PUBLISHED ON : பிப் 10, 2019

களத்துார் கண்ணம்மா படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டான், சிறுவன் கமலஹாசன். படத்தில், அனாதை ஆசிரமத்தில் வளரும் சிறுவன் கமலஹாசனை, அதன் நிர்வாகி, தள்ளி விடும் காட்சியைப் படமாக்கினர். அப்போது, குழந்தை என்றும் பாராமல், ஒரு ஜடப் பொருளை துாக்கி போடுவது போல, வேகமாக துாக்கி போட்டு விட்டார், இயக்குனர்.
வலி தாங்காமல் சிறுவன் அழ, 'ஷூட்டிங்' ரத்து ஆனது. பின், சிறுவன் கமலஹாசனை சமாதானப்படுத்தி, மறுநாள் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்து, நடிக்க வைத்தோம்.
அனாதை ஆசிரமத்தில், சிறுவன் கமல், மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து பாடுவது போல, ஒரு காட்சி அமைப்பு. அதற்காக...
'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே...' என்ற கடவுள் வாழ்த்து பாடல், என் மேற்பார்வையில், டி.கே.சுந்தரம் வாத்தியார் எழுதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடி, நான்கு நிமிடங்களுக்கு, 'ரிக்கார்டிங்' செய்யப்பட்டது.
இயக்குனருக்கு அது பிடிக்கவில்லை.'பெரிய நடிகர் - நடிகையர் நடிக்கும் இப்படத்தில், இதுவரை சினிமாவுக்கு அறிமுகமாகாத ஒரு சிறுவன், நான்கு நிமிடம் பாடினால் போர் அடிக்காதா... இந்த படத்தில், பாடல் ஒரு நிமிடம் இருந்தாலே பெரிய விஷயம். நான் ஒரு நிமிடத்திற்கே இந்த பாடலை படத்தில் வைக்கப் போகிறேன்...' என்று, நான்கு நிமிடம், 'ரிக்கார்டிங்' ஆன பாடலை, ஒரு நிமிடத்திற்கு, 'எடிட்' செய்தார்.
எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால், இயக்குனரிடம், 'சார்... பாடல் நன்றாக இருக்கிறது. இந்த பாடலை, அந்த பையன் பாடினால், அழகான அவனுடைய முகமும், நடிப்பும் நிச்சயமாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும். போரடிக்காது...' என்று மன்றாடி பார்த்தேன்.
இயக்குனர், நான் சொன்னதை கேட்கவில்லை; அவர் விருப்பப்படியே படம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். பாடல் காட்சி எடுக்கப்பட்டதும், அப்பாவுக்கு போட்டு காட்டினார்.
பாடல் ஒரு நிமிடத்திற்கு குறைக்கப் பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பா, இயக்குனரிடம், 'என்ன சார்... இப்படி செஞ்சுட்டீங்க... அந்த பையன் நன்றாக தானே நடித்திருக்கிறான். பாடல் காட்சியை நான்கு நிமிடத்திற்கே படம் பிடியுங்கள்...' என்றார்.
என்னிடம் கூறிய அதே காரணங்களை, அப்பாவிடமும் சொல்லி பிடிவாதம் பிடித்தார், இயக்குனர்.
'இல்லை... இல்லை... நான் சொன்னபடியே பாடல் காட்சியை எடுத்து முடிங்க...' என்று கண்டிப்புடன் கூறினார், அப்பா.
கருத்து வேறுபாட்டால், அப்பாவுக்கும், இயக்குனருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.
'சார்... நீங்கள், ஒரு பெரிய தயாரிப்பாளர். நானும், பிரபலமான பெரிய இயக்குனர். என் விருப்பப்படி தான், படம் எடுப்பேன். அவ்வப்போது நீங்கள் என்னிடம் சில மாற்றங்களை சொல்லி, அதன்படி இயக்க சொல்கிறீர்கள். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
'என் விருப்பப்படி தான் இயக்குவேன். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இப்போதே நான், இப்படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் போய், சரி செய்ய முடியாத அளவுக்கு ஆன பின், என்னை நீங்கள் விலக்கினால், எனக்கு அது பெரிய பாதிப்பை உண்டாக்கி விடும்.
'ஏனென்றால், இப்போது, புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த படம் முடியும் தருவாயில் கிரஹப்பிரவேசம் நடத்தலாம் என்று நினைக்கிறேன். அப்போது, என்னை நீங்கள் விலக்கும்படி நேர்ந்தால், அது அபசகுனமாக தெரியும்.
'புதிய வீடு குடி வந்த நேரம் சரியில்லை, ராசி இல்லாத வீடு இது என்று, நான் கட்டிய வீட்டின் மீதே எனக்கு தவறான எண்ணம் வந்து விடும். அப்படி ஒரு சூழ்நிலை வருவதற்கு முன், நானே விலகிக் கொள்கிறேன்...' என்றார், இயக்குனர்.
இயக்குனர் இப்படி சொன்னதை கேட்டதும், அப்பாவால் எதுவும் பேச முடியவில்லை.
இருந்தாலும், 'படப்பிடிப்பு முடியாத நிலையில், ஒரு இயக்குனரை எப்படி பாதியில் விலக்க முடியும்... படத்தை எப்படி முடிப்பது... நீங்கள் எடுத்த முடிவு சரியா, யோசித்து பாருங்கள்...' என்றார், அப்பா.
'வேண்டுமென்றால், நீங்கள் வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை முடித்துக் கொள்ளுங்கள். எனக்கு அது பற்றி ஆட்சேபனை இல்லை...' என்று கூறி, களத்துார் கண்ணம்மா படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார், டி.பிரகாஷ் ராவ்.
படத்தை முடிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த அப்பாவுக்கு, இயக்குனர் பீம்சிங்கின் நினைவு வந்தது.
படிக்காத மேதை படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, பண உதவி வேண்டி, என் அப்பாவுக்கு போட்டு காட்டினார், இயக்குனர் பீம்சிங். அந்த படம் அப்பாவுக்கு பிடித்து போகவே, அவருக்கு பண உதவி செய்து, அப்படத்தை முடிக்க, உறுதுணையாய் இருந்தார். அப்போதிருந்தே என் அப்பாவுக்கும், பீம்சிங்குக்கும் நல்ல நட்பு இருந்தது.
அந்த நட்பின் அடிப்படையில், பீம்சிங்கை அணுகிய அப்பா, 'களத்துார் கண்ணம்மா படத்தை, நீங்கள் தான் இயக்க வேண்டும்...' என்றார்.
'ஒருவர் இயக்கிய படத்தை, நான் எப்படி ஏற்றுக்கொள்வது... இயக்குனர், டி.பிரகாஷ் ராவ் என்னை பற்றி என்ன நினைப்பார்... எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விடுமே...' என்று தயங்கினார், பீம்சிங்.
'அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம்... இயக்குனர், பிரகாஷ் ராவ், 'இந்த படத்தை, யாரை வைத்து வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்...' என்று என்னிடம் சொல்லி, விலகிக் கொண்டார். அவரால் உங்களுக்கு எந்த சங்கடமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கூறி, பீம்சிங்கை, களத்துார் கண்ணம்மா படத்தை இயக்க, சம்மதிக்க வைத்தார், அப்பா.
அதுவரை எடுத்திருந்த, 6,000 அடி படத்தை பார்த்தார், கதையை கேட்டார். அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... பாட்டையும் கேட்டார், பீம்சிங். எல்லாமே அவருக்கு பிடித்திருந்தது.
'பாட்டு ரொம்ப பிரமாதமா இருக்கே... இதை ஏன் குறைக்க வேண்டும்...' என்று திரும்பவும், நான்கு நிமிடத்திற்கே பாடலை சேர்த்து, படம் பிடிக்க ஆரம்பித்தார், பீம்சிங்.
மென்மையாக வேலை வாங்குவதில் கெட்டிக்காரரான பீங்சிங்குடன், சிறுவன் கமலஹாசன் நன்றாக ஒட்டிக் கொண்டான். இன்று, கலைத்துறையில், கமல் பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், என்றுமே எங்களுக்கு, அவர் குழந்தை தான்.
களத்துார் கண்ணம்மா படப்பிடிப்பு நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, படத்தின் கதாசிரியர் ஜாவர் சீதாராமன், அப்பாவுக்கு போன் செய்து, 'முக்கிய விஷயமாக, உங்களை நான் சந்திக்க வேண்டும்...' என்று, கேட்டார்.
— தொடரும்.
ஏவி.எம்.குமரன்