
பிளாஸ்டிக் ஒழிப்பால் இவ்வளவு நன்மையா!
என் வீடு உட்பட, இன்னும் நான்கு வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து, நிற்க கூட நேரமின்றி ஓடும் பணிப்பெண், அன்று, தயங்கி தயங்கி நிற்க, 'பணமேதும் வேண்டுமா...' எனக் கேட்டேன். 'இல்லீங்கம்மா... ஐயாகிட்ட சொல்லி, பழைய பேப்பர்களை கொடுக்க சொல்லுங்கம்மா...' என்று, மென்று விழுங்கினாள்.
'என்ன சொல்றே... கொஞ்சம் விபரமா சொல்லு...' என்றேன்.
'படித்து முடித்த பழைய பேப்பரெல்லாம் இருக்குதுல்லம்மா... அதையெல்லாம் எனக்கு கொடுங்கம்மா. மளிகைக் கடைக்கார அண்ணாச்சியும், மருந்துக் கடைக்கார ஐயாவும் நடையாய் நடக்கிறாங்கம்மா. வீடுகளுக்கு வேலைக்கு வருவதற்கு முன், பேப்பர் கவர் ஒட்டி கொடுத்தேன்மா...
'அந்த பழக்கத்திலே, இப்போ மறுபடி வேணும்ன்னு சொல்றாங்கம்மா. இப்பத்தான் பிளாஸ்டிக்கெல்லாம் கூடாதுன்னு சொல்றாங்களே... அதனால, மாத்திரை தர, சின்ன சின்ன கவருங்க, அரிசி, பருப்பு, உப்பு, புளி கட்டித்தர, பேப்பர் கவருங்க தேவைபடுதாம்.
'பசை காய்ச்சி, ஒட்டி, கவரு செஞ்சு கொடுத்தா, பணம் கிடைக்கும்மா... கொஞ்சம் ஐயாகிட்ட கேட்டு கொடுங்கம்மா...' என்றாள்.
அவள் சொல்வதைக் கேட்டபடி வந்த என் கணவர், 'பேஷ் பேஷ்... இப்படியொரு குடிசைத் தொழிலா... உனக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கப் போறோம். வேண்டியதை எடுத்துப் போ...' என்றார்.
இப்படியொரு வழியை, ஏழைகளுக்கு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளதே... பிளாஸ்டிக்கை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால், இவ்வளவு நன்மை ஏற்படுகிறதே!
மகாலட்சுமி, சென்னை.
வெளியூர் செல்கிறீர்களா?
என் சகோதரி, விடுமுறைக்கு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். போகும்போது நகை, வெள்ளிப் பொருட்கள், வீட்டுப்பத்திரம், பணம் போன்றவற்றை, 'லாக்கரில்' வைத்தும், மடிக்கணினி உள்ளிட்டவற்றை உறவினர்களிடம் கொடுத்தும் சென்றார்.
எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி விட்டோமே என்று, வீட்டின் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வீட்டில் ஆள் இல்லை என்பதை, எப்படியோ கண்டுபிடித்த திருடர்கள், இரவில் பூட்டை உடைத்து நுழைந்து விட்டனர்.
விலை உயர்ந்த பொருள் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்து, பீரோவில் இருந்த இன்ஷூரன்ஸ் பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வரி ரசீதுகள் என, பல முக்கிய ஆவணங்களை கிழித்து, வீடு முழுவதும் போட்டு சென்றுள்ளனர்.
திரும்பி வந்த என் சகோதரியின் குடும்பம், அதிர்ச்சியில் உறைந்தது.
சமீபத்தில் கூட, ஒரு வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு, பணம், நகை எதுவும் கிடைக்கவில்லை என்று, நெருப்பு வைத்து விட்டு போனதை, நாளிதழில் படித்துள்ளோம்.
நம் வீட்டில் இருக்கும் அனைத்துமே முக்கியம். எனவே, வெளியூர் செல்லும் போது, அனைத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
ஜீ.ராமநாதன்,மேட்டுப்பாளையம்.
காதலர் தின கொண்டாட்டம் தேவையா?
பிப்., 14ம் தேதியை, உலகம் முழுவதும், 'காதலர் தின'மாக கொண்டாடுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் வரை, காதலர் தினம் என்றால், என்னவென்று தெரியாது. இன்று, அதற்கு இருக்கும் உலகளாவிய முக்கியத்துவமும், எதிர்பார்ப்பும், வேறு எந்த ஒரு கொண்டாட்டங்களுக்கும் இல்லை.
புதுப்புது, 'டிவி' சேனல்கள் வருகைக்கு பின்னரே, காதலர் தின கொண்டாட்டங்கள் தரம் தாழ்ந்து விட்டது. மது அருந்தி, ஆணும், பெண்ணும் கும்பலாக நெருக்கியடித்து உரசியும், ஒருவருக்கொருவர் முத்தமிட்டும், ஆடி மகிழ்வது தான் காதலுக்கு மரியாதையா!
காதலித்து கைவிடப்பட்ட எத்தனையோ அபலைப் பெண்களை பார்க்கிறோம். காதலித்து, கற்பை சூறையாடி குதுாகலிக்கும் எத்தனையோ கயவர்களை காண்கிறோம். ஏமாற்றப்பட்டு விட்டோம் என, கதறியழும் கன்னியர்களை கண்டிருக்கிறோம், மானம் போய் விட்டதே என்று, தற்கொலை செய்துகொள்ளும் அப்பாவிப் பெண்களை, அன்றாடம் கேள்விப்படுகிறோம். மகள் ஓடிப் போய் விட்டாளே என்று, உயிரை மாய்த்துக் கொள்ளும் பெற்றோரையும் பார்க்கிறோம்.
ஆணும், பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது மட்டுமே காதலாகாது. இரு உள்ளங்களுக்குள் இருக்க வேண்டிய காதலை, கேளிக்கை நடன விடுதியிலும், கடற்கரையிலும் கடை விரித்து கொண்டாடும் கலாசாரம் வேண்டாமே!
பி.அனுமந்த்ரா, சென்னை.