PUBLISHED ON : நவ 12, 2023

அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது: 32. அரசு பணியில் உள்ளேன். கணவர் வயது: 36. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். நான் கல்லுாரியில் படிக்கும்போதே, என் அப்பா இறந்து விட்டார்.
அப்பா, கம்பெனி ஒன்றில் பணிபுரிந்ததால், பெரிதாக பண பலன் ஏதும் கிடைக்கவில்லை. நான் படித்து முடித்ததும், வேலை கிடைத்ததால், ஓரளவுக்கு குடும்பத்தை நிலை குலையாமல் காப்பாற்ற முடிந்தது. தம்பி, தங்கைகளை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பும் இருந்ததால், 'டிபார்ட்மென்ட்' தேர்வுகள் எழுதி, நல்ல பதவிக்கு வர முடிந்தது.
இச்சமயத்தில், பெண் சம்பாதிக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக, வரன் வர, திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினார், அம்மா.
மாப்பிள்ளை வீட்டினரிடம், ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தேன். அதாவது, 'திருமணத்துக்கு பின்னும், சம்பளத்திலிருந்து ஒரு தொகையை, என் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும்...' என்றேன். அப்போது, ஒப்புக் கொண்டவர்கள், திருமணத்துக்கு பின், அப்படியே மாறி விட்டனர்.
முதல் இரண்டு மாதம் மட்டும், சிறு தொகையை கொடுக்க அனுமதித்தனர். அதன்பின் மறுத்து விட்டனர்.
என் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து, தம்பி, தங்கைகளின் படிப்புக்கு கொடுத்து வந்தேன். அதையும், ஒரு கட்டத்தில் நிறுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.
திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒருமுறை கரு உண்டாகி, 'அபார்ஷன்' ஆகி விட்டது. அதன்பின் கர்ப்பமாகவில்லை. இதெல்லாம் சேர்ந்து எங்கள் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.
எந்த வருமானமும் இல்லாமல் தவிக்கும் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி, கணவரை பிரிந்து, அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். இப்போது, தங்கை படிப்பை முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளாள். தம்பி, படிப்பை முடிக்க இருக்கிறான். நான் இப்படி தனி மரமாகி விட்டேன் என்ற கவலை அம்மாவுக்கு.
இப்போது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால், ஓரிரு முறை போன் செய்த போதும், பேச மறுத்து விட்டார். மாமனார் - மாமியாருக்கு, என் மீது இன்னும் கோபம் தணியவில்லை என்று தெரிகிறது.
இனி, என் மீதி வாழ்நாளை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்று நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
திருமணத்திற்கு முன் தரப்படும் வாக்குறுதிகளில், 90 சதவீதத்தை, புகுந்த வீட்டார் காற்றோடு காற்றாக பறக்கவிட்டு விடுகின்றனர்.
நீ ஒன்று செய்திருக்கலாம். உன் சம்பளத்தில் மாதாமாதம் கழிக்கும் விதமாக பெரிய தொகையை கடனாக வாங்கி, பிறந்த வீட்டார் பெயரில், 'பிக்சட் டிபாசிட்' பண்ணியிருக்கலாம்.
மாதா மாதம் வரும் வட்டித்தொகையை வைத்து, பெற்றோரின் மருத்துவ செலவு, உடன் பிறந்தோரின் கல்விக் கட்டணங்களை சமாளித்திருக்கலாம்.
இனி நீ செய்ய வேண்டியது...
* கணவரின் வீட்டிலேயே இருந்து, உள்நாட்டு கலகம் ஆரம்பித்திருக்க வேண்டும். உன் சம்பள பணத்தில் ஒரு பகுதியை, கணவரையோ, மாமியார், மாமனாரையோ ஒரு வார்த்தை கேட்காமல் தொடர்ந்து துணிச்சலாக அனுப்பிக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.
* 'ஏதாவது வம்பு செய்தீர்கள் என்றால், வேலையை விட்டு நின்று விடுவேன். என் சம்பளத்தில் கணிசமான பகுதி உங்களுக்கு வராமல் நஷ்டமடைந்து விடுவீர்கள்...' என, மிரட்டி இருக்க வேண்டும். எதற்கும் அந்த பிரச்னையை விட்டு வெகுதுாரம் ஓடுதல் தீர்வல்ல. ஒரு தரம் ஓடுவதில் சுகம் கண்டுவிட்டால், வாழ்க்கை முழுக்க ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
* கருச்சிதைவுக்கான மருத்துவ காரணத்தை, மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய். மருத்துவக் காரணம், கணவரின் குடிப்பழக்கமாய் இருந்தால், நேரடியாக குற்றம் சாட்டு.
* கணவர் போனை எடுக்காவிட்டால், ஒரு பிரச்னையும் இல்லை. சொல்ல வேண்டிய தகவலை குறுஞ்செய்தியாக பதிவுத் தபாலில், வக்கீல் நோட்டீசாக அனுப்பு.
'என் தங்கை படித்து முடித்துவிட்டு வேலைக்கு போகிறாள். தம்பி படிப்பை முடிக்க இருக்கிறான். இனி, அவர்களுக்கு பணம் செலவு பண்ணும் தேவை இருக்காது. ஆனால், அம்மாவுக்கு என் சம்பளத்தில், 15 சதவீதத்தை தொடர்ந்து தந்தே தீருவேன்.
'கருச்சிதைவுக்கு எதிராக தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு, இறைவன் அருளால் கருவுறுவேன். நாமிருவரும், 'ஈகோ' மற்றும் பிடிவாதங்களை தலை முழுகி, ஒன்று சேருவோம். அதற்கு நான் தரும் அவகாசம், ஆறு மாதங்கள்.
'ஆறு மாதத்திற்குள் சமாதானத்துக்கு நீங்கள் ஒத்துவராவிட்டால், விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்வேன். யோசித்து பதில் கூறுங்கள்...' என, கணவருக்கு அனுப்பு.
குறையுள்ள கணவருடன் தொடர்ந்து வாழ நினைப்பது, காஸ்ட்லி நாய் வளர்த்து பாரமரிப்பது போன்றது. என்ன போஷாக்கு செய்தாலும், அது குரைக்கவோ அல்லது கடிக்கவோ செய்யும். வளர்ப்பு நாய் இல்லாமலும் வாழலாம் மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
