PUBLISHED ON : மார் 06, 2022

தன்னை அறியாமல் சிலர், பாவம் செய்திருப்பர். பாவம் எதுவாயினும், அதற்கு தண்டனை உண்டு. காரணமே இல்லாமல் அவர்கள், தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பர். எதையெடுத்தாலும் தடங்கல், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குதல், கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் பிரச்னை என, ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் கோவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, சிவந்திபுரம் கிராமத்தில் இருக்கிறது. இதை, பழைய பாபநாசம் பாபநாசநாதர் கோவில் என்பர்.
வட மாநிலத்தில் வசித்த ஒரு தம்பதி, தங்கள் ஊரில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சொத்தை இழந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என, இரு குழந்தைகள்.
பஞ்சம் பிழைக்க, வெளியூர் புறப்பட்ட அவர்கள், பிள்ளைகள் தங்களுடன் வந்து கஷ்டப்பட வேண்டாம் என நினைத்து, இருவரையும் தத்து கொடுத்து விட்டனர். அவர்கள் சென்ற பின், பஞ்சம் மேலும் அதிகரித்தது. தத்து பெற்ற குடும்பத்தினரும் வேறு ஊருக்கு சென்று விட்டனர்.
பல ஆண்டுகள் ஓடின. ஆண் குழந்தையை தத்தெடுத்த குடும்பத்தினர், தங்கள் மகனுக்கு பெண் பார்த்து திருமணமும் முடிந்து விட்டது. முதலிரவில் புதுமணத் தம்பதியர் பேசிக் கொண்டிருந்தனர்.
தான் அந்த குடும்பத்தின் தத்துப்பெண் என்றும், வடமாநில கிராமம் ஒன்றில்
இருந்து பஞ்சம் பிழைக்கச் சென்ற தன் பெற்றோர், அவர்களிடம் தன்னை ஒப்படைத்து சென்றதை கணவரிடம் தெரிவித்தாள்; மணமகன் அதிர்ச்சியடைந்தான்.
'இவளது பெற்றோர் தானே எனக்கும் பெற்றோர். இவள் என் தங்கையல்லவா? தங்கை என தெரியாமல், அவளுக்கு தாலி கட்டி விட்டேனே... அடக்கொடுமையே, இதற்கு பரிகாரம் உண்டா?' என்று மனம் கலங்கினான்.
அவளுக்கும் அதே நிலை. இருப்பினும் அக்னி சாட்சியாக கட்டிய தாலியைக் கழற்றுவது, அக்காலத்தில் முடியாதது. முனிவரை சந்தித்து ஆலோசனை கேட்டனர்.
'நீங்கள் இருவரும் கருப்பு உடையணிந்து தீர்த்தங்களில் நீராடுங்கள். எங்கு நீராடும்போது, இந்த உடை வெண்மையாகிறதோ அன்று, உங்கள் பாவங்கள் நீங்கி விட்டதாகப் பொருள். அந்த நதியின் அருகிலுள்ள சிவாலயத்தில் வழிபாடு செய்யுங்கள். பாவம் முழுமையாக தொலையும்...' என்றார்.
அவர்களும் பல தீர்த்தங்களில் நீராடினர். முதுமையும் அடைந்து விட்டனர். இதன் பிறகும் உடையின் நிறம் மாறவில்லை. கடைசி முயற்சியாக, தாமிரபரணியில் நீராடினர்; உடை வெள்ளையானது.
பழைய பாபநாசநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள உலகம்மனின் உக்ர பார்வையில், பாவம் முற்றிலும் நீங்கியது. அவள் மிக சக்தி மிக்கவளாக இருந்ததால், அம்பாளின் முன் நேராக நில்லாமல்,
கல் ஜன்னல் அமைத்து, அதன் வழியாக தரிசிக்க வேண்டும் என, அவ்வூர் மக்களிடம் கூறினர். அதன்படி கல் ஜன்னல் அமைக்கப்பட்டது. தற்போது, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது.
இது, இவ்வூர் அருகிலுள்ள பாபநாசத்துக்கும் முந்தைய கோவில் என்பதால், பழைய பாபநாசம் எனப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், 38 கி.மீ., இங்கிருந்து பாபநாசம் சாலையில், 5 கி.மீ., சென்றால், சிவந்திபுரம் பேருந்து நிறுத்தம். மேலும், தெற்கே, 2 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.
தி. செல்லப்பா
