PUBLISHED ON : ஜூலை 02, 2023

சமீப காலமாக, ஐஸ் குளியல் பிரபலமாக பேசப்படுகிறது. இதற்கு காரணம், சினிமா நட்சத்திரங்களான, ரகுல்பிரீத்சிங், சமந்தா, வித்யுத் ஜாம்வால் மற்றும் ஹாலிவுட் நடிகை லேடிகாகா போன்ற பிரபலங்கள், ஐஸ் குளியல் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தான்.
ரகுல்பிரீத்சிங், 15 டிகிரி சென்டிகிரேடு குளிர்ந்த நீரில் குளியல் போட்ட படத்தை வெளியிட்டிருந்தார். அவருக்கு இதில் முன் அனுபவம் உண்டு.
சமந்தா, குளிர்ந்த நீர் தொட்டியில் இறங்கி மூழ்கி எழுந்தபின், 'சித்ரவதை' என, வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஐஸ் குளியலால் நன்மையா, தீமையா?
* டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, பரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளில், குளிர்காலத்தில், 20 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பநிலை இருக்கும். இதனால், இவர்களுக்கு ஐஸ் குளியல் பழகிய விஷயம்.
* டச்சு நாட்டு, விளையாட்டு வீரரான, விம்காட்புக் என்பவருக்கு, 'தி ஐஸ் மேன்' என்ற செல்ல பெயர் உண்டு. காரணம், கடும் குளிர் சூழலையும் எதிர்த்து நின்று சமாளிப்பவர். இவர் தான், ஐஸ் குளியலை அறிமுகப்படுத்தியவர்.
'ஐஸ் குளியல் செய்வதால், சதை பிடிப்பு மறையும். மன ஆரோக்கியம் கூடும். உடல் வலி குறையும். காயங்கள் ஆறும் மற்றும் துாக்கத்தை கூட்டும்...' என்கிறார், இந்த வீரர்.
தீமைகள் என்ன?
திடீரென ஐஸ் தண்ணீரில் இறங்கினால், உடலில் திடீர் வெப்ப குறைவு ஏற்படும். இதனால், நுரையீரல் வீக்கம், சீரற்ற இதயத்துடிப்பு உண்டாகும். ஏன், இறப்பு கூட நிகழலாம். அதனால், ஏற்கனவே உடல் பிரச்னைகள் உள்ளோர், ஐஸ் குளியல் பற்றி நினைத்துக் கூட பார்க்க கூடாது. பாடி பில்டர்கள், முயற்சிக்கவே கூடாது.
மருத்துவத்தில், 15 டிகிரி சென்டிகிரேடுக்கு கடும் குளிர் காற்றை உருவாக்கி, அதிகமாக வளர்ந்திருக்கும் திசுக்களை அழிப்பதுண்டு. அது மருத்துவ சிகிச்சையில் ஒரு வகை. ஆனால், இது, நிஜ ஐஸ் குளியல்.
தீமையை விலை கொடுத்து வாங்க வேண்டுமா!
- ராஜிராதா
