
கே
அன்று, ஆசிரியரை பார்க்க, அலுவலகத்துக்கு வந்திருந்த, 'திண்ணை' நாராயணன் சாரும், குப்பண்ணாவும், சமீபத்தில் வெளியான, 'நாயகன்' புத்தகத்தை பிரித்து வைத்தபடி, எதைப் பற்றியோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
'பிளாஸ்க்'கில் வாங்கி வந்த டீயை, சரியான பதத்தில் இருவருக்கும், கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். மற்றவர்களுக்கும் டீ மற்றும் காபி பரிமாறிய பின், குப்பண்ணா அருகில் அமர்ந்தேன்.
'அந்து... கில்லிப்பா நீ... என்னமா படா படா வேலையெல்லாம் செய்திருக்கே...' என்று, 'நாயகன்' புத்தகத்தை பற்றி சொல்ல, நடுவில் புகுந்தார், நாராயணன் சார்.
'மணி... உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்பா... 'நாயகன்' புத்தகம் படிக்கும்போது தான், அது ஞாபகத்துக்கு வந்தது...' என்றார்.
என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் ஆவலில், அவர் முகத்தையே பார்த்தேன்.
சொல்ல ஆரம்பித்தார்:
என் நண்பரின் சகோதரி, தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். அந்த சகோதரி, தன், 12வது வயது முதலே, 'வாரமலர்' இதழ் வாசகி; குறிப்பாக, நீ எழுதும், பா.கே.ப., மற்றும் கேள்வி - பதில் பகுதியின் தீவிர வாசகி.
அவருக்கு திருமணமாகி, அமெரிக்காவுக்கு சென்றபோதும், தன் சகோதரிக்காக, வாரா வாரம், 'வாரமலர்' இதழை, 18 ஆண்டுகளாக, அஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறார், சென்னையில் வசிக்கும், அவரது சகோதரர்.
தன் குடும்பத்தினரை சந்திக்க, 2018, டிசம்பர் மாதம், இந்தியா வந்திருந்தார், நண்பரின் சகோதரி. மீண்டும், டிச., 31, 2018 அன்று, அவர் அமெரிக்கா கிளம்ப வேண்டும். ஆனால், அவரது அபிமானத்துக்குரிய, அந்துமணியின், 'நாயகன்' புத்தகம், ஜன., 1, 2019, அன்று வெளியாவதை அறிந்து, தன் பயணத்தை ஒரு நாள், அதாவது, ஜன., 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
நாராயணன் சார் இதை சொல்லியதும், நான் இடைமறித்தேன்...
'ஜன., 1, 2019, மாலை, 5:00 மணிக்கு, புத்தக வெளியீட்டு விழா நடந்து முடிந்ததும், அவசரமாக என்னைத் தேடி வந்தார், 'வாரமலர்' இதழின் முதன்மை உதவி ஆசிரியை. அவரது கையில், 'நாயகன்' புத்தகம் இருந்தது.
'வாசகி ஒருவருக்காக, அதில், கையெழுத்து போட்டு தரும்படி கேட்டார். 'நாளை போடுகிறேன்...' என்றாலும், விடாப்பிடியாக கையெழுத்து வாங்கிச் சென்றார்.
'பின்னர் தான் தெரிந்தது, அந்த புத்தகம், இந்த சகோதரிக்கு கொடுத்தனுப்ப என்று! அந்த புத்தகத்துடன் தான், அமெரிக்கா சென்றுள்ளார்; அந்த சகோதரி பற்றி தானே சொல்கிறீர்கள்...' என்றேன், நான்.
'ஆமாம்பா... அவரே தான். உன் மீது இவ்வளவு அபிமானம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா... சொல்றேன், கேட்டுக்கோ...' என்று, கூற ஆரம்பித்தார்:
அந்த சகோதரியின் கணவர், அமெரிக்காவில், பிரபல நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருந்தார். கூடா நட்பால், பதவி மற்றும் பணம் யாவற்றையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து விட்டார்.
கணவரின் நிலைமையால், நிலைகுலைந்து போனார், நண்பரின் சகோதரி. எல்லாவற்றையும் இழந்து, ஊர் திரும்பினால், உற்றார், நண்பர்கள் கேலி செய்வரே என்று நினைத்து, அங்கேயே தங்கி விட்டார். அடுத்த ஆறு மாதத்திற்கு மட்டுமே சேமிப்பு பணம் கை கொடுக்கும் என்ற நிலையில், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி.
அச்சமயத்தில், இந்தியாவிலிருந்து, அந்த வாரம் வெளியான, 'வாரமலர்' இதழை, தன் சகோதரிக்கு அனுப்பியிருந்தார், நண்பர். இவருக்கு, தன் சகோதரியின் இக்கட்டான நிலை பற்றி அப்போது, எதுவும் தெரியாது.
வழக்கம் போல், கேள்வி - பதில் பகுதியை படித்துள்ளார் அந்த சகோதரி. அதில், ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, நீ எழுதிய பதிலை படித்த சகோதரியின் மனதில், ஒரு மின்னல். வழி தெரியாமல், இருட்டில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு, புதிய வழியை காட்டி இருக்கிறது.
கடந்த, 2001ம் ஆண்டில் வெளியான, அந்த கேள்வி - பதில் என்னவென்றால்...
கேள்வி: நான் படித்த பட்டதாரி. இரும்பு வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்தேன். வருமானம் குவிந்தது. ஆனால், கூடா நட்பால் எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறேன். இனி, நான் என்ன செய்ய?
பதில்: ஏன் இட்லி வியாபாரம் செய்யக் கூடாது!
— இதைப் படித்திருந்த அந்த சகோதரி, உடனே, செயலில் இறங்கி விட்டார்.
ஆரம்பத்தில், 20 இந்திய குடும்பங்களுக்கு மட்டும், இட்லி தயார் செய்து கொடுத்துள்ளார். இவரது தயாரிப்பு, அவர்களுக்கு பிடித்து போகவே, அவர்கள் மூலமாக இன்னும் பல குடும்பங்கள், இவரிடம் இட்லி தயார் செய்து தரும்படி கேட்டுள்ளன.
அதிலிருந்து இவருக்கு ஏறு முகம் தான். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெருகி விட்டனர். இந்திய வம்சாவளி குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அமெரிக்கர்களும், இவர் தயாரிக்கும், இட்லி - சாம்பார் - சட்னிக்கு, அடிமையாகி விட்டனர்.
வியாபாரம் சூடுபிடிக்க, இன்று, அமெரிக்காவில், குறிப்பிடத்தக்க பெண் தொழில் அதிபராக விளங்குகிறார். இப்போது, இவரது தலைமையின் கீழ், 50 அமெரிக்க இளைஞர்களும், பகுதி நேர பணியாளர்களாக, தமிழகத்தை சேர்ந்த, 100 இளைஞர்களும் பணிபுரிகின்றனர்.
இப்படி உன் எழுத்து, அந்த சகோதரிக்கு வழிகாட்டி, பல உயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, என்று முடித்தார், நாராயணன்.
ராமருக்கு, அணில் உதவியது போல், என் எழுத்து, அந்த சகோதரிக்கு நல்ல வழி காட்டியுள்ளதை நினைத்து சந்தோஷப்பட்டேன்.
ஆசிரியரிடமிருந்து அழைப்பு வரவே, நாராயணன் சாரும், குப்பண்ணாவும் அவரை சந்திக்க சென்றனர்.
அன்று, வந்திருந்த தபால்களை பிரிக்க ஆரம்பித்தேன், நான்.
ப
குமுதம் இதழில் பணிபுரிந்த எழுத்தாளர், ரா.கி.ரங்கராஜன் எழுதிய, 'நாலு மூலை' என்ற நுாலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதிலிருந்து:
போலீஸ் வேலைக்கு, ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக உள்ளே கூப்பிட்டு, அவருடைய பொது அறிவை சோதித்துக் கொண்டிருந்தார், அதிகாரி.
ஒருவனிடம், 'மகாத்மா காந்தியை கொலை செய்தவன் யார்?'
என்று கேட்டார்.
'தெரியாது...' என்றான், வந்தவன்.
கோபத்தை அடக்கியபடி அதிகாரி, 'போய் தெரிஞ்சுகிட்டு வா...' என்று, அவனை வெளியே அனுப்பினார்.
முகத்தில் ஆனந்தம் ததும்ப, அவன் வெளியே வந்ததும், அங்கிருந்தவர்கள், 'என்ன ஆச்சு?' என்று கேட்டனர்.
'வெற்றி... வேலை கிடைச்சுட்டுது... அது மட்டுமல்ல, வேலையில் சேர்ந்த முதல் நாளே, ஒரு கொலை கேசை கண்டுபிடிக்கும் பொறுப்பை, என்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர்...' என்றான், அவன்.
ஒரு போலீஸ் அதிகாரி, தன் கீழ் வேலை பார்க்கும் போலீஸ்காரருடன், ஜீப்பில் போய்க் கொண்டிருந்தார். வழியில், ஓரிடத்தில், ஏராளமாக கூட்டம் கூடியிருந்ததை கண்டதும், ஜீப்பிலிருந்து இறங்கி, 'கலைந்து போங்கள்...' என்று, கட்டளையிட்டார்.
யாரும் கலைந்து போகவில்லை.
'கலைந்து போகிறீர்களா, இல்லையா...' என்று, மறுபடி ஒரு பெரிய அதட்டல் போட்டு, கைத்தடியை சுழற்றினார்; கூட்டம் பரபரவென்று கலைந்தது.
ஜீப்பில் ஏறி, 'எப்படி, நான் போட்ட போடு...' என்று, பெருமையுடன் போலீஸ்காரரிடம் கேட்டார், அதிகாரி.
'பிரமாதம்... ஆனால், அந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப். அவர்கள் எல்லாம், பஸ்சுக்காக காத்து நின்றிருந்தவர்கள்...' என்று, பணிவுடன் தெரிவித்தார், போலீஸ்காரர்.
— காவல் துறையை சேர்ந்த சிலரது, 'கடமை' உணர்வுக்கு அளவேயில்லை என்று தோன்றியது.