PUBLISHED ON : நவ 12, 2023

நிஜானந்தர் என்ற மகான், கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டவர்.
அவர் எந்த கோவிலுக்குப் போனாலும், அங்கே தெய்வத்தை நேரில் கண்டு தரிசனம் பெறும் சக்தி பெற்றவர்.
ஒரு சமயம், பிருந்தாவனத்திற்குச் சென்றார், மகான். வழக்கம்போல் தியானத்தில் அமர்ந்தார்.
அப்போது அன்னை யசோதை அங்கு வந்தாள்.
அவளை வணங்கிய மகான், 'அம்மா, கண்ணன் எங்கே?' என, கேட்டார்.
'அவன், தன் நண்பர்களோடு, மாடு மேய்க்கப் போயிருக்கிறான்...' என்று கூறி, சில இனிப்பு பலகாரங்களை ஒரு துணியில் கட்டி, அதை மகானின் தோளில் மாட்டினாள், யசோதை.
'இதைக் கொண்டு போய், கண்ணனிடம் கொடுத்து, இருவரும் சந்தோஷமாகச் சாப்பிடுங்கள். இதுவே காலைச் சிற்றுண்டி...' என்றாள்.
யசோதை தந்த சிறு மூட்டையோடு காட்டிற்குப் போய், கண்ணனைக் கண்டார், மகான்.
யசோதை தந்த பலகார மூட்டையையும் தந்தார். இருவருமாகப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், சாப்பிடத் துவங்கினார், கண்ணன்.
சாப்பிடப் போகும் நேரத்தில், தியானம் கலைந்தது, மகானுக்கு.
'ஆகா... இவ்வளவும் தியானத்தில் தானா?' என்று, மனம் வருந்தினார்.
மடியில் ஏதோ கனமாக இருப்பதைப் போல் தெரிந்தது. பார்த்தால், ஒரு சிறு துணி மூட்டை. தியானத்தில், யசோதை தந்த அதே மூட்டை. பிரித்துப் பார்த்தால், யசோதை, கண்ணனுக்கு தந்த பலகாரங்கள் அனைத்தும் அதில் இருந்தன.
பக்தியின் விளைவு என்ன என்பதை விளக்கும் வரலாறு இது. நினைத்ததைத் தரும் தெய்வம்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
கற்கண்டு சாதம், தயிர் சாதம், கொண்டைக் கடலை, மஞ்சள், வாழைப்பழம், சர்க்கரை, தேங்காய், வெற்றிலை - பாக்கு ஆகியவை, குரு பகவானுக்கு பிடித்த நைவேத்தியங்கள்.
