய உடல் கட்டமைப்புடைய பெண்கள், எவ்வித தயக்கமும் இன்றி, நடனம் ஆடியதைப் பார்க்க, பிரமிப்பாக இருந்தது.

இரவு சாப்பாடும், டிரம்ஸ் சத்தமும், ஆப்ரிக்கர்களின் ஆட்டமும், என் தூக்கத்தை துவம்சம் செய்ய, அடுத்த நாள் காலை எழுந்ததும், வயிற்றில் இருந்த அனைத்தும், வாஷ்பேசினை நிரப்பின. தலையில், உலக்கையால் யாரோ இடிப்பது போல் இருந்தது. 'இன்று நம்மால் அனைவருக்கும் புரோகிராம், 'அப்செட்' ஆகப் போகிறது...' என, மனம் கவலை கொண்டது. மெதுவாக, டூர் ஆபரேட்டரிடம் விஷயத்தைக் கூறிய போது, 'பர்ஸ்ட் எய்ட் கிட்'டில் இருந்து அவர் கொடுத்த, டிஸ்பிரின் மாத்திரையும், சக பத்திரிகையாளர் தந்த, ஹிஸ்டாக் மாத்திரையும் எடுத்து கொண்டதில் சற்றே சரியானது போல் உணர்ந்ததால், சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

வழியில், மறுபடியும், 'உவ்வே!' நான் மட்டும், வேனில் அமர, அனைவரும், அட்லான்டிக் கடலில் கப்பல் சவாரி சென்றனர்; சிறிது நேரத்தில் சரியாக, சுறுசுறுப்பாகி, விட்டேன். பின், போல்டர்ஸ் பீச்சில் உள்ள பென்குவின் பூங்காவுக்கு சென்றோம்.

இங்கு, உருவத்தில் சிறிய பென்குவின்களே உள்ளன; அன்டார்க்டிக்கா பகுதியில் உள்ளவை போன்ற பெரிய வகையை காண முடியவில்லை. 'ஆப்ரிக்கன் பென்குவின்' என்றழைக்கப்படும் இவை, 3 டிகிரி செல்ஷியசில் உயிர் வாழும் திறன் கொண்டவை. மற்ற இனங்கள், மைனஸ் டிகிரியிலும் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

அதன் பின், தென் ஆப்ரிக்காவின் அழகு மிக்க, டேபிள் மவுன்டெயினுக்கு, கேபிள் கார் வழியே சென்றோம்; பார்க்குமிடமெல்லாம் கொள்ளை அழகு!

திருட்டு பயம் மற்றும் கழிப்பறையில், தண்ணீருக்கு பதில், டிஷ்யூ பேப்பர் என்ற அருவருப்பை தாண்டி, இந்த அழகை ரசிக்கலாம். மலைகளின் மேலிருந்து கடலை பார்த்த போது, இயற்கையின் படைப்பு ஆச்சரியமளித்தது.

திருட்டு மற்றும் டிஷ்யூ பேப்பர் பற்றி, இங்கே சொல்லியாக வேண்டும்.

'ஆப்ரிக்கா போறியா... பர்ஸ், பணம், பாஸ்போர்ட் எதையும், பொட்டியிலயோ, 'சேப்ட்டி வால்ட்'ல வச்சிடாதே... கையிலேயே வச்சுக்க. திருட்டு ஜாஸ்தி; கையில இருக்கும் போதே, 'லபக்'குன்னு பிடுங்கிட்டு ஓடிடுவாங்க...' என, நிறைய பேர் அறிவுரை கூறினர். ஆனால், அது போன்ற ஆபத்து எதையும், சந்திக்கவில்லை.

கைடு மட்டும் ஒரு எச்சரிக்கை விடுத்தார்... 'பாரின் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது, அனைவரும், ஒரே குழுவாக சென்று, 'கரன்சி' மாற்றாதீர்கள்; அதைப் பார்த்து, யாராவது பின் தொடர்ந்து, 'ஹைஜாக்' செய்யக் கூடும்...' என்றார். அதனால், ஏர்போர்ட்டிலேயே, 'கரன்சி' மாற்றிக் கொண்டோம்.

கேப்டவுன் ஏர்போர்ட்டில் இறங்கியதுமே, கிட்டத்தட்ட எல்லாருமே இயற்கை உந்துதலால் உந்தப்பட்டு, 'வாஷ் ரூமை' தேடி ஓடினோம். அங்கே, 'எல்லாவற்றையும்' முடித்து, சுற்றி முற்றிப் பார்த்தால், குழாயையோ, 'பாசெட்' என்றழைக்கப் படும், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பைப்பையோ காணோம்; பக்கெட் கூட இல்லை; வெறும், 'டிஷ்யூ பேப்பர்' மட்டுமே இருந்தது. தலை சுற்றியது. வேறு வழி? டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி, வெளியில் வரும் போது, அந்துமணியின், வெளிநாட்டு பயணக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வர, 'அடுத்து இனி, ஒவ்வொரு முறை, 'வாஷ் ரூம்' போகும் போதும், தண்ணீர் பாட்டில் சகிதம், உள்ளே நுழைந்து விட வேண்டும்...' என தீர்மானித்தேன்; இதை, மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

அதனால், வாஷ் பேசினில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்ற ஐடியாவில் எல்லாரும், காலி தண்ணீர் பாட்டிலை, 'செக்யூர்' செய்து வைத்துக் கொண்டனர்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்...

பரந்து விரிந்த பரப்பை கொண்டுள்ளது, டேபிள் மவுன்டெயின். இப்பகுதி, வீடுகள் எதுவுமின்றி, சுற்றுலாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து, 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது, டேபிள் மவுன்டெயின். இங்கிருந்து பார்த்தால், கேப்டவுன் சிட்டியின் அழகை ரசிக்கலாம்.

— தொடரும்.

பி.பானுமதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us