தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளையாட்டு வினையானது!

வடமாநில திருமணங்களை போல், நம் ஊர் திருமணங்களிலும், பாட்டு, நடனம் என்ற பழக்கம் புகுந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாள், உறவினர்கள், ஜோடியாக அல்லது குழுவாக, சத்தமாக, குத்தாட்ட பாடல்களை ஒலிக்க வைத்து, அதற்கேற்ப வேகமாக சுழன்று ஆடி மகிழ்வது அதிகரித்துள்ளது.

இளம் வயது, நடுத்தர வயதினர் என்று ஆடுவதுடன், 60 - 70 வயதுள்ளவர்களையும் உசுப்பேற்றி ஆடச் செய்கின்றனர். வயதை குறைக்க, தலைக்கு சாயமிட்டு, மிடுக்குடன் இருப்பது போல் வருபவர்களையும், தங்கள் வேகத்துக்கு நடனம் ஆட வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர், தாமாகவே விரும்பி ஆட வருகின்றனர். இதில், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர்.

இதுபோல், என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு முதல் நாள் நடந்த, விழாவில் கலந்து கொண்ட மூத்த குடிமகன் ஒருவர், ஆடும்போது மயங்கி விழுந்து, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். கல்யாண வீட்டினரின் மகிழ்ச்சி காணாமல் போனது.

தயவுசெய்து, யார் எவ்வளவு வற்புறுத்தினாலும், தகுதிக்கு மீறி, வயதை மறந்து குதித்து ஆடி துன்பத்தை தேடிக் கொள்ள வேண்டாம். விளையாட்டு வேதனை ஆக வேண்டாமே!

— எஸ். வெண்மதி, சென்னை.

கவனம் மக்களே...

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. காரில் சென்று கொண்டிருந்தேன். வழியெங்கும் பெரிய பெரிய, 'பிளக்ஸ் பேனர்'கள். அதில் ஒன்று, பூப்புனித நீராட்டு விழாவுக்கானது. அலங்காரத்திலிருந்த பெண், வெவ்வேறு, 'போஸ்'களில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, 'பேனர்' அருகில் வந்தான், ஒருவன். அவன் கிறுக்கனா அல்லது போதை ஆசாமியா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் படத்தை தடவி, முத்தமிட்டதை பார்த்து அதிர்ந்து போனேன். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறோம். ஆனால், அந்தக் குழந்தையை இந்த காமுகனோ... 'பிளக்ஸ் பேனர்' வைப்பவர்களுக்கு இது தெரியுமா?

தம் வீட்டுக் குழந்தைகளைப் படம் பிடித்துத் தெருவில், 'பேனர்' ஆக வைப்போர், இதைப் படித்த பிறகாவது திருந்துவரா!

- ஜெயலட்சுமி அண்ணாமலை, துாத்துக்குடி.

கேட்டாரே... ஒரு கேள்வி!

ரயிலில் பயணம் செய்து கொண்டிருதேன். நான் இருந்த பெட்டியில், நிறைய இளைஞர்கள் பயணம் செய்தனர். அவர்கள், அரசியல், நாட்டு நடப்பு என, பலவற்றை பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில், பெண்களை பற்றி பேச துவங்கினர். அவர்களில் ஒருவன், 'எந்த பெண்ணும் நல்ல பெண் இல்லை. திருமணம் செய்யவே பயமாக இருக்கிறது...' என்றான். அவனின் அடாவடி பேச்சு, எனக்கு கோபத்தை வரவழைத்தது.

'பொத்தாம் பொதுவாய் அனைத்து பெண்களையும், இப்படி அநியாயமாக பேசுறானே... இவன் எல்லாம் உருப்படவே மாட்டான்...' என, மனதுக்குள் திட்டினேன். அப்போது, பெரியவர் ஒருவர், அந்த இளைஞனிடம், 'தம்பி, உன்னுடன் பிறந்தவர் மொத்தம் எத்தனை பேர்...' என, கேட்டார்.

'ரெண்டு பேர். தம்பி ஒண்ணு; தங்கை ஒண்ணு...' என்றான். 'பேசும்போது வார்த்தையை புரிந்து பேச வேண்டும். எந்த பெண்ணும் ஒழுங்கு இல்லை என பேசுனீயே... அதில் உன் தங்கையும் தானே...' என, கேட்டார்.

மறுகணமே,'கப் சிப்' ஆனான், அந்த இளைஞன். இனி, ஜென்மத்திற்கும், பெண்களை பற்றி இழிவாக பேச மாட்டான் என்பதை, பெரியவரின் கேள்வி மூலம் தெரிந்து கொண்டேன். அந்த முதியவருக்கு ஒரு, 'சபாஷ்' கூறி, இறங்கினேன்.

- எம்.புனிதா, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us