தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர் கூடித் தேர்... (14)

ஊர் கூடித் தேர்... (14)

ஊர் கூடித் தேர்... (14)


PUBLISHED ON : மார் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் ஜெய்சங்கருடன் எனக்கிருந்த நட்பில், மே 2000ல், குவைத்தின் சிவரஞ்சனி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டி, அவரை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன்.

'கடல் கடந்து சேவை செய்து வரும் தமிழர்களின், 'லிஸ்ட்' கொடுங்கள். அங்கு வரும்போது அவர்களை நான் கவுரவப்படுத்த வேண்டும்...' என்று கேட்டு, பரிசு பொருட்களும் வாங்கி வந்திருந்தார்.

ஆனால், என்ன கொடுமை... விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே, அவர் மயங்கி விழ, மருத்துவமனையில்,

ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப் பட்டார்; அவருக்கு நினைவு பிசகி, 'கோமா!'

நிகழ்ச்சி ரத்து என்பது ஒருபுறமிருக்க, அவரது உடல்நிலையை சரி செய்து, பத்திரமாய் எப்படி ஊருக்கு திருப்பி அனுப்புவது என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. நண்பர்கள், பி.என்.ராஜன் முதல் பலரும் அவரை கூட இருந்து கவனித்துக் கொண்டனர்.

ஒரு வார தீவிர சிகிச்சைக்கு பிறகும் கூட, நினைவு திரும்பாமல் போகவே, ஜெய்சங்கரின் மகனும், கண் மருத்துவருமான, விஜய்க்கு விசா அனுப்பி, அவரை வரவழைத்தோம்.

'எங்க அப்பாவை மேற்கொண்டு இங்கே வைத்திருக்க வேண்டாம். அனுமதி தாருங்கள், தனி விமானம் ஏற்பாடு செய்தாவது ஊருக்கு அழைத்து போகிறேன்...' என்று, டாக்டர்களிடம் மன்றாடினார், விஜய்.

அந்த சமயத்தில் ஒரு ஆச்சரியம். ஜெய்சங்கருக்கு திடீரென உணர்வு திரும்பிற்று. மெல்ல கண் திறந்து, அவர் பேச ஆரம்பித்ததுமே, 'நிகழ்ச்சி எப்போது...' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். கொஞ்சம் உடல் தேறியதும், அழைத்துச் செல்ல அனுமதியளித்தனர், டாக்டர்கள்.

'நிகழ்ச்சி வையுங்கள். எனக்காக இங்கே உதவினவர்களுக்கும், உழைத்தவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்...' என்று பிடிவாதம் பிடித்தார், ஜெய்சங்கர்.

அவரது திருப்தி, சந்தோஷத்திற்காக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய, பேரதிர்ச்சி. மறுபடியும், அவருக்கு நினைவு போயிற்று.

பிறகு, அனைவரது பிரார்த்தனையின் பலனாய் ஜெய்சங்கருக்கு நினைவு திரும்பவே, மறுநாளே அவரை பத்திரமாய் ஊருக்கு அனுப்ப முயற்சித்தோம்.

அத்தனை மோசமான உடல் நிலையிலும் கூட, அனாதை ஆசிரமத்திற்கு, குவைத்தில் நிதி திரட்ட வேண்டும் என்பது, அவரது விருப்பமாக இருந்தது.

ஆனால், அவரை சென்னைக்கு அனுப்பி வைத்த அடுத்த ஒரு மாதத்தில், ஜூன் 3, 2000ல், நட்புக்கு இலக்கணமான மனிதரை இழக்க வேண்டி வந்தது.

சில விழாக்களை திட்டமிட்டு இன்னாரை வைத்து தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து செய்வோம். சில தானே அமையும். அப்படி தன்னைத் தானே அமைந்தது தான், இயக்குனர் பாரதிராஜாவின் நிகழ்ச்சி.

நண்பர் கலைமாமணி யோகாவின் அறிமுகத்தில், அவர் எனக்கு மிக நெருக்கம். 2004ல், டில்லியிலிருந்து, இயக்குனர் பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு வந்தவுடனேயே அவரை அழைத்து வாழ்த்தி, 'இங்கு, உங்களுக்கு பாராட்டு விழா வைக்கணும். என்ன சொல்றீங்க...' என, தொடர்ந்து அவருக்கு யோசிக்க இடம் தராமல், 'எப்போன்னு சொல்லுங்க...' என்றேன்.

'என்ன அவசரம்... அறிவிப்பு தானே வந்திருக்கு. ஜனாதிபதிகிட்ட விருது வாங்கினப்புறம் வச்சுக்கலாமே...' என்றார்.

அப்புறம் அவருக்கு, ஏப்., 29, 2004ல், குவைத்தில் பாராட்டு விழா. அத்துடன், 'பிரன்ட்லைனர்ஸ்' 8ம் பாகம் வெளியீடு என, ஏற்பாடுகள் நடந்தன. அந்த நிகழ்வில், இயக்குனர் பாரதிராஜாவை வாழ்த்த, இயக்குனர் சேரன் மற்றும் நடிகை குஷ்பு வந்து சிறப்பித்தனர்.

அன்று, ஹாலில் இடமில்லாமல் வெளியே எக்கச்சக்க கூட்டம். சட்ட பிரச்னை வந்துவிட கூடாது என்று செக்யூரிட்டியுடன் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தது.

பாரதிராஜா ரொம்ப ஜோவியல். அவரிடம் கலாய்ப்புக்கும், அரட்டைக்கும் பஞ்சமிருக்காது. மற்றவர் போல், 'மிமிக்ரி' பண்ணுவார். வயதுக்கு மீறின சுறுசுறுப்பு; இளமையான சிந்திப்பு.

குவைத் நாட்டை சேர்ந்தவர்களின் பாரம்பரிய உடை பற்றிய பேச்சு வர, 'நானும் அதை அணிந்து பார்க்கணும்...' என்றார்.

உடனே ஏற்பாடு செய்ய, அசல், ஷேக் போலவே இருந்தார். அடுத்து, ஒட்டக பண்ணைக்கு போனபோது, அதனுடன் கொஞ்சி குலாவாத குறை.

'ஒட்டகம் மேல் ஏறி சவாரி செய்கிறீர்களா...' என்று சீண்ட, 'ஓ எஸ்...' என்று ஏறி அமர்ந்து கிளம்பி விட்டார்.

அவருடன் செலவிட்ட நாட்கள் எல்லாம் படு ஜாலி.

பாரதிராஜாவிடம், 'இந்த விழாவுக்காக மூன்று நாள் ஒதுக்கி வரப்போறீங்க... உங்களோட எதிர்பார்ப்பு என்ன...' என, நேராக கேட்டேன்.

'அட சண்டாளா! (இது, அவரோட, 'டிரேட் மார்க்' வார்த்தை) எனக்கு எதுவும் வேணாம். உங்க அமைப்பு மூலம் தொண்டுகள் எவ்வளவோ பண்ற... என்னையும் உங்க தொண்டுல சேர்த்துகிட்டா போதும். இந்த நிகழ்ச்சி மூலமாகவும் நல்லது செய்தீன்னா, அதுதான் எனக்கு திருப்தி...' என்றார்.

சென்னை அடையார், 'கேன்சர் இன்ஸ்டிடியூட்'டின் மறைந்த சாந்தா மேடத்துடன் தொடர்பு இருந்தது. அவர், பலரின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டிருக்கிறார். செய்திருக்கிறோம். சரி, இதையும்,'கேன்சர் இன்ஸ்டிடியூட்'டிற்கு வழங்க, பாரதிராஜா மற்றும் சேரனை அழைத்து போய், மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன் ஏற்பாடு செய்தார்.

பாரதிராஜா, சேரனுக்கு அதில் அத்தனை திருப்தி.

என்னதான் சேவைக்காக நிகழ்ச்சிகள் நடத்தினாலும், எல்லா நேரங்களிலும் இந்த திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைத்து விடுவதில்லை. கிடைத்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டி, சந்தர்ப்ப சூழல்கள் எங்களுக்கு எதிராக செயல்படுவதும் உண்டு.

அப்படி ஒரு வருத்தமான அனுபவம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மூலம் ஏற்பட்டது. அது...

— தொடரும்

என். சி. மோகன்தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us