தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குழந்தை சாஸ்தா!

குழந்தை சாஸ்தா!

குழந்தை சாஸ்தா!


PUBLISHED ON : ஏப் 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாஸ்தாவின் பிறந்த நாள், ஏப்., 6ம் தேதி, அதாவது, நாளை, பங்குனி உத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளன்று, அவரை, குழந்தை வடிவில் வழிபடுவது சிறப்பு. புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம் மெட்டு தர்மசாஸ்தா கோவிலில், இந்த குழந்தை சாஸ்தாவைத் தரிசிக்கலாம்.

சபரிமலை பாணியில், இந்தக் கோவில் கட்டப்பட்டது. மூலவரான குழந்தை சாஸ்தா, பஞ்சலோகத்தில், 1.5 அடி உயரத்தில் உள்ளார். குழந்தைகளுக்கு, வலது கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பது போல, யோக மச்சம் உள்ளது. இந்த மச்சத்தை, அபிஷேக காலங்களில் தரிசிக்கலாம்.

இவரை, 'மச்சக்கார அய்யப்பன்' என்றும் அழைக்கின்றனர். குழந்தை வடிவில் விளங்குவதால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இங்கு வழிபாடு செய்கின்றனர்.

சபரிமலையைப் போல மண்டல பூஜை நடத்தப்படும். சபரிமலை செல்லும் இப்பகுதி மக்கள், இங்கு வந்து மாலை அணிகின்றனர். மகர ஜோதி அன்று, இங்கும், கோவில் எதிரில் ஜோதி காட்டப்படுவது சிறப்பு.

திருமணத் தடையுள்ள பெண்கள், மாளிகைப் புறத்தம்மனுக்கு, மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து, சட்டைத் துணி அணிவிக்கின்றனர். சாஸ்தா எதிரில் உள்ள கல் தீபஸ்தம்பம், குருவாயூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. விழாக்காலங்களில் ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றுவர்.

நோய் தீர்க்கும் கடவுளான, தன்வந்திரி இங்கு உள்ளார். நாள்பட்ட நோய் குணமாக, இவருக்கு, புதன் கிழமைகளில் சந்தன தைலம் மற்றும் வெண்ணெய் சாத்துகின்றனர்.

உடல் உஷ்ண நோய் உள்ளோர், ஞாயிறு; மூளை நோய் உள்ளோர், திங்கள்; தோல் நோய் உள்ளோர், செவ்வாய்; நினைவாற்றல் சம்பந்தமாக, புதன்; வயிறு நோய்களுக்கு, வியாழன்; நரம்பு நோய்களுக்கு வெள்ளி; இடுப்பு நோய்களுக்கு, சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

கன்னிமூல கணபதி, பாலதண்டாயுதபாணி, பிரதோஷ சிவன், உற்சவர் அய்யப்பன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

மகா மண்டபத்தில், கருப்பண்ணசாமி உள்ளார். அய்யப்பன் சன்னிதி எதிரில், 18 படிகள் உள்ளன.

பிரகாரத்தில், காசி விஸ்வநாதர் உள்ளார். இந்த லிங்கம், காசியிலிருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சபரிமலை போல் அல்லாமல், இந்தக் கோவில், தினமும் காலை, 6:30 - 11:00 வரை, மாலை, 5:00 - இரவு, 7:30 மணி வரையும் திறந்திருக்கும்.

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், 30 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us