தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அதிர்வே அறியாத அம்மன்!

அதிர்வே அறியாத அம்மன்!

அதிர்வே அறியாத அம்மன்!


PUBLISHED ON : ஜூலை 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெல்ல மெல்ல நடந்து, அடிப்பிரதட்சண முறையில், அம்பாள் கோவிலை கடக்கின்றனர், கிராம மக்கள். கன்னிபுரி என்று அழைக்கப்பட்டு, தற்போது, குன்னியூர் ஆகிவிட்ட இந்த கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ளது.

ஒரு காலத்தில் விவசாயிகள், தங்கள் வயலை உழுத போது, சுயம்புவாக வெளிப்பட்டாள், அம்பிகை. அளவில் மிகச் சிறியதான இந்த அம்பாள், சாந்த முகத்துடன் காட்சி தந்ததால், இவளுக்கு, 'சீதளா பரமேஸ்வரி' என, பெயர் சூட்டி, ஓலைக் கொட்டகையில் பிரதிஷ்டை செய்தனர். சீதளம் என்றால் குளிர்ச்சி. குளிர்ந்த பார்வை உடையவளாக இவள் விளங்கினாள்.

இங்கு விஜயம் செய்து, அம்பாளை தரிசித்தார், காஞ்சி மகாபெரியவர்.

'இவள் காமாட்சியைப் போலவே இருக்கிறாள். கா என்றால் சரஸ்வதி, மா என்றால் மகாலட்சுமி. அக் ஷி என்றால் கண்கள். சரஸ்வதியையும், மகாலட்சுமியையும் கண்களாகக் கொண்ட இவளை, காமாட்சி என்றே அழைக்கலாமே...' என, ஊர் மக்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த அம்பாளை, காமாட்சி என்றே அழைத்தனர். காலப்போக்கில் இந்த கோவில், ராஜகோபுரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அம்பாளுக்கு உற்சவர் சிலை வடிக்கப்பட்டது. விநாயகர், முருகன், சாஸ்தா சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

இந்த ஊர் மக்கள், தங்கள் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தும்போது, 'பச்சை போடுதல்' எனும் சடங்கை நடத்துவர். அம்பாளின் உற்சவர் சிலையை வீட்டுக்கே கொண்டு வந்து, ஆறு மரக்கால் அரிசி, (உத்தேசமாக 38 கிலோ) தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் படைப்பர்.

காலப்போக்கில், வீட்டிற்கு சிலையை எடுத்து வரும் வழக்கம் நிறுத்தப்பட்டு, கோவிலுக்கு சென்றே இந்த சடங்கை செய்கின்றனர்.

'பள்ளயம் போடுதல்' என்ற சடங்கும் உண்டு. சுக்குமாந்தடி எனும், கதாயுதத்துக்கு பூஜை செய்வதை தான், இவ்வாறு கூறுகின்றனர். இந்த ஆயுதம், இங்குள்ள காத்தவராயன் சன்னிதியில் இருக்கும். இந்த சடங்குகள் மூலம், சுப நிகழ்ச்சி செய்வோர் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என, நம்புகின்றனர்.

தெய்வத்திற்கென, தனி மரியாதை உண்டு. இந்த கோவில் முன், நடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பூமி அதிராமல், மிக மிக மெதுவாக நடப்பர், ஊர் மக்கள். அடிப்பிரதட்சணம் செய்யும்போது, எப்படி நடப்போமோ, அதே மரியாதை இங்கு தரப்படுகிறது.

இந்த அம்மன், பூமியின் அடியிலிருந்து சுயம்புவாக வெளிப்பட்டதால், பூமாதேவிக்கு மரியாதை செய்யும் வகையில், இவ்வாறு செய்கின்றனர்.

மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில், 11 கி.மீ., துாரத்தில் உள்ளது, கம்மக்குடி. இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., சென்றால், குன்னியூரை அடையலாம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us