PUBLISHED ON : நவ 12, 2023

அறிவொளி எழுதிய, 'ஜவஹர்லால் நேரு' நுாலிலிருந்து:
ஒருமுறை, இந்திய பிரதமர் நேருவும், ரஷ்ய தலைவர் குருஷேவும் பேசிக் கொண்டிருந்த போது, 'உலகிலேயே வலிமை வாய்ந்தது ரஷ்யப் படை தான். இப்போது கூட, கியூபாவை பிடிக்க பெரிய கப்பற்படை போய்க் கொண்டிருக்கிறது...' என்றார், குருஷேவ்.
அதைக்கேட்ட நேரு, கலிங்கப் போரை பற்றியும், அதன் விளைவாக அசோகர் மனம் மாறிய விபரத்தையும் கூறினார். அவை குருஷேவின் மனதை மாற்றியது. உடனே, கியூபா செல்லும் கப்பற்படையை, ரஷ்யா திரும்ப உத்தரவிட்டார், குருஷேவ்.
பட்டாசு என்றால் சிவகாசி தான் எல்லாரது மனங்களிலும் பதிவாகியிருக்கிறது.
விவசாயம் பண்ணிய இந்த பூமியில், மழை வரத்துக் குறைந்து, வறண்ட பூமியானது. வேலை இல்லை; வருவாய் இல்லை.
அப்போது தான் சிவகாசியிலிருந்து, அய்ய நாடார், காக்கா சண்முக நாடார் என்ற அந்த இருவரும் கோல்கட்டாவுக்குப் போயினர். திரும்பி வந்த அவர்கள், சிவகாசியில், தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிலை முதன் முதலாக உருவாக்கினர்.
அவர்களால் தான் சிவகாசிக்குள் தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில் மற்றும் அச்சுத் தொழில் ஆகியவை அடியெடுத்து வைத்தன.
சிவகாசியில், 'நேஷனல் மேட்ச் ஒர்க்ஸ்' 1924ல் உருவானது. இன்றைய அய்யன் பட்டாசுகளின் முன்னோடியான, அய்ய நாடார் துவக்கியது. ஆரம்பத்தில், தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
படிப்படியாக, 'பெங்கால் மேட்சஸ்' எனப்படும், பல்வேறு நிறங்களில் எரியும், தீக்குச்சி வடிவிலான கலர் மத்தாப்புகள் தயாரிக்கப்பட்டன. 1930களில் கம்பி மத்தாப்பு, ஊசி பட்டாசு என தயாரிக்க ஆரம்பித்து, லட்சுமி வெடி என, சற்றே உயரம் காட்டத் துவங்கியது, பட்டாசு உற்பத்தி.
தீப்பெட்டிக்கென ஒரு வகை, 'லேபிள்' போதும். பட்டாசு அப்படியல்ல. பற்பல வடிவங்களில் பற்பல வண்ணங்களில் லேபிள்கள் தேவைப்பட்டன.
ஒவ்வொரு முறையும் லேபிள்களை அச்சடிக்க, மும்பை, கோல்கட்டா போக வேண்டியிருந்தது; செலவும் அதிகமானது. இந்த பிரச்னையை தீர்க்க, சிவகாசிக்குள் அச்சுத் தொழில் காலடி எடுத்து வைத்தது. அச்சுத்தொழிலில் தன்னிகரற்று, 1980 வரை சிவகாசி தான் இருந்துள்ளது.
கடந்த, 1962ல் சிவகாசிக்கு வருகை தந்தார், ஜவஹர்லால் நேரு.
அங்கிருந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து அசந்து, 'நான் சிவகாசிக்கு வரவில்லை. சோட்டா ஜப்பானுக்கு (குட்டி ஜப்பானுக்கு) வந்துள்ளேன்...' எனக் குறிப்பிட்டார்.
அந்தக் காலத்தில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு என, மூன்று வகைத் தொழில்களிலுமே மிகவும் உச்சத்தில் இருந்தது, சிவகாசி. ஜவஹர்லால் நேரு முதன் முதலாக, குட்டி ஜப்பான் என்று உச்சரித்த பிறகே, சிவகாசிக்கு, 'குட்டி ஜப்பான்' என்ற பெயர் நிலைத்தது.
சிவகாசியின் பட்டாசு வணிகம் மட்டும், ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய். ஆரம்பத்தில் காடா துணிப்பை மற்றும் கித்தான் சாக்குகளில் பட்டாசுகளை அடுக்கி, வெளியூர் வியாபாரத்துக்கு அனுப்பப்பட்டன.
இன்றைய நவீன உலகில், பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தங்கள் தயாரிப்புகளை கொட்டி விட்டுள்ளன. 'க்ளிக்' செய்து, எது எவ்வளவு வேண்டுமோ அதை, 'புக்' செய்து வாங்கிக் கொள்ளலாம்.
உலகம் முழுக்க சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- நடுத்தெரு நாராயணன்
