
வாழ்க்கை படம், தமிழிலும், ஜீவிதம் என்ற பெயரில், தெலுங்கிலும், சக்கை போடு போட்டதால், அந்த படத்தை, இந்தியில் எடுப்பதற்காக, என் அப்பாவும் - அம்மாவும், ரயிலில் மும்பைக்கு புறப்பட்டனர். அக்காலத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்ல, ரயில் பயணம் தான் வசதி.
மும்பை செல்ல, இரண்டு இரவுகளும், ஒரு பகலும் ஆகும். ரயிலில், 'ஏசி' வகுப்பு இருக்காது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால், இரவு, 10:00 மணிக்கு, சென்னையிலிருந்து, 'ஏர் மெயில்' என்ற தபால் எடுத்து செல்வதில் புறப்பட்டால், நள்ளிரவு, 1:00 மணிக்கு, நாக்பூர் சென்றடையும்.
அங்கிருந்து, டில்லி, மும்பை, கோல்கட்டாவிலிருந்து வந்து போகும் விமானங்களுக்காக காத்திருந்து, மும்பை செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும். இரவு நேரத்தில், விமானம் விட்டு விமானம் மாறிச் செல்வது, அசவுகரியமாக இருக்கும் என்பதால், பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புவார், அப்பா.
மே மாதத்தில், இவர்கள் பயணம் அமைந்ததால், கடும் வெயிலில் சென்று கொண்டிருந்த ரயில், ஆந்திராவில் ஒரு ஜங்ஷனில் நின்றது. அப்போது, பகல், 11:00 மணி, நான்கு ஆட்கள், ரயில் பெட்டியில் ஒட்டியிருந்த பயணியர் விபரத்தில், பெயரை சரி பார்த்தனர். பின், அவர்களுக்குள் தெலுங்கில் ஏதோ பேசி, மடமடவென்று உள்ளே ஏறினர். அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து, பயந்து போயினர், அப்பாவும், அம்மாவும்.
வந்தவர்களிடம், 'பிலிம்' எடுத்து செல்ல உபயோகப்படும், இரண்டு பெரிய இரும்பு பெட்டிகள் இருந்தன. அதை, ரயில் பெட்டியின் உள்ளே வைத்து திறந்தனர். உள்ளே, சிறிதும், பெரிதுமாக ஐஸ் கட்டிகள் இருந்தன. அதன் மேல், ஐஸ் உருகாமல் இருக்க, மரத்துாள் துாவப்பட்டிருந்தது.
மின் விசிறியின் கீழ் ஐஸ் பெட்டி இருந்ததால், காற்று பட்டு, ரயில் பெட்டி எங்கும் 'ஜில்'லென்று குளுமை பரவத் துவங்கியது. அந்த குளுமை வெளியேறி விடாமலிருக்க, தெலுங்கில் பேசியபடி, ஜன்னல்களை மூடினர். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.
அப்பாவிடம், 'ஐயா... நீங்கள் தானே, ஏவி.எம்., அதிபர்...' என்று கேட்டனர்.
'ஆம்...' என்று தலையசைத்தார், அப்பா.
'நீங்கள், இந்த ரயிலில் மும்பை போகிறீர்கள் என்று, இப்போது தான் சென்னையிலிருந்து எங்களுக்கு போன் வந்தது. வெயில் அதிகமாக இருப்பதால், ரயில் வருவதற்கு முன், ஐஸ் பெட்டிகளை தயார் செய்து எடுத்து போகும்படி சொன்னார், எங்கள் முதலாளி...' என்றனர்.
ஆச்சரியத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல், அப்பாவும், அம்மாவும் அவர்களை பார்க்க, தொடர்ந்து அவர்களே பேசினர்...
'நீங்கள் தயாரித்த, ஜீவிதம் படம், எங்கள் தியேட்டரில், 'சூப்பர் ஹிட்' ஆக ஓடிக் கொண்டிருக்கிறதய்யா... அந்த சந்தோஷத்தில், ஒரு நன்றியாக, இந்த ஏற்பாட்டை செய்தார். இதை செய்ததில் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமய்யா...' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, விசிலடித்து, ரயில் கிளம்பியது. வந்தவர்கள், 'வரோம்ய்யா...' என்று அவசரமாக இறங்கிக் கொண்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத அப்பா, அவர்களுக்கு உதவலாம் என நினைத்து, எழுந்து, செல்வதற்குள், அவர்களை கடந்து சென்று கொண்டிருந்தது, ரயில். எதையுமே எதிர்பார்க்காமல் அவர்கள் வந்து ரயில் பெட்டியை குளிர்வித்த சந்தோஷத்தில், நன்றிப் பெருக்கோடு கையசைத்து விடை கொடுத்தார்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும், ஆந்திர மக்கள் காட்டிய அன்பிலிருந்து விடுபட, நீண்ட நேரமானது.
ஞான சவுந்தரி என்ற படத்தை, தயாரித்து, இயக்கி வெளியிட்டவர், சிட்டாடல் மூவிசின், ஜோசப் தளியத். இவர், விஜயபுரி வீரன் என்ற படத்தை தயாரித்து, வெளியிட்டிருந்தார். அந்த படம், மாபெரும் வெற்றி கண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அறிமுகமான முதல் படத்திலேயே,
சி.எல்.ஆனந்தன் புகழ்பெற்ற நடிகராகி விட்டார்.
அப்படத்தை பார்த்த நானும், என் சகோதரர்களும், இதைப் போல ஒரு படத்தை, நடிகர், சி.எல்.ஆனந்தனை வைத்து எடுக்கலாம் என, விரும்பினோம்.
அப்போது, எங்களை சந்தித்த நடிகர், எஸ்.ஏ.அசோகன், எங்கள் கருத்தை அறிந்து, 'ஏ.சி.திருலோகசந்தர் என்ற எழுத்தாளரை அழைத்து வருகிறேன்; அவரிடம் கதை கேட்டு பாருங்கள். அவர் தான், விஜயபுரி வீரன் படத்தின் எழுத்தாளர்...' என்றார்.
நடிகர் அசோகன், படத்தில் தான் வில்லனே தவிர, பழகுவதற்கு மிக இனிமையானவர்; பட்டதாரி, பண்பு மிகுந்தவர், எங்களுக்கு நெருங்கிய நண்பர்.
திருலோகசந்தரை அழைத்து வந்து, எங்களுக்கு அறிமுகம் செய்தார். அவரிடம், 'நடிகர் ஆனந்தனை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளோம்.
உங்களிடம், விஜயபுரி வீரன் போன்ற கதை இருந்தால் சொல்லுங்கள்...' என, கேட்டோம்.
'ஆங்கில படம் போன்ற கதை அமைப்புடன், கத்தி சண்டையெல்லாம் வைத்து, ஆனந்தனுக்காகவே ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். என்னை இயக்குனராக வைத்து, நீங்கள் படம் இயக்குவதென்றால், கதை சொல்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால், எனக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுங்கள்...' என்றார்.
அசோகனிடம் அவரை பற்றி கேட்டோம்.
'ஆர்.பத்மநாபன், வீணை எஸ்.பாலசந்தரிடமும், விஜயபுரி வீரன் படத்திலும், துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். வார பத்திரிகைகளில் சிறுகதைகளும் எழுதி இருக்கிறார்.
'சுறுசுறுப்பான இளைஞர்; அதோடு, எம்.ஏ., பட்டதாரியும் கூட. நீங்கள் விரும்புவது போல், ஆங்கில படம் போன்ற கதையை எடுத்துக் கொடுப்பார். தாராளமாக அவரை வைத்து படம் இயக்கலாம்...' என்றார், அசோகன்.
திருலோகசந்தரிடம் கதை கேட்டு, பிடித்திருந்ததால், அவரை இயக்குனராக அறிமுகப்படுத்த முடிவு செய்து, இவ்விபரத்தை அப்பாவிடம் தெரிவித்தோம்.
'என்னப்பா இது... ராஜா கதை, கத்தி சண்டை என்கிறீர்கள். எதற்கு இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க ஆசைப்படுகிறீர்கள்... அதிலும், நீங்கள் சினிமாவில் கற்க வேண்டியது நிறைய இருக்கு. அப்புறமா பார்த்துக்கலாம்...' என, மறுத்து விட்டார்.
நாங்கள் நேரடியாக படத் தயாரிப்பில் ஈடுபடுவதை, அப்பா விரும்பவில்லை என்பதை புரிந்து, வருத்தமடைந்தோம்.
இவ்விஷயத்தை, எங்கள் அம்மாவிடம் சொல்லி முறையிட்டோம். எங்களின் ஆர்வத்தை உணர்ந்த அம்மா, 'பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர். படம் எடுக்கட்டுமே... ஏன் வேண்டாம் என்று தடுக்கிறீர்கள்...
'அவர்களின் பட தயாரிப்பில் ஏதேனும் குறை கண்டால், அதை நீங்கள் சரி செய்யலாமே... உங்கள் மேற்பார்வையில் அவர்களை வழி நடத்துங்கள். இதை, நீங்கள் செய்யாமல் வேறு யார் செய்வது...' என்று, அப்பாவிடம் நயமாக எடுத்துரைத்தார்.
— தொடரும்
ஏவி.எம்.குமரன்