PUBLISHED ON : பிப் 10, 2019

சூரிய சித்தாந்தப்படி, கிரகங்களின் ஆயுளை கல்ப கணக்கில் குறிப்பிடுவர். ஒரு கல்பம் என்பது, 284 யுகங்கள், அதாவது, 429 கோடியே, 40 லட்சத்து, 80 ஆயிரம் ஆண்டுகள். இவ்வகையில், 142 யுகங்களாக, அதாவது, 215 கோடி ஆண்டுகள் வயதான, வரலாற்று சிறப்புடைய சூரியனுக்கும், தமிழகத்திலுள்ள ஒரு கோவிலுக்கும் சம்பந்தம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா!
தஞ்சாவூர் அருகிலுள்ளது, திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் கோவில். இந்த கோவில், மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பட்டது. ஆனால், மூலவரான, சூரியபகவான் பழமையானவர். இவரை கல்ப சூரியன் என்பர். இவரது கதையைப் படித்தால், அந்த பழமை தெரிய வரும்.
ஒரு பெண்ணை படைத்தார், பிரம்மா. அவளின் அழகில், தானே லயித்துப் போனார். இது, பார்வதிக்கு தெரிய வந்தது. படைத்த பெண், மகளுக்கு சமம். அவளைப் பார்த்து மோகித்தவனின் தலையைக் கொய்து விடும்படி, சிவனிடம் சிபாரிசு செய்தாள்.
சிவனும், பிரம்மாவின் தலையைக் கொய்து விட்டார். அதுவரை சிவனுக்கு ஈடாக ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா, நான்முகன் ஆகிவிட்டார்.
பிரம்மாவிடம், 'நீ, இவள் மீது ஆசைப்பட்டு விட்டதால், இவளையே திருமணம் செய்து கொள். இருவரும் பூலோகம் சென்று தவமிருந்து, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வாருங்கள். உனக்கு பாவ விமோசனம் கிடைக்கும்...' என்றார், சிவன். அந்த பெண்ணுக்கு, சரஸ்வதி என்று பெயர் சூட்டினார்.
பிரம்மாவும், சரஸ்வதியும் பூலோகம் வந்து, கெண்டியால் நீர் முகர்ந்து அபிஷேகம் செய்தனர். கெண்டியால் அபிஷேகம் செய்ததால், அவ்வூர் கெண்டியூர் எனப்பட்டு, பிற்காலத்தில் கண்டியூர் ஆக மாறியது.
சிவன், கண்டீஸ்வரர் எனவும், அம்பாளுக்கு மங்களாம்பிகை எனவும், பெயர் சூட்டப்பட்டது.
இங்கு, சரஸ்வதியையும், பிரம்மாவையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர் கோவில்கள், தமிழகத்தில் மிகக் குறைவு; அதிலும், அவர் நின்ற நிலையில் தான் இருப்பார். இங்கு மட்டுமே, அமர்ந்த நிலையிலுள்ள அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கலாம்.
இங்கு வசித்த சதாதப மகரிஷி என்பவர், தினமும் பிரதோஷ நேரமான, மாலை 4:30- முதல் 6:00 மணிக்கு, காளஹஸ்திக்கு, ஆகாய மார்க்கமாக சென்று, சிவனை வணங்கி வருவார். அவரை அங்கு செல்ல விடாமல் தடுக்க, சோதனையை ஏற்படுத்தினார், சிவன்.
ஒருநாள் கடும் மழை பெய்தது. மகரிஷியால் அங்கு செல்ல முடியவில்லை. எப்போது, காளஹஸ்தி செல்ல முடியாத நிலை வருகிறதோ, அன்று தன் உயிரை விடுவது என, முடிவு செய்திருந்தார், மகரிஷி.
அக்னி மூட்டி, தன் இஷ்ட தெய்வமான சூரிய பகவானை மனதில் நினைத்தார். சூரியன் அங்கே வந்து விட்டார். அவரும், மகரிஷியுடன் இணைந்து அக்னி பிரவேசம் செய்ய, குண்டத்தில் இறங்கினார். சூரியனின் வெப்பத்தின் முன், அக்னி குளிர்ந்து விட்டது.
அப்போது, சிவன் - பார்வதி அங்கு தோன்றி, அவர்களை ஆசிர்வதித்தனர். இருவரும் இணைந்து தங்களுடன் அதே தலத்தில் தங்கும்படி, சிவனிடம் வேண்டினர். சிவனும், பார்வதியும் அங்கேயே அமர்ந்தனர். இந்த வரலாற்றின் அடிப்படையில், பிற்கால மன்னர்கள் இவ்வூரில் கோவில் எழுப்பினர்.
இந்த சம்பவம், மாசி மாதத்தில் நடந்தது. இப்போதும், மாசி மாதம், 13, 14, 15 அதாவது, பிப்., 25, 26, 27 தேதிகளில், மாலை, 5:45 மணி முதல், 6:10 மணி வரை, சூரிய ஒளி, சிவலிங்கம் மீது விழுகிறது.
இந்த நாட்களில், கல்ப சூரியனை வழிபடுவது சிறப்பு. கல்ப சூரியனுக்கு தனி சன்னிதி உள்ளது. இவருடன் சதாதப முனிவர் உள்ளார். சூரியனுக்கு தனியாகவும் சிலை உள்ளது. வரும் பிப்., 12ல் நடக்கும், சூரிய திருவிழாவான ரத சப்தமி அன்றும், இவரை தரிசிக்கலாம்.
தஞ்சாவூர் - திருவையாறு சாலையில், 12 கி.மீ., துாரத்தில் கண்டியூர் உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.
தி.செல்லப்பா